கவிஞர் கலி. பூங்குன்றன்
நாத்திகம் என்ற சொல் ஒன்றும் தவறானதல்ல. கடவுள் மறுப்பாளர்களை நாத்திகர்கள் என்று சொல்லுவது சரிதான். மதுரைத் தமிழ்ப் பேரகராதி கூட நாத்திகம் என்ற சொல்லுக்கு தெய்வமின்மை, நிரீஸ்வரம் என்றே பொருள் கூறுகிறது.
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (பக்கம் 626) என்ன கூறுகிறது?
நாத்திகம் Atheism: தெய்வம் அல்லது தெய்வ நம்பிக்கை போன்ற பொருண்மை சாராத வற்றைத் திறனாய்தல். கடவுள் உள்ளாரா என்று வினா எழுப்பி சடப்பொருட்களில் மட்டும் நம்பிக்கை கொள்ளும் உலகாயதம் போலல்லாமல் நாத்திகம் கடவுளை முற்றிலும் மறுக்கிறது. பல தத்துவ முறைகளில் இது வேரூன்றியுள்ளது. பண்டைய கிரேக்க தத்துவ ஞானிகளான டெமாகிரிட்டஸ், எபிக்யுரஸ் ஆகியோர் பொருண்மைத்துவம் குறித்துப் பேசுகையில் இதை ஆதரித்து வாதிட்டுள்ளனர். 18ஆம் நூற்றாண்டில் டேவிட் ஹ்யூம், இம்மானுவல் கான்ட் ஆகியோர் நாத்திகவாதிகளல்லர் எனினும், கடவுள் இருப்பதற்கான மரபு வழிச் சான்று களுக்கு எதிராக வாதிட்டனர். கடவுட்பற்றே நம்பிக்கைக்குக் காரணம் என்றனர். லுட்விக் ஃபாயர்பாக் போன்ற நாத்திகவாதிகள் கடவுள் என்பது மனித லட்சியங்களின் உருவகப் புனைவு என்றும், இந்தப் புனைவை அடையாளம் காண்பது தன்னை உணர்தலைச் சாத்திய மாக்குகிறது என்றும் கூறினர். மார்க்ஸியம் நவீன பொருண்மைத்துவத்தின் வடிவமாகத் திகழ்கிறது. ஃபிரடெரிக் நீட்ஷேயிலிருந்து தொடங்கிய இருத்தலியல் நாத்திகம், கடவுளின் மரணத்தைப் பிரகடனப்படுத்தி, மதிப்பையும் பொருளையும் நிர்மானிக்கும் மனித உரிமையை அறிவித்தது. தர்க்க நேர்காட்சி வாதம் (லாஜிகல் பாசிடிவிஸம்) கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற பிரச்சினையே முட்டாள்தனமானது அல்லது பொருளற்றது என்று கூறுகிறது. இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட சகாப்தத்தில் சார்வாகர் என்று அறியப்பட்ட ரிஷியின் சார்வாகக் கொள்கையும் நாத்திகம் சார்ந்ததே. பவுத்த மதத்தின் ஸ்தாபகரான புத்தர் கடவுளை ஏற்கவோ மறுக்கவோ இல்லை. எனவே பவுத்த மதம் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை வழிபடுவதில்லை. தமிழகத்தில் நாத்திக வாதத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி முக்கியமானவர் என்கிறது பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்.
இன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தில் நாத்திகத்திற்கு இடம் உண்டு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவர்கள், நாத்திகத்தை ஏன் வெறுக்க வேண்டும். சாருவாகனம் என்பதெல்லாம் நாத்திக வாதம் தானே.
இந்து மதத்தில் ஒரு வினோதம் என்னவென்றால் கடவுளை மறுப்பவர்கள் நாத்திகர்கள் அல்லர், மாறாக வேதத்தை மறுப்பவர்தான் நாத்திகர்.
மனுதர்மம் 2ஆம் அத்தியாயம் 11ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?
வேதம் (சுருதி), தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான். இத்தகைய நாஸ்திகன் வேதத்தை நிந்தித்ததால் தெய்வத்தை நிந்திக்கின்றவனாவான். நாத்திகத்துக்கு மனுதர்மம் கூறும் விளக்கம் இது.
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?
“நாஸ்திகம் என்றால் ஸ்வாமி யில்லை என்று சொல்கிற நிதீச்வர வாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக் கின்றோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்.’’
“அப்படிப்பட்ட பலபேர் இருந்திருக் கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்பது அர்த்தம்.’’
“வைதிக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞானசம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல’’ (‘தெய்வத்தின் குரல்’ இரண்டாம் தொகுதி, பக்கம் 407-408)
இப்பொழுது புரிகிறதா _ நாத்திகம் _ ஆத்திகம் என்பதற்கான விளக்கம்?
1971ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் ஜனசங்கத்தினர் தந்தை பெரியார் மீது செருப்பினை வீச, அந்தச் செருப்பினை இலாவகமாகப் பிடித்த கருஞ்சட்டைத் தோழர் மூடநம்பிக்கை ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ராமன் படத்தினை அந்த செருப்பைக்கொண்டு அடிக்க _ தேர்தல் நேரம் என்பதால் பார்ப்பனர்கள் குறிப்பாக ‘துக்ளக்’, ‘தினமணி’ போன்ற ஏடுகள் அதைப் பெரிதுபடுத்தியதோடு தேர்தல் பிரச்சாரமே இதனை மய்யப் புள்ளியாகக் கொண்டு சுழன்றது.
அப்பொழுது தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் திருக்குறள்போல இரண்டு வரிகளில் தம் கருத்தைப் பதிவு செய்தார்.
“இன்று ‘ஆஸ்திகம்’ என்பது உயர் ஜாதியினரின் நலம். இன்று ‘நாஸ்திகம்’ என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்.” உங்களுக்கு இதில் எது வேண்டும்? என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். (‘விடுதலை’ 19.2.1971 )
இராமனை தி.க.வினர் செருப்பாலடித்து விட்டனர்; அப்படிப்பட்ட தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று எதிரிகள் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் முடிவு என்ன தெரியுமா? இராமனை செருப்பாலடித்ததற்கு முன்பு 1967இல் தி.மு.க.வுக்கு கிடைத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 138, செருப்படிக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் தீவிரமாகப் எதிர்ப் பிரச்சாரம் செய்த நிலையில் தி.மு.க.வுக்குச் சட்டமன்றத்தில் கிடைத்த இடங்கள் 186.
அப்பொழுது ராஜாஜி கையொப்பமிட்டு ‘கல்கி’ இதழில் (4.4.1971) என்ன எழுதினார் தெரியுமா?
“இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. இந்த ராஜ்ஜியத்தை விட்டே வெளியேறிவிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர்’’ என்று எழுதினார். தமிழ்நாட்டில் தந்தை பெரியார் உறுதி செய்த நாத்திகம்
எத்தன்மையுடையது என்பதை இதன் மூலம் நன்கு அறியலாமே!
ஆன்மீக அரசியல் பேசுவோருக்கும் இது ‘காணிக்கை!’
இராமாயணத்தில் தசரதன் அமைச்சரவை யில்கூட ஜாபாலி என்ற நாத்திகர் இருந்தார். அவர் ஒரு பார்ப்பனர்.
“நாத்திக வாதமென்றால் ஜாபாலி சொன்னதுபோல் இருக்க வேண்டும். பவுத்த மதம், ஜைன மதம் நம்மிடம் நாத்திக வாதம் பேசி இருக்கிறது. புனர்வாதம், புத்திவாத மெல்லாம் பேசி இருக்கிறார்கள்’’ என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, மணியனின் ‘இதயம் பேசுகிறது’ இதழுக்கு (10.7.1988) அளித்த பேட்டியில் கூறியதுண்டே!
உண்மைகள் இவ்வாறு இருக்க நாத்திகம் என்றால் தவிர்க்கப்பட வேண்டிய பெருமையற்ற வார்த்தையல்ல _ எதிர்மறையான சொல்லாடலும் அல்ல. பகுத்தறிவை உள்ளடக்கிய தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய சிந்தனைக் கூர்மையுடைய கம்பீரமான பொருள் பொதிந்த சொல்லே.
எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ,
சமத்துவத்திற்கு இடமில்லையோ,
அங்கெல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கிறது.
- தந்தை பெரியார்,
‘குடிஅரசு’ 07.09.1930
- உண்மை இதழ், 1-15.2.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக