பகுத்தறிவாளர் கழகத்திற்குப் புதிய பொறுப்பாளர்கள் - புதிய திட்டங்கள் - மதவெறி - ஜாதிவெறி - சமூக அநீதி - பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விஷ முறிவு பகுத்தறிவுப் பிரச்சாரமே!
பகுத்தறிவாளர் கழகப் புரவலர் விடுத்துள்ள அறிக்கை
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றத்திற்குப் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் தலைதூக்கும் மதவாதம், ஜாதீய வாதம் உள்ளிட்ட நோய்களுக்கு எதிரான விஷ முறிவு பகுத்தறிவே! பகுத்தறிவுப் பேரொளி எங்கும் வேகமாகப் பரவட்டும் என்று பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நேற்று (21.11.2021) மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் கலந்துரையாடலும், புதிய பொறுப்பாளர்கள் தேர்வும், 2022 ஆம் ஆண்டு வேலைத் திட்ட ஆயத்தத்திற்காகவும், சென்னை பெரியார் திடலில் மிகவும் சிறப்பாக, அனைவரும் மகிழத்தக்க அளவில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக முந்தைய பொறுப்பாளர்களுக்குப் பாராட்டு - வாழ்த்து!
கடந்த சில ஆண்டுகளாகப் பொறுப்பேற்று பணி செய்த பொறுப்பாளர்களின் பணி பாராட்டத்தக்கதாக இருந்தது என்றாலும், புதியவர்களுக்கும் பொறுப்புப் பயிற்சி அளிக்கவேண்டும் என்பதாலேயே, நாடு தழு விய அளவில் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டும் - நியமிக்கப்பட்டும் பொறுப்பேற்றனர்.
அனைவருக்கும் வாழ்த்துகள்!
பகுத்தறிவாளர் கழகம் 1970 இல் தந்தை பெரியார் அவர்களால் சென்னையில் தொடங்கப் பெற்று, 51 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் - பொன்விழா நிறைவு காலத்தில், நிறைவான பணிகள் நிரம்பத் தேவையிருக்கின்றன.
மதவெறி, ஜாதி வெறி, சமூக அநீதி, மகளிருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தலைதூக்கி கோரத்தாண்டவம் ஆடும் நிலையில், அதற்கு சரியான விஷ முறிவு மருந்து பகுத்தறிவுப் பிரச்சாரமே ஆகும்!
பனி படர்ந்தாலும், சறுக்கு விளையாட்டுக்கு அதைப் பயன்படுத்தி மகிழுவதுபோல, எந்த சூழலையும் ஆக்கப் பூர்வமாகவே அணுகும் அறிவுத் திறனும், ஆளுமைத் திட்பமும் நமது தோழர்களுக்கு உண்டு என்பதால், எதிர்ப்புகள் எப்போதும் நம் வயலுக்கான உரங்களாகவே ஆகி, விளைச்சல் பன்மடங்கு கிட்டுவது உறுதி.
(விரிவான நடவடிக்கைகள்பற்றி தனியே செய்தி களைக் காண்க).
2022 ஆம் ஆண்டுக்கான புதிய திட்டங்கள்!
2022 தொடங்குமுன்னரே, நமது பகுத்தறிவாளர் பணி - பருவம் பாராது - திசையெட்டும் பரந்துபட்ட நிலையில், விரைந்து நடைபெற வேகமான திட்டங்கள் தீட்டப் பட்டன நேற்று!
2021 டிசம்பர் 10 தொடங்கி, டிசம்பர் 21 ஆம் தேதிவரை (10 நாள்கள்) பெரியார் பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை வகுப்புகள் நாள்தோறும் மாலை 6 மணிமுதல் 7 மணிவரை கீழ்க்காணும் தலைப்புகளில் வகுப்புகள் - புதிய பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்படும்.
பதிவு செய்துகொள்ளவேண்டும் - கட்டணம் ஏதுமில்லை.
40 மணித்துளிகள் வகுப்புரை - எஞ்சிய 20 மணித் துளிகள் வரவேற்பு, கேள்வி - பதில் - வருகைப் பதிவு எல்லாம் நடக்கும்.
தொடர்ந்து வகுப்பில் பயிற்சி பெற்றவர்களுக்குப் போட்டியும், பரிசும் உண்டு.
சென்ற முறை தயாரான திராவிட நாற்றுகள்கூட இம்முறை கலந்துகொண்டு, தம் அறிவை விரிவு செய்துகொள்ளவும் வாய்ப்பு உண்டு.
புதிய நாற்றுகள் - பகுத்தறிவுப் பண்ணையில்!
பெரியார் உயராய்வு சிந்தனை மய்யத்தின் சான்றிதழ் - பெரியார் - மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகம்மூலம் அறிவியல் மனப்பாங்கு, கடமை உணர்வு வகுப்பின் பரப்புரையாகவே இது கருதப்படும்.
