
அமெரிக்க அய்க்கிய நாடுகள் – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் நேற்று (9.3.2024) சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்தனர்.
திராவிடர் கழக தலைமையகத்தினரை ஏற்கெனவே தொடர்பு கொண்டு, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களைச் சந்தித்து உரையாடிட உறுதி செய்திருந் தனர்.
வருகை தந்த இதழியல் தொடர்பகத் துறையின் தலைவர் பேராசிரியர் டியான் வின்ஸ்டன் (Diane Winston) தலைமையிலான ஆய்வு மாணவர்கள் (10 பேர்) திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் இயக்கம் பற்றி அறிந்திட தமிழர் தலைவருடன் ஒரு நேர்காணல் – கலந் துரையாடலை நடத்திட அனுமதி கோரி யிருந்தனர்.
திட்டமிட்டபடி பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேர்காணல் உரையாடல்
நிகழ்ச்சியின் தொடக்கமாக தந்தை பெரியார், திராவிடர் இயக்கம், திராவிடர் கழகம் பற்றிய ஒரு சுருக்கமான உரையினை தமிழர் தலைவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் டியான் வின்ஸ்டன் அவர்கள் திராவிடர் இயக்கம் பற்றிய கேள்விகளைக் கேட்க, ஒவ்வொரு கேள்விக்கும் ஆழமான – சுருக்கமான விளக்கத்தினை தமிழர் தலைவர் எடுத்துரைத்தார். பேராசிரியரைத் தொடர்ந்து ஆய்வு மாணவர்கள் ஒவ்வொரு வரும் இந்திய சூழலில் திராவிடர் இயக்கத்தின் பணி, எதிர் கொள்ளும் அறைகூவல் பெண் உரிமை & அதிகாரத்துவம், மூடநம்பிக்கை ஒழிப்பு, திராவிட மாடல் ஆட்சி பற்றிய கேள்வி களைக் கேட்க விரிவான விளக்கத்தினை தமிழர் தலைவர் வழங்கினார்.
ஏறக்குறைய ஒண்ணே முக்கால் மணி நேரம் நடைபெற்ற நேர்காணலுக்குப் பின்னர் பேராசிரியருக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் தந்தை பெரியார் குறித்த – இயக்க செயல்பாடுகள், சாதனைகளைப் பற்றிய புத்தகங்களை தமிழர் தலைவர் வழங்கினார். அமெரிக்க நாட்டு பல்கலைக் கழகக் குழுவினர் நன்றி கூறி மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைச் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி,
ச. பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், ப.க. மாவட்ட செயலாளர் பா.ராமு மற்றும் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு முன்பு தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்கள், பெரியார் பகுத்தறிவு ஆராய்ச்சி நூலகம், பெரியார் காட்சி யகம், அன்னை மணியம்மையார் மருத்துவமனை, சுயமரியாதைத் திருமண நிலையம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, கழகத்தின் செயல்பாடு களை அமெரிக்கப் பல்கலைக் கழக குழுவினர் கேட்டு அறிந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக