விடுதலை நாளேடு,
Published February 8, 2024
ஒருங்கிணைந்த ஆந்திராவில் தந்தை பெரி யாரின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்க இளமைக் காலம் முதல் அரும்பாடு பட்டவரான தோழர் டாக்டர் ஜெயகோபால் (வயது 80) அவர்கள் நேற்று (07.02.2024) மாலை கால மானார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வருந்துகிறோம். மிக்க துயரப் படுகிறோம்.
1972-ஆம் ஆண்டு அவர் நிறுவிய “பாரத நாஸ்திக சமாஜம்” (Atheist Society of India) ஆந்திராவில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் அமைப் பாகும். அறிவுத் தளத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளையும், வரலாற்றையும் எழுதியுள்ள அதே வேளையில், எளிய மக்களிடம் கொண்டு செல் வதற்கான நடைமுறைகளையும், பிரச்சார முறைகளை யும் திராவிடர் கழகத்தைப் பின்பற்றி அமைத்தவர் – தொடர்ந்து விடுதலையைப் படிப்பவர்.
கருஞ்சட்டை அணியும் ஏராளமான பெரியாரிய லாளர்களை ஆந்திராவில் உருவாக்கிய பெருமை டாக்டர் ஜெயகோபால் அவர்களுக்கு உரியது. ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பிரிவில் ஊழியராகப் பணியாற்றிய காலத்திலும், அதன் பின்னும் பகுத்தறிவையும், பெரியாரியலையும் கடைப்பிடித்துப் பரப்பத் தயங்காதவர்.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் முதல் முறையாக தந்தை பெரியார் முழு உருவச் சிலையை விசாகப் பட்டினம் கடற்கரையில் நிறுவி, அதன் திறப்பு விழாவிற்கு நம்மை அழைத்து எழுச்சிகரமாக விழா நடத்தியவர். நம்முடைய ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் ஏற்றுச் செயல்படக் கூடியவர்.
தந்தை பெரியார் பிறந்தநாள், நினைவுநாள் உள் ளிட்டவற்றிற்கு ஆந்திராவில் இருந்து பெருமளவில் தோழர்களைத் திரட்டி வந்து பெரியார் திடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அந்த அமைப்பின் செயல்பாடுகளுள் ஒன்றாகவே ஆக்கியவர்.
பெரியாரை உலகமயமாக்கும் நமது செயல் பாடுகள் தீவிரமாகிவரும் காலத்தில் அவரது மறைவு நமக்குப் பேரிழப்பே ஆகும். அவரது மறைவுக்கு உலகப் பகுத்தறிவாளர்கள், பெரியாரியலாளர்கள் சார்பிலும், திராவிடர் கழகத்தின் சார்பிலும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் ரவி உள்ளிட்ட அவரது மூன்று மகன்கள், மகள் ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், பாரத நாத்திக சமாஜத் தோழர்களுக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
8.2.2024
குறிப்பு: மறைந்த டாக்டர் ஜெயகோபால் அவர் களது விழிகள் கொடையளிக்கப்பட்டுள்ளன. அவரது உடல் இன்று மாலை விசாகப்பட்டினம் கடற்கரையில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டு, பின்னர் மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப் படவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக