வெள்ளி, 8 மார்ச், 2024

‘ஸநாதன’க் கல்விக் கொள்கையை ஒழிப்போம்! மேற்கு வங்கம் – கொல்கத்தாவில் நடைபெற்ற மாணவர் எழுச்சிப் பேரணியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் எழுச்சியுரை




 ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற மோடியின் கியாரண்டி என்ன ஆயிற்று?

நாங்கள் ஆர்.எஸ்.எஸ்., மோடி குடும்பம் அல்ல; சமத்துவம் பேசும் திராவிடக் குடும்பம்!

கொல்கத்தா,மார்ச் 8- இந்தியாவின் முதன்மையான
15 மாணவர் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய இந்திய மாணவர் அய்க்கியம் (United Students of India) சார்பில் கொல்கத்தா பேரணியும், பொதுக்கூட்டமும் 06.03.2024 புதன்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை நடைபெற்றது.
கொல்கத்தாவைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் காலை முதலே திரளத் தொடங்கினர். மேற்கு வங்காளத்தில் எஸ்.எப்.அய், ஏ.அய்.எஸ்.எப், பி.எஸ்.யூ ஆகிய அமைப்புகள் இப் பேரணியை ஒருங்கிணைத்தன.
தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத்தின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், வழக்குரைஞர் முகமது அஃப்ரிடி ஆகியோரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் மாணவர் அணி இணைச் செயலாளர் வழக்குரைஞர் பூவை ஜெரால்டு, உசிலம்பட்டி வழக்குரைஞர் மகிழன் ஆகியோரும், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசியச் செயலாலர் சீ.தினேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஹவுரா நிலையம் மற்றும் சேல்தா நிலையம் ஆகிய இருவேறு பகுதிகளிலிருந்து ஒரே நேரத்தில் பேரணி புறப்பட்டு, கொல்கத்தாவின் வெகு மக்கள் கூடும் பகுதிகளில் ஒன்றான கல்லூரித் தெருவில் ஒன்று சேர்ந்தது. அந்தத் தெருவில் தான் கொல்கத்தா பல்கலைக்கழகம், பிரசிடென்சி கல்லூரி, ஹேர் பள்ளி உள்ளிட்ட ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. சேல்தா மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியில் கழகக் கொடி ஏந்தி வந்த திராவிட மாணவர் கழகத் தோழர்கள் ஆங்கிலத்தில் பதாகையை ஏந்தி, முழக்கம் எழுப்பியபடி பங்கேற்றனர்.
இந்திய மாணவர் சங்கத்தின் தேசியப் பொதுச் செயலாளர் மாயுக் பிஸ்வாஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாணவர் அணிச் செயலாளர் பிரியங்கா, பி.எஸ்.யூ செயலாலர் நவ்ஃபல் சஃபியுல்லா, ஜே.என்.யூ மாணவர் தீப்ஷிதா, இந்திய மாணவர் சங்க மேற்கு வங்க மாநிலச் செயலாளர் தேபான்ஞ்சன் தே, தலைவர் பிரனாய் காஜி, மற்றும் பிகார், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசியக் கல்விக் கொள்கை, பாஜகவை எதிர்த்தும், கல்வி உரிமைக்காகவும் இந்தியிலும், வங்காளத்திலும் முழக்கங் களை எழுப்பினர்.
பேரணியின் முடிவில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாணவர் தலைவர்களின் உரைவீச்சு தொடங்கியது.

கழகத் துணைப் பொதுச் செயலாளர்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரை
கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரின் உரை வருமாறு:
“சமூகநீதி மண்ணாம், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் மண்ணிலிருந்து இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கிறோம். சிறப் பான இந்த மாணவர் பேரணிக்கு எங்கள் தலைவர் டாக்டர் வீரமணி அவர்கள் வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்கள். நமக்குத் தெரியும் இதே நகரத்தின் இன்னொரு மூலையில் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருக்கிறார். நாள்தோறும் நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும், தெருக்களிலும் “மோடி கா கியாரண்டி” என்ற விளம்பர வாசகங்களைப் பார்க்கிறோம். மோடி அவர்களே, நீங்கள் இதுவரை வழங்கிய உத்தரவாதங்கள் எங்கே போயின என்று கேட்கிறோம்.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதிமொழி என்ன ஆயிற்று?
பாஜகவின் நச்சு விதைகள் முளைக்காத மண்ணில், சில கழிவுகளை இட்டாவது உரமாக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். பாஜக சார்பில் யார் யாரையோ களம் இறக்குகிறார்கள். ஊடகங்களால் ஒருவர் திடீரென புனிதப் பசு ஆக்கப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு ஊரிலும் இதே நாடகம் அரங்கேற்றப்படுகிறது.
நேர்மையானவராக, கறாரானவராக ஒருவர் ஊடகங் களால் தொடர்ந்து முன்னிறுத்தப்படுவார். அரசியல்வாதி களைத் தாண்டி புனிதப்படுத்தப்படுவார். எங்கள் ஊரில் சிங்கம் என்று சொல்லி ஓர் ஆட்டை எங்கள் தலையில் கட்டப் பார்க்கிறார்கள். ஆனால், ஆடு என்றாலே எங்க ளுக்குப் பிரியாணி மட்டும் தான் நினைவுக்கு வரும்.

