பகுத்தறிவு உலகு

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

புதிய வலிவோடு பகுத்தறிவாளர் கழகப் பணிகள் தொடக்கம்


மயானங்களில் உடலை அடக்கம் செய்வதில் ஜாதிப் பிரச்சினை கிளப்பப்படுவதற்கு முடிவு கட்டுக!
November 22, 2021 • Viduthalai

* பகுத்தறிவாளர் கழகத்தில் சமூக ஊடகப் பிரிவு தொடக்கம்!  

* புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு!  

* புதிய கல்விக் கொள்கை, ‘நீட்' தேர்வினைக் கைவிடுக!

* அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) பிரிவின்படி கல்விக் கூடங்களில் பாடத் திட்டங்களை அமைத்திடுக!

பெரியார் நினைவு சமத்துவபுரங்களை சீரமைத்திடுக!

எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் இடம்பெறக் கூடாது!

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்!

புதிய வலிவோடு பகுத்தறிவாளர் கழகப் பணிகள் தொடக்கம்

சென்னை, நவ.22 மாநில பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், ஊக்கத்துடன் செயல் படும் வகையில் அமைப்புப் பணிகளும், செயல்பணி களும் திருத்தி அமைக்கப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை பெரியார் திடலில் 21.11.2021 அன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில, மாவட் டப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

இரங்கல் தீர்மானம்

பெரியார் இயக்கத்தின் மூத்த போராளியும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் துணைத் தலைவருமான மானமிகு இராசகிரி கோ.தங்கராசு (வயது 96) முதுமை தொடர்பான உடல்நலக் குறைவால் 5.10.2021 அன்று காலமானார். தந்தை பெரியார் காலத்திலிருந்து அன்னை மணியம்மையார், அடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் தலைமையில் கழகப் பணி யாற்றிய முன்னணி களப் போராளி ஆவார். திராவிடர் இயக்கத்திலும், அரசியல் களத்திலும் இவரால் பலர் கொள்கைப் பற்றுடன் பயிற்றுவிக்கப்பட்டு சிறப்பாக விளங்கினர்; இன்றும் விளங்கி வருகின்றனர். மறைந்த அய்யா இராசகிரி கோ.தங்கராசு அவர்களுக்கு பகுத்தறி வாளர் கழகம் நன்றியுடன் வீரவணக்கத்தை செலுத்து கிறது.

22.5.2021 அன்று மறைவுற்ற ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இராமதுரை, லால்குடி மாவட்ட ப.க. தலைவர் வீ.சுப்பிரமணியன் ஆகியோர் மறைவிற்கு வீர வணக்கம் செலுத்துகிறது.

தீர்மானம் 2:

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சருக்கு வாழ்த்து!

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த தேசிய, மாநிலக் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சிப் பொறுப் பினை ஏற்ற முதல் நாள் தொடங்கி முதலமைச்சர் மாண்புமிகு, மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு நாளும் கொள்கை சார்ந்த வகையில் ஆட்சி புரிந்து வருகிறார். தமிழ்நாட்டு அரசியலின் மய்யக்கரு வான சமூகநீதி நடைமுறையின் தொடர்ச்சியாக கோயில் கருவறைக்குள் பயிற்சிபெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதற்கு அரசாணை பிறப்பித்தும் நடைமுறைப்படுத்தி சரித்திர சாதனை புரிந்துள்ளார். திராவிடர் இயக்கத்தின் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், இவ்வாறு சமூகநீதித் தளத்தில் சாத னைகள் பல புரிந்துவரும் முதலமைச்சரை சமூகநீதியின் சரித்திர நாயகர்என கொள்கை சார்ந்து பாராட்டிப் போற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதற்கு வாழ்த்துதலை தெரிவித்துக் கொள்கிறது. தொடர்ந்து திராவிடர் இயக்க கொள்கைவழியில் ஆட்சி நடத்திடு வதற்கான வேண்டுகோளையும் முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை இக்கூட்டத்தின் வாயிலாக பகுத்தறிவாளர் கழகம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3:

மரணத்திலும் ஜாதியை முன்னெடுக்கும்

ஜாதீய பிற்போக்குத்தனத்திற்கு முடிவு கட்டுக!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மானுடப் பொதுமைக்கு இலக்கணம் வகுத்தவர் திருவள்ளுவர். பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்றார் தந்தை பெரியார்.

அத்தகைய தமிழ்நாட்டில் மனிதன் மரணம் அடைந்து அவனை எரிக்கும் அல்லது புதைக்கும் சுடுகாடு - இடுகாடுகளில்கூட  ஜாதி வேறுபாடு காட்டப் படுவது மனிதம் தலைகுனியத்தக்க கீழ்மையான நிலைப்பாடாகும்.

மனிதன் சாகிறான்; ஆனால், அவனைப் பீடித்த ஜாதி சாகவில்லை என்பது சகிக்கப்படவே முடியாத சனாதனப் புத்தியாகும்.

பிணத்தைத் தூக்கிச் செல்லும்போதுகூட குறிப்பிட்ட தெரு அல்லது சாலை வழியாகச் செல்லக் கூடாது என்று ஜாதிய உணர்வோடு தடை செய்யப்படுவதும், அதனை யொட்டி ஜாதிச் சண்டைகள் வெடிப்பதும் எந்த வகை யிலும் நியாயப்படுத்தவே முடியாத - மனிதத்தன்மைக்கு எதிரான செயல்பாடாகும்.

தந்தை பெரியார் வழிவந்த திராவிட இயக்கக் கோட்பாட்டினை நெஞ்சில் சுமந்த - சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் இதற்கொரு முடிவைக் காணவேண்டும் என்றும், மரணத்திலும் ஜாதியை முன்னெடுக்கும் ஜாதீய பிற்போக்குத்தனத்திற்கு முடிவு கட்ட எல்லா வகையான முன்னெடுப்புகளையும், நடவடிக்கைகளையும் - தேவைப்பட்டால் சட்டம் உள்பட இயற்றப்படவேண்டும் என்றும் மாநிலப் பகுத்தறிவாளர் கழகக் கூட்டம் தமிழ்நாடு அரசை குறிப்பாக முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறது.

அதேபோல, சுடுகாட்டுக்கு அல்லது இடுகாட்டுக்குப் போகும் பாதைகள் மிக மோசமாக இருப்பதைக் காண முடிகிறது. அரசுக்குச் சொந்தமாக இருந்தாலும், தனியா ருக்குச் சொந்தமாக இருந்தாலும் மயானத்துக்குச் செல்ல எந்தவிதத் தடையும் இருக்கக்கூடாது என்றும், மயான பாதை வசதியாக செல்வதற்கு செப்பனிடப்பட ஆவன செய்யவேண்டுமாய் தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4:

பெரியார் நினைவு சமத்துவபுரங்களும் - நிலைப்பாடுகளும்!

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது - ஜாதியற்ற - மதச்சார் பற்ற மக்களின் சங்கமமாக  மாதிரி குடியிருப்பு வளாகமாக - வாழ்நாள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்காக தன் வாழ்வை ஒப்படைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவைப் போற்றும் வகையில் 2000-2001 ஆம் ஆண் டில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப் பட்டன.

குடியிருப்போருக்கான சட்ட திட்ட விதிகளும் உரு வாக்கப்பட்டு, பயனாளிகளால் உறுதிமொழியும் எடுக்கப் பட்டது.

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கப்படுவோர் எந்தக் காரணத்தை முன்னிட்டும், வீட்டினை விற்பதோ, வாடகைக்கு விடுவதோ கூடாது என்பது முக்கியமான நிபந்தனையாகும்.

நாளடைவில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆதிதிராவிட மக்கள் அங்கு வாழ முடியாத இறுக்கமான ஜாதீய காரணத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ அங்குக் குடியிருக்காமல் வேறு இடத்திற்குக் குடியேறும் அவல நிலை நிலவுவதை அறிய முடிகிறது.

இந்த நிலை- எந்த நோக்கத்துக்காக பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தின் வேரை வெட்டும் விபரீதமாக இதனைக் கருதவேண்டும்.

பெரும்பாலான பெரியார் நினைவு சமத்துவ புரங் களை உள்ளாட்சி அமைச்சராக இருந்த மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களே திறந்து வைத்து, பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்படுவதன் நோக் கத்தை விளக்கிப் பேசியும் உள்ளார்.

அன்றைய உள்ளாட்சி அமைச்சரே - இன்று முதல மைச்சராக இருக்கும் நிலையில், பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் நிலவும் இந்தச் சீர்கேட்டை தடுத்து நிறுத்துமாறு இக்கூட்டம் முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

அனைத்துப் பெரியார் நினைவு சமத்துவபுரங் களையும் நேரடியாக ஆய்வு செய்து, பெரியார் நினைவு சமத்துவபுரங்களைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாய் தமிழ்நாடு அரசை குறிப்பாக முதலமைச்சர் அவர்களை மாநிலப் பகுத்தறிவாளர் கழகம் கேட்டுக் கொள்கிறது.

கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதற் காகவே பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் பரா மரிக்கப்படவில்லை என்பதையும் அறிந்து, ஏற்கெனவே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்களைச் சீரமைக்க வேண்டும் என்றும், புதிய பெரியார் நினைவு சமத்துவ புரங்களை உருவாக்கவேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5:

பெரியார் நினைவு சமத்துவபுரங்களில்

எந்த மத சம்பந்தமான வழிபாட்டு சின்னங்களும் இருக்கக்கூடாது!

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் மதச்சார்பற்ற தன்மையில் இயங்கவேண்டும்; அந்த வளாகத்தில் எந்த மத சம்பந்தமான வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்பது முக்கியமான விதியும், நிபந்தனையு மாகும்.

கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அந்த முக்கியமான நிபந்தனை மீறப்பட்டுள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர், தருமபுரி மாவட்டம் அலமேலுபுரம், கடலூர் மாவட்டம் கழுதூர் போன்ற ஊர்களில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் கோவில்கள் கட்டப்பட்டு இருப்பது குறித்து தமிழ்நாடு அரசு தலைமைச் செய லாளருக்கு 27.1.2018, 24.2.2018 மற்றும் 13.12.2019 ஆகிய நாட்ளில் திராவிடர் கழகத்தின் பேரில் புகார் தெரிவிக் கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,

மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் மதச்சார்பற்ற கொள்கையின் அடிப்படை யில் உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவ புரங்கள் அந்த அடிப்படையில் இயங்க ஆவன செய்யு மாறு தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6:

பிறப்பின் அடிப்படையில் கல்வி கற்பது மறுக்கப் பட்டு, விதிக்கப்பட்ட தொழிலைத்தான் தலைமுறை அடுத்து தலைமுறையாக செய்திட வேண்டும் என்ற கொடுமையான நிலையை மாற்றிட முனைந்தவர் தந்தை பெரியார். இயக்கம் கண்டு தமது வாழ்நாள் இறுதிவரை போராடி வெற்றிகள் பல கண்டார். அவர்தம் போராட்டத்தின் முழுமையான வெற்றிக்கு இன்றைக்கும் பெரியார்தம் இயக்கம் போராடி வருகிறது. ஒன்றிய அரசின் அதிகாரத்தில் உள்ள இந்துத்துவா சக்தியினர் தேசிய கல்விக் கொள்கை 2020 என்பதாக ஒருதலைப் பட்சமாக கொள்கை முடிவெடுத்துள்ளனர். மீண்டும் கல்வி மறுக்கப்பட்டு, குலத் தொழிலுக்கே மாணவர்களை விரட்டுகின்ற வகையில் உருவாக்கப்பட்ட இந்த கல்விக் கொள்கையினை எதிர்த்து கடந்த இரண்டு  ஆண்டு களாகவே நாடு தழுவிய எதிர்ப்பினை காட்டி வருகி றோம். இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ள அரசும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வந்துள்ளது.

கல்வி என்பது மாநில அரசிடம் ஒத்து இசைவையும் பெற்று முடிவெடுக்கப்படுகின்ற அதிகார வரம்பு என்ப தையும் புறந்தள்ளி தேசிய கல்விக் கொள்கை நடை முறைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் கல்வியில் இருமொழிக் கொள்கையினை மாற்றி மும்மொழிக் கொள்கை என்பதை நடைமுறைப் படுத்திடவும் வற்புறுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி, ஏற்கெனவே பின்தங்கியுள்ளோரையும், கூடுதலாக பிற்படுத்தும் நிலைமைக்கு இட்டுச் செல்லும் தேசியக் கல்விக் கொள்கையினை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என பகுத்தறிவாளர் கழகம் கேட்டுக் கொள்கிறது. கடந்த காலங்களில் ஒன்றிய அரசு முன்னெடுத்த கல்விக் கொள்கைகளில் பல திட்டங்களை தமிழ்நாடு மாநில அரசு மறுத்தே வந்துள்ளது.

இந்த ஆபத்தான கல்விக் கொள்கையினை, ‘நீட்' தேர்வினை எதிர்த்து பல்வேறு நிலைகளில், வழிகளில் பெற்றோர்-மாணவர்களிடம், பொதுமக்களிடம் பிரச் சாரத்தை பரந்துபட்டு செய்திடவும் - கல்விக்  கொள் கையினை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளும் வகையில் நடத்திட வேண்டும் என இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 7:

இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திடும் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளுள் ஒரு பிரிவான, அறிவியல் மனப்பான்மையினை வளர்த்தல், எதனையும் கேள்விக்கு உள்ளாக்கி நோக்கும் அணுகுமுறை, மனிதநேயம், சீர்திருத்தம் ஆகியவற்றை கடைப்பிடிப் பதற்கு சமுதாயத்தில் நிலவிவரும் மூடநம்பிக்கைகள், குருட்டு நம்பிக்கைகள், பில்லிசூனியம், பேயோட்டுதல் மேலும் பல மூடப்பழக்கங்கள் பெரும் தடையாக உள்ளன. பெரியார் இயக்கம் இவைகளை எதிர்த்து அடிப்படைக் கடமைகள் என உருவாக்கம் பெறுவதற்கு முன்பிருந்தே போராடி வந்துள்ளது. மூடநம்பிக்கை என்பது ஒரு பக்கம் அருகி வந்தாலும், சங்பரிவாரங்கள் அதற்கு அறிவியல் முலாம் பூசி, கல்விக் கூடங்களிலும் ஜோதிடம் போன்ற நம்பிக்கை சார்ந்தவை பாடமாக கற்பிக்கப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன.

கல்வி நிலையங்களில் இப்படிப்பட்ட நிலைமைக்கு முற்றுப் புள்ளி வைத்திடுதல் அவசியம். மூடநம்பிக்கை பழக்க வழக்கங்களை தடை செய்து குற்றமாகக் கருதப் படல் வேண்டும் என மராட்டிய, கர்நாடக அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. கேரள அரசும் மூடநம்பிக்கை ஒழிப்புக்கான சட்டம் இயற்றிடும் முயற்சியில் உள்ளது. தமிழ்நாடு அரசும்  மூடநம்பிக் கைகளை ஒழிப்பதற்கு சட்டமியற்றிட வேண்டும் என்பதை பகுத்தறிவாளர் கழகம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 8:

அரசு சட்டப்படி வெளியிட்ட அரசாணைகள், உத்தரவுகள் நடைமுறைக்கு கவனம் செலுத்துதல்

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் திராவிட மாடல் ஆட்சியில் அரச மைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச் சார்பின்மை, உண்மை அறிந்திடும் உயர்வு நிலை, மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றிய அரசு உத்தரவுகள் பல வெளியிடப் பட்டுள்ளன. ஆணைகள், வெறும் ஆவணங்களாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக மதச்சார்பற்ற அரசு அலுவலகங்களில் பல மதத்தைச் சார்ந்த கடவுள் மற்றும் குறியீட்டுப் படங்கள் இருத்தல் கூடாது. அவை அகற் றப்பட வேண்டும் என தெளிவாகவே அரசு ஆணைகள் இருந்தும், அரசு அலுவலகங்கள் பஜனை மடங்களாக மாறி, கடவுள் படங்கள் மாட்டுவது மட்டுமின்றி, தினசரி வாராந்திர பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு ஆணைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ள பரிதாப நிலையை மாற்றிட பகுத்தறிவாளர் கழகம் அதன் பொறுப்பாளர்கள் உரிய அலுவலகங்களில் முறையாக அணுகி வேண்டுகோள் விடுக்கலாம். அரசின் கவனத் திற்குக் கொண்டு செல்லும் வகையில் அமைதியாக சில கவன ஈர்ப்பு நிகழ்வுகளை நடத்திடலாம். தங்கள் பகுதிகளுக்கு வரும் அமைச்சர்களிடம் இந்த அவல நிலையை சுட்டிக்காட்டி ஆவன செய்திடலாம். இத்த கைய வேலைத் திட்டத்தை முறையாக முன்கூட்டியே தீர்மானித்து, முன்னுரிமை அளித்து படிப்படியாக ஆற்றிட முன்வர வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 9:

கடந்த பல ஆண்டுகளாக மாநில ஆட்சி அதி காரத்தில் இருந்தோர் பகுத்தறிவு வளர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதியில் உண்மையானநாட்டம் அற்றவர் களாக இருந்த நிலையில் பகுத்தறிவாளர் கழகம் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த கோரிக்கைகள் முறையாகப் பரிசீலிக்கப்படாத நிலையே இருந்து வந்தது. இப்பொழுது தந்தை பெரியாரின் கொள்கையில் ஈடுபாடு; நடைமுறையில் நாட்டம் உள்ளோர் மாநில ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக் கூறுகளை நடைமுறையில் செழுமைப்படுத்து கின்ற பணி பகுத்தறிவாளர் கழகத்திற்கு அதிகமாகவே உள்ளது.

புதிய உறுப்பினர் சேர்க்கை

இத்தகைய பணிகளுக்கு ஆக்கம் சேர்க்கின்ற வகையில் பகுத்தறிவாளர் கழகம் வலிமைமிக்கதாக - உறுப்பினர் பலத்தைப் பொறுத்த அளவில் முந்தைய காலங்களில் இருந்ததைவிட மிக அதிகமாக இருப்பது அவசியம். மாவட்ட வாரியாக, ஒன்றிய வாரியாக, நகரங்கள் மற்றும் சிற்றூர் வாரியாக புதிய உறுப்பி னர்களை சேர்த்திடல் வேண்டும். காலஅளவை நிர்ண யித்து உறுப்பினர் சேர்க்கைக்குக் குறிப்பேட்டை ஏற் படுத்தி, முதற்கட்ட வேலைத் திட்டத்தினை தொடங்கிட வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 10:

பகுத்தறிவாளர் கழக

அமைப்பு நிலையை விரிவாக்குதல்

மாநில, மாவட்ட அளவில், சில மாவட்டங்களைப் பொறுத்த அளவில் ஒன்றிய அளவில் பகுத்தறிவாளர் கழக அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பொறுப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்கள், நகராட்சிகள் அனைத்திலும் பகுத்தறிவாளர் கழக அமைப்பு தொடங்கப்பட வேண் டும். தேவையின் அவசியம் கருதி சிற்றூர் அளவிலும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிலை யிலும் அமைப்பினர் ஒருவரை நியமித்து படிப்படியாக பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு வேலைத் திட்டம் நடைமுறை ஆக்கப் பெறல் வேண்டும் என தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 11:

உண்மை கண்டறியும்

விசாரணைக் குழு உருவாக்கம்

பகுத்தறிவுக்குப் புறம்பான நிகழ்ச்சிகள், மூடநம் பிக்கை விழாக்கள், சமூகச் சீரழிவு நிகழ்வுகள் தொடர்ந்து பல பகுதிகளிலும் நடைபெற்று வருவது இயல்பு நிலையைப் போல் மாறியுள்ளது. சட்ட ஒழுங்கினைப் பாதிக்கின்ற, சமூகக் கவனத்திற்குள்ளாகும் இத்தகைய நிகழ்வுகளில் உண்மையில் நடந்தது என்ன? அந்த விரும்பத்தகாத நிலையினை எப்படி தவிர்த்திருக்கலாம்? என்பதைப் பொதுமக்கள் அறிந்திடவும், அரசு அதிகாரத்தில் உள்ளோர் ஆவன செய்திட ஏதுவான பணிகளில் பகுத்தறிவாளர் கழகம் சிறப்புக் கவனம் கொண்டு செயல்பட வேண்டும். இதற்காக உண்மை கண்டறியும் குழுவான - பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்களின் பங்கேற்புடன், தேவைப்படும்  தருணங் களில் நிகழ்வுகளின் தன்மை புரிந்த நிபுணர்களையும் உள்ளடக்கி உருவாக்கிட வேண்டும். நிலையான குழுவாக இத்தகைய அமைப்பு பகுத்தறிவாளர் கழகத் தில் உருவெடுக்க வேண்டும். கண்டறிந்த உண்மை யினை, பகுத்தறிவாளர் கழகம் தலைமை நிலையத்திற்கு தெரியப்படுத்தி, அவற்றை பிரசுரமாக்கி பொதுமக்களிடம் வழங்கலாம். இத்தகைய வேலைத் திட்டங்களில் பகுத்தறிவாளர் கழகத்தின் இருப்பு, பயன்பாடு, அதன் மீது பொதுவெளியில் நிலவிடும் மதிப்பீடு (Value) கூடுத லாகும். மக்கள், அரசினர் ஆகியோருக்கு உதவுகின்ற வகையிலும் இந்தக் குழு அமைக்கப்பட்டு செயல்பட தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 12:

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளினை ‘சுயமரியாதை நாள்' என்று கொண்டாடி வருகின்றோம். இவ்வாண்டு டிசம்பர் 2 ஆம் தேதி புரவலரின் பிறந்த நாளினை மாவட்டந்தோறும் சிறப்பாக நடத்துவதென தீர்மானிக்கப்படுகின்றது.

தீர்மானம் 13:

மாதாந்திர பிரச்சாரப் பணிகள், பகுத்தறிவுப் பிரசுரங்கள் வழங்கல்

மத விஷயங்கள், மூடநம்பிக்கை கொண்டாட்டங்கள் மலிவாகியுள்ள நிலையில் இவைகளை விளக்கி நிலை யான கருத்துப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதத்திலும் நடைபெறும் பகுத்தறிவுக்குப் புறம்பான, மனிதநேயப் பண்பாட்டிற்கு எதிரான நிகழ்வினை வகைப்படுத்தி, அவை குறித்து முன்கூட்டியே - நிகழ்வுகள் நடைபெறுவதற்கு முன்பே பிரச்சாரம் நடைபெற வேண்டும். தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி முதலிய பண்டிகைகள் குறித்து புராணப் புளுகை தோலுரித்துக் காட்டும் வகையில் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கிடலாம். சிறு சிறு விளக்கக் கூட்டங்களை, சட்ட ஒழுங்கு முறைக்கு உட்பட்டு நடத்திடலாம். இந்த வேலைத் திட்டத்தில் முன்கூட்டியே திட்டமிடலும், பிரச்சாரம் செய்திடும் பொறுப்பாளர்களை தெரிந்தெ டுத்தலும் மிகவும் முக்கியம். பகுத்தறிவாளர் கழகத்தின் பிரச்சாரம் நடப்பு மாதத்தில் என்ன? என்று பொது வெளியில் எதிர்பார்க்கின்ற வகையில் செயல்திட்டத்தை வகுத்துக் கொள்ள தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 14:

தந்தை பெரியார்தம் கொள்கைப் பிரச்சாரத்திற்கு இயக்க ஏடுகளான ‘விடுதலை‘, ‘உண்மை', ‘பெரியார் பிஞ்சு', ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆகியவை பெரிதும் பயன்பட்டு வருகின்றன. இயக்க ஏடுகளுக்கு சந்தா சேர்க்கின்ற பணியினை ஆண்டு முழுவதும் தொடர் பணியாக மேற்கொண்டு அதன் முதல் தவணையாக 500 ‘மாடர்ன் ரேசனலிஸ்ட்' சந்தாக்களை கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89ஆம் பிறந்த நாள் நிகழ்ச்சியில் வழங்கிட தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 15:

மூடநம்பிக்கை ஒழிப்பில், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத் திட மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மூலம் பெரும் தாக்கத்தினை, மன மாற்றத்தினை ஏற்படுத்திட முடியும். மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்திடுவதற்கு புதிய ஆர்வமுள்ள தோழர்களை பயிற்சி அளிக்கின்ற வகையில் விரைவில் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட வேண்டும். இதில் பங்கேற்கும் வகையில் அந்தந்தப் பகுதியில் ஆர்வமிக்க தோழர்களை தேர்வு செய்து, தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டுமென பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வருகின்ற ஆண்டுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல இடங்களில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்திடுவதற்கு பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தீர்மானம் 16:

பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பிடும் வகையில் இயக்க வெளியீடுகளான

1. பெரியார் களஞ்சியம் (பகுத்தறிவு - மூன்று தொகுதிகள்)

2. பகுத்தறிவு ஏன்? எதற்காக?

3. அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுக் களஞ்சியம்

ஆகிய புத்தகங்களை தனிக் கவனம் செலுத்தி பொதுமக்களிடம் சென்றடையும் வகையில் பிரச்சாரப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தப் புத்தகங் களின் உள்ளடக்கம் மற்றும் சிறப்புகள் பற்றிய கூட் டங்கள், ஆய்வரங்கங்கள், கலந்துரையாடல் கூட்டங் களை நடத்திட பகுத்தறிவாளர் கழகம் திட்டமிட்டு 1000 இலக்கு நிர்ணயித்துக் கொண்டு செயல்பட வேண்டும் என இக்கூட்டத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

- இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:38 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கலந்துரையாடல், தீர்மானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இங்கர்சால்

இங்கர்சால்
சிலை
Powered By Blogger

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் – 110 நாள்: 30.08.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ‌. மீனாட்சி சுந்தரம் நூல் : எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்களின் “திராவிட இயக்கத் தூண்கள்” நூல் அறிமுக உரை: முனைவர் அரிமா த.கு.திவாகரன் நன்றியுரை : ஒசூர் செல்வி ( மாவட்டத் தலைவர், தி.க.மகளிரணி ஒசூர்) zoom : 82311400757 Passcode : PERIYAR

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அய்சுலாந்து
  • அய்தராபாத்
  • அய்ரோப்பா
  • அரியான் செரின்
  • அலகாபாத்
  • அறிக்கை
  • அறிவியல் நாள்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆந்திரா
  • ஆவடி
  • ஆஸ்த்திரேலியா
  • இங்கர்சால்
  • இந்திய பகுத்தறிவாளர்
  • இயேசு
  • இரங்கல்
  • இறப்பு
  • உலக நாத்திகர்
  • உலகத் தமிழர் மாநாடு
  • உலப்பகுத்தறிவாளர்
  • உறுப்பினர் சேர்க்கை
  • எடைக்கு எடை
  • எபிகூரஸ்
  • எர்னஸ்ட் எம்மிங்வே
  • எழுத்தாளர்
  • ஏரியன் ஷெரீன்
  • ஏரியன் ஸெரீன்
  • ஒடிசா
  • ஓப்ரா வின்ஃபிரி
  • ஓபரா
  • ஓபாரா
  • கடவுள் மறுப்பு
  • கர்நாடகம்
  • கருத்தரங்கம்
  • கலந்துரையாடல்
  • கலிபோர்னியா
  • கலைஞர்
  • கவிஞர் ஷெல்லி
  • கவிதா
  • கன்னடம்
  • கனடா
  • காணொளி
  • காரல் மார்க்ஸ்
  • கி.வீரமணி
  • கியூபா
  • கிரேக் எப்ஸ்டீன்
  • கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ்
  • குண்டூர்
  • குவைத்
  • கேத்தரின் ஹேப்பர்ன்
  • கேரளா
  • கொலை
  • கொலைவெறி
  • கோ.கருணாநிதி
  • கோரா
  • சங்கமம்
  • சச்சி ராமாயண்
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சல்மான் ருஷ்டி
  • சார்லஸ் பிராட்லா
  • சித்தராமையா
  • சிலை திறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சுடுகாடு
  • சுபவீ
  • சுவிட்சர்லாந்து
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • செஞ்சி
  • சென்னை
  • சேகுவேரா
  • டத்தோ விருது
  • தஞ்சை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலை
  • தாம்பரம்
  • தாமஸ் ஜெபர்சன்(Thomas Jefferson)
  • தாமஸ் அய்க்கன் ஹெட்
  • தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடர் க
  • திருச்சி
  • திருமணம்
  • திருமா
  • திரைப்படம்
  • தில்லி
  • தீர்மானம்
  • துரை.சந்திரசேகரன்
  • தெலங்கானா
  • தெலங்கானா மாநிலம்
  • தெலுங்கானா
  • தென்சென்னை
  • நன்கொடை
  • நாகபுரி
  • நாணயம்
  • நாத்திக சங்கம்
  • நாத்திக நாடுகள்
  • நாத்திக மையம்
  • நாத்திகர்
  • நாத்திகர் சங்கம்
  • நிகழ்ச்சிகள்
  • நிர்வாக குழு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நூல்கள்
  • நூல்வெளியீடு
  • நூற்றாண்டு
  • ப.க.
  • ப.க. கலந்துரையாடல்
  • ப.க. பயிற்சி பட்டறை
  • ப.க.கலந்துரையாடல்
  • ப.க.மாநாடு
  • பக
  • பக சின்னம்
  • பக பேரணி
  • பக மாநாடு
  • பகுத்தறிவாளர்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுத்தறிவு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படுகொலை
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சி வகுப்பு
  • பரிசளிப்பு
  • பல்கலைக்கழகம்
  • பள்ளி
  • பன்னாட்டு
  • பன்னாட்டு அமைப்பு
  • பன்னாட்டு மையம்
  • பன்னாட்டு விருது
  • பார்ப்பனர்
  • பிராட்லா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • புதிய பொறுப்பாளர்
  • புதுதில்லி
  • புதுவை
  • புரட்சிக்கவிஞர்
  • புரூஸ் வில்லிஸ்
  • பெங்களூரு
  • பெண்
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவு நாள்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பன்னாட்டு அமைப்பு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மையம்
  • பெரியார் லலாய் சிங்
  • பெரியாரியல்
  • பென் & டெல்லர்
  • பேராசிரியர்
  • பேராசிரியர்கள்
  • பொறுப்பாளர்
  • மக்கள் தொகை
  • மண்டல்
  • மத்திய பிரதேசம்
  • மத நம்பிக்கை
  • மதச்சார்பற்ற சட்டம்
  • மதம்
  • மதவெறி
  • மராட்டியம்
  • மலேசியா
  • மறுப்பு
  • மறைநிலவு
  • மறைவு
  • மனிதநேய மாநாடு
  • மாணவர்
  • மாணவர் பேரணி
  • மாநாடு
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மும்பை
  • மேற்கு வங்கம்
  • ராண்டி
  • ரிச்சர்டு டாக்கின்ஸ்
  • லாஸ் ஏஞ்சல்
  • லெவிஃபிராகல்
  • வட அமெரிக்கா
  • வடஇந்தியர்
  • விசாகப்பட்டினம்
  • விஞ்ஞானி
  • வியட்நாம்
  • விருது
  • விருதுநகர்
  • விழா
  • விஜய்வாடா
  • விஜயம்
  • விஜயவாடா
  • வீரவணக்கம்
  • வைக்கம்
  • ஜெயகோபால்
  • ஜோசப் இடமருகு
  • ஹரியானா
  • DRAVIDIAN STOCK
  • periyar

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • உலகளவில் நாத்திகர்கள்
    உலகிலேயே அதிக விழுக்காட்டில் நாத்திகர்கள் இருப்பது சீனாவில்தான் என்று ஆய்வுத்தகவல் கூறுகிறது. globalnation.inquirer.net இணையத்தில் (9.5....
  • வறுமையில் வாடிய ஸ்டாலின்!
    சோவியத் ஒன்றி யத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி  செய்தவர் ஜோசப் ஸ்டாலின். இவருடைய இயற் பெயர் இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ்...
  • பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள்
    தஞ்சாவூரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் களுக்கான பயிற்சி பட்டறையில் கீழ்கண்ட பொறுப்பாளர்களை பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவ...
  • இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899)
    பகுத்தறிவு உலகின் ஒப்பற்ற மாமேதை இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899) வீ. குமரேசன் உலகில் உருவாகிய உயிரினங் களுள் மனித இனத...
  • இங்கர்சால் பொன்மொழிகள்
    உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம் உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில். ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூ...
  • நாத்திக நன்னெறியின் அழைப்பு!
    "மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண்டிருக்கி...
  • மும்பை மாநில சமூகநீதி மாநாடு 2018 (24.11.2018)
    சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபுலே, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் படங்கள் திறந்த...
  • இந்தியாவில் மதம், மதமற்றவர்களின் எண்ணிக்கை
    திராவிடர் கழகத் தலைவரின் கருத்து மின்சாரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான கணக்கெடுப்பின்படி மத நம்பிக்கையற்றவர்கள் என்ற பகுதி...
  • நவம்பர் 16 இல் விருதுநகரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா (50 ஆண்டு) மாபெரும் மாநாடு!
    தமிழர் தலைவர் தலைமையில் பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடல் நடைபெற்றது சென்னை, 17.8.2019 * பெரியார் 1000 வினா - விடை...
  • கருத்தரங்கம் * கவியரங்கம் * பெரியார் விருதளிப்பு சிங்கப்பூரில் பெண்களே நடத்திய பெரியார் விழா
    சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கா.தனலட்சுமி பங்கேற்று கருத்துரை யாரையும் நெருங்கவிடாதபடி தலைமைக்கான ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொள்பவர் பெ...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (2)
    • ►  மார்ச் (2)
  • ►  2024 (18)
    • ►  டிசம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (3)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2023 (19)
    • ►  நவம்பர் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2022 (31)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (5)
    • ▼  ஜனவரி (5)
      • நான் சுயமரியாதைக்காரன்"நூல் வெளியீட்டு விழாவில் சி...
      • புதிய வலிவோடு பகுத்தறிவாளர் கழகப் பணிகள் தொடக்கம்
      • இந்த ஆண்டுக்குள் பகுத்தறிவாளர் கழகத்தில் 10,000 உற...
      • பகுத்தறிவாளர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சி வகுப்ப...
      • பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்களின் முதல் காண...
  • ►  2021 (40)
    • ►  நவம்பர் (3)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (20)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
  • ►  2020 (13)
    • ►  டிசம்பர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (7)
  • ►  2019 (38)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (50)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (3)
    • ►  ஜனவரி (7)
  • ►  2017 (48)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (9)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (19)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (55)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.