பயிற்சி வகுப்பிலும் சரி, வெளியே தனியே பகுத் தறிவுப் பிரச்சாரத்திலும் சரி, போதிய பாட நூல்களாக,
பெரியார் களஞ்சியம் பகுத்தறிவு மூன்றுதொகுதி,
பகுத்தறிவு ஏன்? எதற்காக?
அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுக் களஞ்சியம் முதலியவை இருக்கும்.
தனித்தனியே நடத்தும் திட்டமும் தொடரும்.
அடர்த்தியான பணிகள்!
நேர்த்தியான விளைச்சல்!
புதிய திராவிட பகுத்தறிவு நாற்றங்கால் இப்போது பெரியார் பண்ணையத்தில் அடுத்த விளைச்சலாகக் கிடைக்கும்.
இந்தப் பணி போதுமா?
அடுத்தது களப் பணிகள் -
துண்டறிக்கை பரப்பு இயக்கம் - இல்லந்தோறும் மக்கள் உள்ளந்தோறும் பகுத்தறிவுச் சிந்தனை பரப்புதல் பணியும் தொடர் பணியாக தொய்வின்றி நடைபெறும்.
அடிக்கடி ஆங்காங்கு புதிய பொறுப்பாளர்கள் ப.க. கலந்துரையாடல்கள் மாவட்டந்தோறும், மண்டலந் தோறும், ஒன்றியந்தோறும் சுழலும் பம்பரமாகி, சுற்றிச் சுற்றி நடத்தி, ஒரு ஆரோக்கியமான போட்டியை முன்னெடுத்துச் செல்ல முன்னோட்டமாக இவ்வாண்டு தொடங்கட்டும்!
ஊரெங்கும் பகுத்தறிவுப் பேரொளி பரவட்டும்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
பாரெங்கும் பகுத்தறிவு முழக்கம்
ஊரெங்கும் பகுத்தறிவுப் ‘பேரொளி'
பரவட்டும்! பரவட்டும்!!
வெற்றி நமதே! விரைவீர்!
கி.வீரமணி
புரவலர்,
பகுத்தறிவாளர் கழகம்.
சென்னை
22.11.2021
ஓர் அரிமா நோக்கு!
சென்னை பகுத்தறிவாளர் கழகத்திற்கு தந்தை பெரியாரின் ஆசியும் - அன்பளிப்பும்!
பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கி வைத்து அறிவுரையாற்றிய வணக்கத்திற் குரிய தந்தை பெரியார் அவர்கள், கழகத்தின் வளர்ச்சிக்காக கழகத்தின் தலைவர் திரு.சி.டி.நடராசன் அவர்களிடம் 1000 ரூபாயை நன்கொடையாக அளித் தார்கள். தொடர்ந்து அய்யா அவர்கள் பேசுகையில்,
கழகம் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும், பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பலவகையில் வலிவுடன் செய்ய வேண்டிய முறைகள்பற்றியும் கூறினார்கள். கழகம் தனக்கென ஆங்கில ஏடு ஒன்று விரைவில் தொடங்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி னார்கள். மேலும் துண்டுப் பிரசுரங்கள், மலிவுப் பதிப்புகள் வெளியிடுதல், கருத்தரங்குகள், விளக்கக் கூட்டங்கள் இவற்றுக்கு ஏற்பாடு செய்தல், பிரச்சார நாட கங்கள் பலவற்றை நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் விரைந்து ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்றார்கள். மேலும், பகுத்தறிவாளர்கள் தம் சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சின்னம் (எம்பளம்) ஒன்றினை உடனே உருவாக்குங்கள் என்றார்கள்.
கூட்டத்தில் தோழர்கள் துண்டேந்தியமைக்கு ஆதரவாக ரூபாய் 129.30 காசு வசூலாகியது.
‘விடுதலை', 7.9.1970
பெரியார் பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை
10.12.2021 முதல் 21.12.2021 வரை (10 நாள்கள், ஞாயிறு நீங்கலாக)
நேரம்: மாலை 6 மணிமுதல் 7 மணிவரை
தலைப்பு - கருத்தாளர்கள்
கடவுள் - கவிஞர் கலி.பூங்குன்றன்
மதம் - சு.அறிவுக்கரசு
ஜாதி - அருள்மொழி
பெண்ணடிமை - செ.மெ.மதிவதனி
பண்டிகைகள் - துரை.சந்திரசேகரன்
புராணங்கள்- இலக்கியங்கள் - மு.சு.கண்மணி
ஜோதிடம் - ஜாதகம் - இராம.அன்பழகன்
சகுனம் - சடங்கு - பேய் -
பில்லி - சூனியம் - டாக்டர் கவுதமன்
ஆத்மா- வீ.குமரேசன்
பக்தி - பிரார்த்தனை - வா.நேரு