இங்கே புனிதப் பசுவாக ஒருவரை (மேனாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய) கடந்த சில காலமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையர் சொல்லியிருக்கிறார் – அரசு அதிகாரிகள் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று. நேற்று நீதிபதியாக இருந்தவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த கையோடு பா.ஜ.க.வுடன் இணையப் போகிறார். இதற்கு முன் அவர் வழங்கிய தீர்ப்புகளை எப்படிப் பார்ப்பது?
எப்போதும் எச்சரிக்கையாக இருப்போம். வரலாறு நமக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. அத்தனைச் சர்வாதி காரமும் ஜனநாயகத்தின் வழியில் வந்ததை நாம் பார்த் திருக்கிறோம்.
எங்கள் மீது நீட்டைத் திணித்தீர்கள்; பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறித்தீர்கள். எங்கள் பிள்ளைகளை நீட்டின் பெயரால் சாகடித்தீர்கள். நாங்கள் அனிதாவை இழந்தோம். பிறகு அதே வீராங் கனையின் படத்தைச் சுமந்து நீட்டுக்கு எதிராகப் போராடு கிறோம். நிச்சயம் நீட்டை நீக்குவோம். எங்கள் மீது நீங்கள் திணித்த தேசிய கல்விக் கொள்கை என்பது மனுவாதக் கல்விக் கொள்கை. இதைத் தான் எங்கள் மீது ராஜாஜி திணித்தார். அவரைத் தமிழ்நாடு தூக்கி எறிந்தது.

நாங்கள் ஸநாதனம் பேசும் மோடியின் குடும்பம் அல்ல – சமத்துவம் பேசும் திராவிடக் குடும்பம், பெரியாரின் குடும்பம், அம்பேத்கரின் குடும்பம், பகத் சிங், ஜோதிராவ் பூலே, கன்சிராமின் குடும்பம். ஜனநாயகத்தின் குடும்பம். போராடுவோம். வெற்றிபெறுவோம்” இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக் கூட்டத்தில் இந்திய மாணவர் அய்க்கியத்தின் சார்பில் கல்விக்கான கொள்கை அறிக்கை (Education Manifesto) வெளியிடப்பட்டது. தேசியக் கல்விக் கொள்கையை ஒழிப்போம் என்று, அனைத்து மாணவர் பிரதிகளும் கைகோத்து உறுதியேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு மாநிலப் பிரதிநிதிகளுக்கும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி ஆகியோரின் ஆங்கிலப் புத்தகங்களையும், கழக வெளியீடுகளையும் வழங்கினார். தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழை முகமது அப்ரிடி வழங்கினார். கழகக் கொடிகள் பேரணிச் சாலையில் கட்டப்பட்டிருந்ததுடன், கழகத்தின் சார்பில் முழக்கங்கள் வண்ணச் சுவரொட்டிகளாக கொல்கத்தா வீதிகளில் ஒட்டப்பட்டன.

திராவிட மாணவர் கழகத்தினருக்கு வரவேற்பு
முன்னதாக கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் சென்றடைந்த திராவிட மாணவர் கழகப் பிரதிநிதிகளை எஸ்.எப்.அய் கொல்கத்தா மாநகரப் பொறுப்பாளர் வழக்குரைஞர் ரிதங்கர், சாம்ராட் தத்தா, ஹுவஜித் சர்க்கார், உள்ளிட்ட தோழர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேற்குவங்க யூனியன் வங்கி பிற்படுத்தப்படோர் நலச் சங்கப் பொறுப்பாளர்கள் பிரகாஷ் மஜூம்தார், நவ்ஷத் அலி அன்சாரி, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கத் துணைத் தலைவர் அசோக் சர்க்கார் உள்ளிட்டோர் பேரணி நடந்த இடத்துக்கு வந்து நமது தோழர்களை வாழ்த்தியும், பேரணியில் பங்கேற்றும் சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக