தமிழர் தலைவரின் முதன்மை உரையுடன் நடைபெற்றன
டொராண்டோ, செப்.26 - கனடா நாட்டு டொராண்டோ நகரில் நடைபெற்ற சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் 25.9.2022 அன்று காலை (கனடா நேரப்படி) 9 மணி அளவில் தொடங்கி சிறப்பாக நடந்தேறின.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை வரவேற்று அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொருளாளர் அருள்செல்வி வீரமணி உரையாற்றினார். முதல் நாள் நிகழ்ச்சிகளின் தொகுப்பினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் சுருக்கமாக எடுத்துரைத்தார். தொடக்க உரையாளரின் அறிமுகத்தினை பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் வழங்கினார்.
தமிழர் தலைவரின் முதன்மை உரை
இரண்டாம் நாளான நிறைவு நாள் நிகழ்ச்சிகளின் முதன்மை உரையினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார்கள். தமிழர் தலைவரின் உரைச்சுருக்கம்:
'மனிதநேயம்' தத்துவமாக உலகெங்கிலும் பரப்பப்பட வேண்டும். மனிதகுல இன்னல்களுக்கு தீர்வு மனிதநேயத்தை பேணிக் கடைப்பிடித்திட வேண்டும். உலகில் மனிதரின் பண்பாடு நாடுகளிடையே மாறுபட்டு நிலவுகிறது. அந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளும் பலவாறாக உள்ளன. மனிதருக்கு இன்னல்தரும் ஆதிக்க அடக்கு முறையாளர்களும் பலவாறாக உள்ளனர். அந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியான செயல்களும் பர தரப்பட்டவையாக உள்ளன. அவை அனைத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு ஒற்றுமை தேவைப்படுகிறது. அனைவருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும். அதற்கு அடிப்படை மனிதநேயம் காக்கப்பட வேண்டும்; மனிதநேய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
தமிழர் தலைவருக்கு 'மனிதநேய சாதனையாளர்' விருது சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டினை ஏற்பாடு செய்த அமைப்புகளுள் ஒன்றான கனடா (Humanist Canada) மனிதநேயர் அமைப்பு - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 'மனிதநேயர் சாதனையாளர்' விருதினை வழங்கியது. தமிழர் தலைவரின் மனிதநேய மற்றும் மனித உரிமைக்கான பங்களிப்பை (Life long Contribution) பாராட்டும் விதமாக 2022ஆம் ஆண்டுக்கான 'மனித நேயர் சாதனையாளர்' விருதினை வழங்கிடுவதாகக் குறிப்பிடும் பட்டயம் வழங்கப்பட்டது. விருதினை கனடா - மனிதநேயர் அமைப்பின் தலைவர் மார்டின் பிரித் வழங்கினார். விருதினை தமிழர் தலைவர் சார்பாக திராவிடர் கழகப் பொரு ளாளர் வீ. குமரேசன் நேரில் பெற்றுக் கொண்டார். உடன் மாநாட்டில் பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள் - தோழர்கள் இருந்தனர். மற்றும் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன், பொருளாளர் அருள்செல்வி பாலகுரு ஆகியோரும் உடனிருந்து விருதினை பெற்றுக் கொண்டனர். |
மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு தந்தை பெரியார் ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னர் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். மனித சுயமரியாதை உணரப்பட்டு, அதனைக் கடைப்பிடித்தால் சமூக அநீதிகள் களையப்பட்டு விடும்; சமூக அநீதி ஒழிக்கப்பட்டு விடும். இதன் அடிப்படையில்தான் தந்தை பெரியார் ஒரு மனிதநேயப் போராளியாக சமூகப் பணியாற்றினார்.
மனித சுயமரியாதை மறுக்கப்படும் வகையில் சில மனிதருக்கு பொதுப் பாதையில் நடக்கும் உரிமை மறுக்கப் பட்டது. கேரளா - வைக்கத்தில் இந்தக் கொடுமையை எதிர்த்து காங்கிரசில் தலைவராக இருந்த பெரியார், காந்தியாரிடம் கேட்டார்; "நாய், பன்றிகள் பாதையில் நடக்கலாம்; மனிதர்கள் நடக்கக் கூடாதா?" என உரிமைக் குரல் எழுப்பினார். இருப்பினும் காந்தியார் பெரியாரை காங்கிரசுக்காரராக வைக்கத்திற்குச் சென்று போராட அனுமதிக்கவில்லை. கட்சிக்கு அப்பாற்பட்டு போராடி சிறைவாசம் சென்று அனைத்து மக்களுக்கும் பொதுப் பாதையில் நடந்து செல்லும் உரிமையினை பெரியார் பெற்றுத் தந்தார். தலைமை வழிபாட்டையும், அதிகாரப் பதவியையும் என்றுமே பெரியார் விரும்பியதுமில்லை; நாடிச் சென்றதுமில்லை.
ஜாதிக் கட்டமைப்பை வெளி நாட்டவர் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. ஜாதி முறையை ஒழித்து சமத்துவத்திற்குப் போராடியவர் தந்தை பெரியார். நமது உரிமைகளுக்காக நாமும் போராட முன்வர வேண்டும்; வெற்றி பெற வேண்டும். சமூகநீதிப் பயணத் திட்டத்தைஉருவாக்கி செயல்படுத்த வேண்டும். இது ஆயுதப் போராட்டமல்ல; களத்தில் சந்திக்க வேண்டிய போர் அல்ல இது; மனித மனங்களில் நடைபெற வேண்டிய போர்; கருத்துப் பரப்பலின் மூலம்தான் உண்மையான மாற்றத்தினை மக்களிடையே ஏற்படுத்திட வேண்டும்.
மனிதநேயம் என்பது ஆராய்ச்சிகள் மூலம் நடந்து விட்டது. மக்களிடம் சென்று நடைமுறை மனிதநேயம் கடைப்பிடிக்க ஆவன செய்திட வேண்டும்.
இன்னல்படும் மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் - தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தால் திராவிட மாடல் - மக்களுக்கு உரிமையுடன் பலன் பெறும் ஆட்சி முறைகள் ஏற்பட்டுள்ளன. சமூக நீதிக்கான போராட்டம் என்பது எதிர்நீச்சல் போன்றது. அவதிப்படுபவர் நிலையி லிருந்து சமூக அநீதி உணரப்பட வேண்டும். வன்முறை அற்ற அணுகுமுறையின் மூலம் சமூகநீதி கிடைக்கப் பெற வேண்டும். உலகம் கருவியால் வென்றெடுக்கப்படக் கூடாது; கருத்தால் வெல்லப்பட வேண்டும்.
சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து அய்ந்தாம் தலை முறையாக வெற்றிகரமாக மக்கள் பணி ஆற்றி வருகிறது.
அவதிப்படுவது வெளியே கேட்காமல் இருக்கும் மனிதர் களை தேடிப் பிடித்து உரிமை கிடைக்கச் செய்ய வேண்டும். சமுதாயத்திற்கு நாம் பல வகையிலும் கடமை ஆற்றிட வேண்டும்.
அரசியலும், சமூகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு மனிதநேயராக ஆட்சி செய்து வருகிறார். சுயமரியாதை இயக்கம், மக்கள் கருத்தை திரட்டி, ஆட்சியாளர் ஆவன செய்திடும் நிலையினை உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில், சுயமரியாதை இயக்கப் பணிகளை நேரில் பார்த்திட மனிதநேய அமைப்பின் தலைவர்களை வருக வருக என அழைக்கிறேன்.
இந்த அணுகுமுறை உலகெங்கும் பரவிட வேண்டும். நாடுகள் பலவகையாக இருந்தாலும் மனிதநேயம் நம்மை இணைத்து செயல்படுத்திடும் - வேற்றுமையில் ஒற்றுமை காண்போம். மனிதநேயம் காத்திட வழி அமைப்போம்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது முதன்மை உரையில் குறிப்பிட்டார்.
தேநீர் இடைவெளிக்குப் பின்னர் உரை வீச்சுகள் தொடங்கின.
தாமஸ் ஹிடோஷி புரூக்ஸ்மா எனும் அமெரிக்க - சியாட்டல் வாழ் மதுரையில் தமிழ் கற்ற அறிஞர் 'திருக்குறளும் சமூகநீதியும்' என்ற தலைப்பில் உரை ஆற்றினர். அனைவருக்கும் பொது என்னும் கருத்து திருக்குறளில் உள்ளது குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.
அடுத்து, பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் சங்க கால இலக்கியங்களில் சமூகநீதி, பாலியல் நீதி நிலவியதை இலக்கியக் குறிப்புகளுடன் விளக்கி, தமிழர் வரலாற்றின் உயரிய நிலையினை குறித்து ஓர் ஆய்வுரையினை வழங்கினார்.
கனடா நாட்டு ஆய்வு விசாரணை அமைப்பினைச் சார்ந்த லெஸ்லி ரோசன் பிளட் மகளிரிடமும், குழந்தைகளிடமும் பேணப்பட வேண்டிய மனிதநேயம் பற்றி உரையாற்றினார்.
அடுத்து டொராண்டோ பல்கலைக் கழக பேராசிரியர் மறைதிரு. சந்திரகாந்தன், கனடா நாட்டில் குடியேறியவர்களின் (ஈழத் தமிழர்களின்) இன்னல்களுக்கான தீர்வு, பற்றி உரையாற்றினார்.
மனிதநேயத்தின் வழி தட்பவெப்ப நிலை மாற்றத்தினை மட்டுப்படுத்துவதுபற்றி பேராசிரியர் அரசு செல்லையா உரையாற்றினார்.
சிறீலங்காவில் "மனிதநேயமும் சமூகநீதியும்" எனும் தலைப்பில் சிறீகதிர்காமநாதன் அரிய பல செய்திகளை எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டின் திராவிட சிந்தனையாளர் மய்யத்தின் புகழ் காந்தி, இன்றைய இளைஞர்களை மதச்சார்பின்மை கருத்தின்பால் ஈர்த்திடும் வழிமுறைகள் பற்றி உரையாற்றினார். திராவிட சிந்தனைகள், வரலாறு, பாடக் குறிப்புகளில் இடம் பெறுவதன் அவசியத்தையும், வேண்டாத பாடக் குறிப்புகளை நீக்கிட வேண்டுவது குறித்தும் பேசினார்.
பிற்பகல் அமர்வுகள்
நண்பகல் உணவிற்குப் பின் முதல் நிகழ்வாக 'திராவிட இளைஞர்களின் நகைச்சுவை' எனும் அமர்வில் இளங்கதிர் இளமாறன் மற்றும் நிகில் முனியப்பன் நிகழ்ச்சியினை வழங்கினர். தந்தை பெரியார் பற்றிய குறிப்புகளை இயல்பான நகைச்சுவை இழையுடன் வழங்கினர்.
அடுத்து இன்றைய 'இளைஞர்கள் சமூகநீதி- பெரியார் ஓர் உத்வேகம்" எனும் தலைப்பின் திராவிடர் கழக மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார்.
தேநீர் இடைவேளைக்குப்பின் அவைகள் இரண்டாக நடைபெற்றன.
கனடா நாடாளுமன்ற உறுப்பினரும், மாநாடு நடைபெற ஆவன செய்திட்ட ஈழத் தமிழருமான கேரி ஆனந்த சங்கரி மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றினார். வருங்காலத்திலும் மனிதநேயர் சமூகநீதிக்கான பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிடுவதாகவும் உறுதியளித்தார்.
ஆங்கிலத்தில் மாணவர் கலந்துரையாடலை, கனடா - ஆய்வு விசாரணை மய்யம், மனிதநேயர்களான டொராண்டோ மனிதநேய சங்கத்தினர் நடத்தினர்.
தமிழில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்ற பெரும்பாலானவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சென்ற பேராளர்கள் பேசினர். தங்களது பெரியார் இயக்க தொடர்பு, ஏற்பட்ட விதம் பற்றியும் வருங்காலத்தில் செய்யப்பட வேண்டிய பணிகள் பற்றியும் ஒவ்வொருவரும் சுருக்கமாகப் பேசினர்.
இறுதியாக நிகழ்ச்சியினை தொகுத்து, நிறைவுரையினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் ஆற்றினார்.
சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் மனிதநேயர் மாநாட்டின் இரண்டு நாள் நிகழ்வுகளும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றன.
செய்தித் தொகுப்பு: வீ. குமரேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக