செஞ்சி ப.க. மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையுரை
செஞ்சி, ஜூன் 24 பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் என்ற முறையில், மாநாட்டிற்காக உழைத்தவர்களுக்கு, பங்கேற்று உரையாற்றிய பெருமக்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுத்தறிவாளர் கழக பொன்விழா
நிறைவு மாநாடு
கடந்த 19.6.2022 அன்று மாலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரை யாற்றினார்.
அவரது தலைமையுரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடும், மன மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் நடைபெறும் சிறப்பான மாநாடாக, செஞ்சிக்கோட்டையில் வரலாறு படைத்த ஒரு மாநாடாக அமைந்த பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு நிறைவடையக் கூடிய நிலையில், இப்பொழுது வந்திருக்கக்கூடிய இந்தக் கட்டத்தில் சிறப்பாக வரவேற்புரையாற்றிய பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் துரை திருநாவுக்கரசு அவர்களே,
முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சுப்பராயன் அவர்களே, மாவட்ட அமைப்பாளர் கோபண்ணா அவர்களே,
வாழ்த்துரை வழங்கி சிறப்பித்துக் கொண்டிருக்கக் கூடிய, இந்த மாநாட்டினுடைய வெற்றிக்கு முழுக் காரணமாக இருக்கக்கூடிய - அன்பிற்கும், பாராட்டு தலுக்கும் உரிய நம்முடைய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மனிதநேயர் மாண்புமிகு மானமிகு கே.எஸ்.மஸ்தான் அவர்களே,
தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து ஓர் அருமையான ஆய்வுரையை நிகழ்த்தி விடைபெற்றுச் சென்ற பொதுப்பணித் துறை அமைச்சர் சீரிய பண்பாளர், பகுத்தறிவாளர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்களே,
அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய படத்தைத் திறந்து ஓர் அருமையான உரையை ஆற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களே,
பேரறிஞர் அண்ணா அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்து, ஒரு சிறப்புமிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையை நிகழ்த்தியுள்ள, திராவிட இயக்கத்தினுடைய மூன்றாவது குழல் என்று நம்மால் எப்பொழுதுமே அடையாளம் கண்டுகொண்டி ருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்பிற்குரிய அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
சாவித்திரி புலே அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,
கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்களே, ஜெயக்குமார் அவர்களே, அன்புராஜ் அவர்களே,
இந்த மாநாட்டினை சிறப்பாக நடத்துவதற்கு அரும்பாடுபட்டு, ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேலாக தன்னுடைய உழைப்பை அளித்திருக்கக்கூடிய பகுத்தறி வாளர் கழக மாநிலத் தலைவர் அருமைத் தோழர் செயல் வீரர், சீரிய பகுத்தறிவாளர் இரா.தமிழ்ச்செல்வன் அவர்களே,
பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் அளிப்பு
அவரோடு ஒருங்கிணைந்து அருமையான நல் லிணக்கத்தோடு செயல்பட்டு, இன்றைக்கு இந்த மாநாட் டின் சார்பாக - முதல் கட்டமாக என்று சொல்லலாம் என நான் நினைக்கிறேன் - 3 லட்சம் ரூபாயை பெரியார் உலகத்திற்கு இங்கு அளித்திருக்கக்கூடிய அவருடைய கூட்டுத் தோழர்கள் பொதுச்செயலாளர்கள் வி.மோகன் அவர்களே, ஆ.வெங்கடேசன் அவர்களே,
செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர்
மொக்தியார் அலி
கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன் அவர்களே, அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் அவர்களே, மாவட்டப் பகுத்தறிவாளர் கழக செயலாளர் ரகுநாதன் அவர்களே, இணைப்புரை வழங் கியிருக்கக்கூடிய மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்குப் பெருவாரியான பணிகளை ஏற்று செயல்பட்ட நம்முடைய அமைச்சர் அவர்களைப்பற்றி ஏற்கெனவே சொன்னேன்; அது போலவே, பல மடங்கு பாராட்டுக்குரிய செஞ்சி பேரூ ராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் அலி அவர்களே, ஒரு சிறந்த இளைஞர், கொள்கையைப் புரிந்த இளைஞர், கொள்கைக்காக தன்னுடைய இளமையையும் சிறப் பாகக் கொடுத்து,
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
என்று வள்ளுவர் சொன்னதைப்போல, மிக அரு மையாக செயல்படக்கூடிய இளைஞர் அவர்.
செஞ்சி ஜமாத் தலைவர் சையத் மஜித் அவர்களே,
விழுப்புரம் மண்டல செயலாளர் இளம்பரிதி அவர் களே, விழுப்புரம் மாவட்ட செயலாளர் பரணிதரன் அவர்களே,
எல்லாவற்றையும்விட இந்த மாநாட்டிற்கு ஒரு தனிச் சிறப்பு என்னவென்றால், திருக்குவளையின் சார்பாக என்னை எடை போட்டு இருக்கிறார்கள்.
உங்களுக்கெல்லாம் தெரியும் திருக்குவளை கலைஞர் பிறந்த ஊர்; அந்த ஊரிலிருந்துதான் நம்மு டைய பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தோழர் மேகநாதன் அவர்கள் - இந்த மேகநாதன் என்ற பெயரே பல பேருக்குத் தெரியாது; அந்தப் பெயர் இராவ ணனுடைய மைந்தனின் பெயர். இந்திரஜித் என்று சொல்வார்கள்.
என்னை எடை போட்டுப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்
நம்முடைய இயக்கத்தில் தீவிரமாக இருக்கக் கூடிய மேகநாதன் அவர்கள், என்னை எடை போட்டுப் பார்க்கவேண்டும் என்று விரும்பினார்.
எடைக்கு எடை உங்களுக்கு நாணயம் கொடுக்கப் போகிறோம் என்று நம்முடைய பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர், அந்தச் செய்தியை என்னிடம் லேசாகக் கிசுகிசுத்தார்.
அப்பொழுது நான் ஒன்று சொன்னேன், என்னுடைய எடை மிகக் குறைவான எடையாகும். அமைச்சரையும் சேர்த்து அமர வைத்திருந்தால், எடை அதிமாக வந்திருக்கும். வெறும் உடலில் மட்டுமல்ல, உள்ள சரக்கிலும் எடை உள்ளவர்.
அந்தக் குறைபாட்டை நீக்கக்கூடிய அளவிற்கு, என்னுடைய எடைக்கு கொடுத்தால், அது பாதித் தொகைதான் வந்திருக்கும். 50 ஆயிரம் ரூபாயை எடையாகக் கொடுத்தார்கள்.
இதுவரையில் எனக்கு எடைக்கு எடை நாண யம் கொடுத்திருக்கிறார்கள்; எதுவும் என்னு டைய வீட்டிற்குப் போகாது; விடுதலை அலுவலகத் திற்குத்தான் போகும்; பொது அமைப்புகளுக்குத் தான் போகும்; ‘விடுதலை’யின் சந்தாக்களுக் காகத்தான் பயன்பட்டது.
60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்கள் கொடுப்பதை இங்கேயே தொடங்கியிருக்கிறார்கள்!
60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்கள் கொடுப்பதை இங்கேயே தொடங்கி வைத்துவிட்டார்கள். எனவே, ஓராண்டு சந்தா 2000 ரூபாய்; அரையாண்டு சந்தா ரூ.1000.
25 ஆண்டு சந்தாவை இங்கேயே கொடுத்துத் தொடங்கி வைக்கிறேன் என்பதற்கு அடையாளமாக, உற்சாகப்படுத்துவதற்காக தராசைக் கொண்டு எடையிட்டுத் தந்தார்கள்.
மற்ற இடங்களில் எடைக்கு எடை கொடுத்தார்கள்; எடைக்கு அதிகமாகவே கொடுத்ததுதான் செஞ்சி மாநாடு என்று சொல்லக்கூடிய அளவில், தோழர் மேகநாதன் அவர்களுக்கு என்னுடைய அன்பை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநாட்டிற்காக எல்லா தோழர்களும் பாடு பட்டார்கள். நம்முடைய செந்தில்வேலன் அவர்கள், சுடரொளி சுந்தரம் அவர்கள், அதேபோல, நம்முடைய தென்னரசு, அண்ணாமலை, பாபு, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோர் எல்லோருமே அரும்பாடுபட் டா£ர்கள். அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே உரையாற்றியவர்களின் உரைகள் எல்லாம் ஆய்வுரைகள். எனவே, அதற்குமேல் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்கு நன்றியுரை சொல்வதுதான் என்னுடைய வேலை.
அரங்கத்திற்கு வராமல், திறந்தவெளியில் மாநாட் டினை நடத்தியிருந்தால் இன்னும் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.
மழையின் காரணமாக, இந்த மாநாட்டினை அரங் கத்தினுள் நடத்துவதற்கு மிகச் சிறப்பாக உடனடியாக செய்யக்கூடிய ஆற்றல் நம்முடைய அமைச்சருக்குத்தான் உண்டு; அவருடைய தோழர்களுக்குத்தான் உண்டு.
ஆகவே, எல்லோருடைய உரையும் மிக அற்புதமாக அமைந்தது.
என்னுடைய தலைதாழ்ந்த நன்றி!
பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் என்ற முறையில், மாநாட்டிற்காக உழைத்தவர்களுக்கு, உரையாற்றிய பெருமக்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
இன்னும் கொஞ்சம் நேரம் நான் உரையைத் தொடர்ந்தால், 19 ஆம் தேதி மாநாடு - 20 ஆம் தேதி மாநாடாக மாற்றப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. நான் உங்களை அதிக நேரம் அமர வைக்க விரும்பவில்லை.
மூன்று செய்திகளை மட்டும் சுருக்கமாக சொல் கிறேன்.
‘திராவிட மாடல்’ - அழகாக சொன்னார் நம்முடைய சகோதரர் எழுச்சித் தமிழர் அவர்கள், எந்த இடத்தில் விட்டாரோ, அங்கே இருந்து கொஞ்சம் விளக்கமாக சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
திராவிடம் என்றால் என்ன?
பல பேர் நினைக்கிறார்கள், திராவிடம் என்றால் புரியாமல் சொல்கிறார்கள் என்று.
எங்களுக்கு ஒன்றும் புரியாமல் அந்த சொல்லை நாங்கள் பயன்படுத்தவில்லை.
கடவுள் மாதிரியான விஷயமல்ல திராவிடம். பகுத்தறிவாளர் இயக்கம் ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? எதனால்? என்று கேள்வி கேட்கக்கூடிய ஓர் இயக்கம்.
பகுத்தறிவைப்பற்றி தந்தை பெரியார்
இது ஒன்றும் கடவுள் பிரச்சினையல்ல.
பகுத்தறிவைப்பற்றி சொல்லும்பொழுது, பெரியார் அவர்கள் மிக எளிமையாக பதில் சொன்னார்.
கடவுளுக்கு என்ன விளக்கம் சொல்கிறார்கள், பக்தர்கள், நம்பக்கூடியவர்கள்.
‘‘கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்’’
என்று.
அதற்கு என்ன அர்த்தம்?
‘‘பார்த்தவன் சொன்னதில்லை; சொன்னவன் பார்த்ததில்லை’’ என்பதுதான்.
பார்த்தவன் சொன்னதில்லை; சொன்னவன் பார்த்ததில்லை என்றால், அதற்கு ஜீரோ என்று அர்த்தம்.
திராவிடம் அப்படிப்பட்டதல்ல. திராவிடம் என்பது, ஒரு இடத்தை மய்யப்படுத்துவது அல்ல. திராவிட தத்துவத்தைக் கொண்ட ஒரு நாட்டு அமைப்பு ஏற்படவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில்தான், திராவிட நாடு என்று வந்தது.
திராவிடம் என்பதன் அடையாளம் என்ன?
திராவிட நாடு என்பது அவர் சொன்னதுபோன்று, சென்னை ராஜதானியாக இருந்தபொழுது, ஒரிசா சேர்ந்திருந்தது. அதற்கடுத்து ஒரிசா போய்விட்டது. அப்பொழுதும் திராவிட நாடுதான் கேட்டோம். அதற்குப் பிறகு மற்றவை போயின - அப்பொழுதும் திராவிட நாடுதான் கேட்டோம்.
திராவிடம் என்பதன் அடையாளம் என்ன?
எல்லாருக்கும் எல்லாம் -
அனைவருக்கும் அனைத்தும்
என்பதுதான் திராவிடம்.
இன்னாருக்கு இதுதான் -
தலையெழுத்து -
இவர்கள் மட்டும்தான் படிக்கவேண்டும் என்பதுதான் ஆரியம்.
படிக்காதே என்று சொன்னது ‘ஆரிய மாடல்’
படி என்று சொன்னது ‘திராவிட மாடல்.’
இன்றைக்கு இந்த இயக்கம் இல்லையென்றால், நம் பெயருக்குப் பின் டிகிரியைப் போட்டுக் கொள்கிறோமே, அந்த டிகிரி இருக்குமா? நாமெல்லாம் படித்த பட்டதாரி களாக ஆகியிருப்போமா? சட்டக் கல்லூரிக்குப் போயி ருப்போமோ? அல்லது பொறியியல் கல்லூரிகளுக்குத் தான் போயிருப்போமோ? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
அனைவருக்கும் அனைத்தும்
என்பதுதான் திராவிடம்
எனவே அனைவருக்கும் கல்வி. கல்வி கற்ற அனை வருக்கும் உத்தியோகம் - இவை அத்தனையும் சொல் வதுதான் - அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் திராவிடம்.
இதை நடைமுறையில், மக்களாட்சியாக இருந்து - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஓர் ஆட்சி செய்வதற்குப் பெயர்தான் திராவிட மாடல்.
திராவிட மாடலுக்கு நூறாண்டு காலத்திற்குமேல் வரலாறு உண்டு - பின்னணி உண்டு.
அதைவிட்டுவிட்டு, நம்மூரில் என்ன சொல்கிறார்கள்? புதிதாக ஒன்று கிளம்பியிருக்கிறது - அது என்னவென் றால், இது ஆன்மிக பூமி - இது ஆன்மிகம் - இது பெரியார் பூமி இல்லை; திராவிட பூமி இல்லை - இது ஆன்மிக பூமி என்று சொல்கிறார்கள்.
ஆன்மிகம் என்ற சொல்
எப்படி வந்தது?
ஆன்மிகம் என்ற சொல் இருக்கிறதே, அது எப்படி வந்தது? என்று கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள்.
ஆன்மிகம் என்றால், ஆன்மா - ஆன்மிகம்.
ஆன்மா என்பது என்ன சொல்? நம்முடைய தமிழ்ப் புலவர்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறு. புலவர்கள் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.
என்ன அந்தத் தவறு என்று சொன்னால், வடமொழிக் கருத்துதான் ஆத்மா - அந்த ஆத்மாவை ஆத்மா என்று எழுதித் தொலைத்தால், அது நம்முடைய சங்கதி இல்லை - அது வேற சங்கதி - நமக்கு சம்பந்தமில்லாதது - வேற ஆளுக்கு சம்பந்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந் திருக்கும்.
சனாதன தர்மம் என்று சொல்கிறார்களே, அப்படி சொல்லும்பொழுதே, அது நமக்கு சம்பந்தப்பட்டது அல்ல என்பது மிகத் தெளிவாக தெரியும்.
(தொடரும்)
‘திராவிட மாடல்’ ஆட்சியை எதிர்ப்போம்; ஆட்சியைக் கவிழ்ப்போம் என்கிறார் ஒருவர் புரியாமல் -
‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது ஓர் இரும்புக்கோட்டை - இதில் மோதினால் அவர்களின் மண்டைதான் உடையும்!
செஞ்சி ப.க. மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையுரை
செஞ்சி, ஜூன் 25 திராவிட மாடல் ஆட்சியை எதிர்ப் போம்; ஆட்சியை நாங்கள் கவிழ்த்துவிடுவோம் என்கிறார் ஒருவர். எந்தக் கொம்பனாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைத்துப் பார்க்க முடியாது. இது ஓர் இரும்புக் கோட்டை - செஞ்சிக்கோட்டையிலிருந்து சொல்கிறேன் - இது இரும்புக்கோட்டை - இதில் யாரா வது மோதினால், அவர்களுடைய மண்டைதான் உடையும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு
கடந்த 19.6.2022 அன்று மாலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற் றினார்.
அவரது தலைமையுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
சனாதன தர்மம் என்று சொல்கிறார்களே, அப்படி சொல்லும்பொழுதே, அது நமக்கு சம்பந்தப்பட்டது அல்ல என்பது மிகத் தெளிவாக தெரியும்.
தந்தை பெரியார்தான் மிக அழகாக சொன்னார், நீ எதையாவது அடையாளம் காணவேண்டும் என்றால், அந்தப் பெயரைப் பார் என்பார். எப்பொழுதும் அவர் மிக எளிமையாக சொல்லிக் கொடுப்பார் அந்தப் பாடத்தை.
ஒரு பண்டிகையின் பெயரா? அந்தப் பண்டிகை நம்முடைய பண்டிகையா? பிறருக்குக்கு உரியதா? இறக்குமதி செய்யப்பட்டதா? நமக்கு சொந்தமா? என்று கேட்டால்,
தீபாவளி - ஆயுதப் பூஜை, இராமநவமி, அட்சய திருதியை என்று சொன்னால், வாயில் நுழையாது. அதன்படியே, அது நமக்கு சம்பந்தமில்லை. தமிழுக்கும், தமிழருக்கும், திராவிடருக்கும் சம்பந்தமில்லை என்ப தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
பொங்கல், திருநாள் என்றால், மிகத் தெளிவாகத் தெரியும், அது நம்முடையது என்று. மிகச் சுருக்கமான அடையாளம் இது. இதற்காகப் பெரிய ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.
அதுபோன்று வரும்பொழுது, ஆத்மா என்ற சொல்லை, ஆன்மா என்று ஆக்கினார்கள் நம்முடைய புலவர்கள்.
மன்னிப்பதற்குத் தயாராக இல்லை என்றார் பெரியார்!
பெரியார்தான் கேட்டார், கடவுளை நம்பச் செய்து, பிரச்சாரம் செய்து அவர்தான் ஜாதியை உண்டாக்கினார், அவர்தான் பேதத்தை உண்டாக்கினார் என்று சொன்ன வனைக்கூட நான் மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்; அவனை குழப்பவாதி என்று விட்டுவிடலாம். ஆனால், ஆத்மா என்ற ஒன்றைக் கண்டுபிடித்தான் பாருங்கள், அவனை நான் மன்னிப்பதற்குத் தயாராக இல்லை என்று சொன்னார்.
ஏனென்று கேட்டால், கற்பனையிலேயே மோசமான கற்பனை அது.
ஆத்மா என்றால் என்னவென்று கேட்டால், அதற்கு சாவே கிடையாது.
கைலாசத்திற்குப் போனார் நித்தியானந்தா - அவ ரைக் காவல்துறையினரும், அவருடைய பக்தர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ‘‘எல்லோரும் வாங்க, கைலாசத்திற்கு, விசா கொடுக்கிறேன்’’ என்கிறார்.
ஆத்மா என்பது மாறாததாம்; ஒவ்வொருவருக்கும் ஆத்மா இருக்கிறதாம்.
ஆத்மாவிற்கு அழிவில்லை என்கிறீர்கள்; உடலுக்குத்தான் அழிவு என்று சொல்கிறீர்கள், சரி.
ஆத்மா அழியவே அழியாது என்று சொல்கிறார்கள்
ஒருவர் இறந்து போனவுடன் அந்த உடலை எரிக்கிறோம் அல்லது புதைத்துவிடுகிறோம்.
ஸ்கைபுரியர்கள் இறந்தால் அவர்களுடைய உடலை கழுகுக்கு வைத்துவிடுகிறார்கள்.
எரிப்பதும், புதைப்பதும்தான் நம்முடைய நாட்டில் பெரும்பாலும்.
உடல் நம் கண் முன்னால் எரிக்கப்படுகிறது - எலும்பு களை எடுத்து நீரில் கரைத்துவிடுகிறார்கள். புதைத்தால், அது அப்படியே மண்ணுக்கடியில் மக்கிப் போகிறது.
ஆனால், ஆத்மா என்பது அங்கிருந்து கிளம்பி, இன்னொரு கூட்டிற்குள் போய் புகுந்துகொள்கிறதாம். அதுதான் திரும்பி ரொட்டேஷனில் வருகிறதாம். ஆகவே, ஆத்மா அழியவே அழியாது என்று சொல் கிறார்கள்.
தந்தை பெரியாரின் கேள்வி
பெரியார் ஒரு கேள்வி கேட்டார், அதுதான் பகுத்தறிவு.
சரி, அப்படியொன்று இருப்பதாக நான் ஒப்புக் கொள்கிறேன்; நான் மறுக்கவில்லை. ஆரம்பத்தில் 20 கோடி ஜனத்தொகை இருந்தால், அதே ஜனத்தொகை தானே இன்றைக்கும் இருக்கவேண்டும்; அது எப்படி 130 கோடியாக ஆனது? என்று கேட்டார்.
அது என்ன கட்டிப் போட்டால், குட்டிப் போடுகிற செடியா? என்று.
ஆத்மா என்றால், அது ரொட்டேஷன் - ஒரு உடலை விட்டு இறங்கினால், இன்னொரு கூட்டிற்குள் போய் புகுந்துவிட்டது என்று சொன்னால், அதை நம்ப முடியுமா?
ஆத்மாவிற்கு அழிவில்லை என்கிறார்கள்.
சனாதன தர்மம் என்று சொல்லிக்கொண்டு இன் றைக்கு அலைகிறார்களே, நம் மக்களின் வரிப் பணத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு, திராவிட மாடல் ஆட்சிக்கு விரோதமாக இருக்கக்கூடிய ஓர் ஆளுநர், அவர் மீண்டும் மீண்டும் சனாதன தர்மா என்று சொல்கிறார்.
சனாதன தர்மம் என்பது ஆரியர்களுக்கு - முழுக்க முழுக்க மனுதர்மத்திற்காக இருக்கக்கூடியது.
மனுக்குலத்தினுடைய ஒரு நீதி அது.
காசி பல்கலைக் கழகத்தில், 106 ஆண்டுகளுக்கு முன்பு...
இது காசி பல்கலைக் கழகத்தில், 106 ஆண்டுகளுக்கு முன்பு, பாடப் புத்தகமாக வைத்திருக்கின்ற அதிகாரபூர் வமான சனாதன விளக்கம்.
அத்தனை ஆதாரங்களும் எங்களிடம் இருக்கிறது. மற்றவர்கள் போன்று சாதாரணமாக சொல்லிவிட்டுப் போகிறவர்கள் அல்ல நாங்கள். எதையும் ஆதாரத்தோடு சொல்லிப் பழக்கப்பட்டவர்கள்.
ஆரியர்களுடைய தர்மம்தான் சனாதன தர்மம். 106 ஆண்டுகளுக்கு முன்பு பாடத் திட்டமாக வைத்தி ருந்தார்கள். இன்றைக்கு அதைக் கொண்டு வந்து நம்முடைய தலையில் கட்டினால் என்ன அர்த்தம்?
ஆரிய தர்மத்திற்கு என்ன அடிப்படை என்றால், குலதர்மம்.
குலதர்மம் என்றால் என்ன?
தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்பதுதான்.
போன ஜென்மத்தில் செய்த பாவம் என்கிறார்கள்
ஏன் அப்படி பிறந்தார்கள் என்று கேட்டால், அவர வர்களுடைய ஆத்மாவினுடைய பூர்வ ஜென்ம கர்ம பலன் என்று சொல்கிறார்கள்.
ஏன் கீழ்ஜாதியாகப் பிறந்தான் என்று கேட்டால், அவன் போன ஜென்மத்தில் செய்த பாவம் என்கிறார்கள்.
நான் ஒரு பாவமும் செய்யவில்லையே, என்றால்,
உன் கர்மா அப்படி செய்தது என்கிறார்கள்.
இப்படி ஒன்றும் புரியாததைச் சொல்லி, உளறிக் கொட்டுகிறார்கள். எதைப்பற்றியும் கேள்வி கேட்காதே, நம்பு, நம்பு என்று சொல்கிறார்கள்.
இப்பொழுது அதை வைத்துத்தான் நம்மை கீழ் ஜாதியாக்குகிறார்கள்.
சகோதரர் முத்தரசன் அவர்கள் அருமையான ஒரு கருத்தை சொன்னார். புரட்சியாளர் அம்பேத்கரைப்பற்றி சொல்லும்பொழுது, ‘‘ஒருவன் அடிமையாகவே இருந் தால், அது அவனுக்குப் புரியவேண்டும். புரியாமல் அடிமையாக இருந்தால், அவனால் எதிர்த்துச் பேச முடியாது; அந்த அடிமை விலங்கை உடைக்க முடியாது’’ என்று சொன்னார்.
அதனால்தான் நாம் சொல்கிறோம், அடிமையாக இருக்காதே என்று.
நாங்கள் யாருக்கும் அடிமையாக இருக்கமாட்டோம்; எங்களுக்குக் கீழே யாரையும் அடிமையாக்க மாட்டோம் என்று அம்பேத்கர் சொன்னார்.
நம்முடைய மக்களை அழுத்தி வைத்திருந்தனர்
‘திராவிட மாடல்’ ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு, இந்தக் கட்டுக்கதைகள் எல்லாம், அதாவது ஜீவாத்மா, பரமாத்மா, அண்டர் ஆத்மாக்களை யெல்லாம் சொல்லி, நம்முடைய மக்களை அழுத்தி வைத்து, கீழ்ஜாதியாக்கி, படிக்காதவனாக்கி, படிக்கக் கூடாதவனாக்கி வைத்திருந்ததை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
அடிமையாக இருப்பதில் போட்டி போடுகிறார்கள்
பெரியார்தான் கேட்டார், நீ அடிமையாக ஆனது பற்றிகூட கவலையில்லை. அடிமையாக இருப்பதில் போட்டி போடுகிறாயே என்றார்.
அவர் சொன்னதுபோல், இன்றைக்கும் அதுபோன்ற நிலை இருக்கிறது; அரசியலிலும் இருக்கிறது.
அடிமையாக இருப்பவர்களின் விலங்கை உடைக்க வேண்டும் என்று சொல்வது ‘திராவிட மாடல்’. அடிமை யாக இருப்பதில் போட்டிப் போடுவது மட்டுமல்ல, துரோகம் செய்கிறார்கள்; தன்னை விற்றுக் கொள் கிறார்கள்.
புரட்சிக்கவிஞர்கூட கவிதை எழுதினார் - ‘‘உன்னை விற்காதே!’’ என்ற தலைப்பில்.
பெரியார் கேட்டார், ‘‘உன்னை விற்றுத் தொலை - ஒரு நல்ல விலைக்காவது விற்றுத் தொலை; குறைந்த விலைக்கு விற்றுக்கொள்கிறாயே’’ என்று.
இங்கே ஒருவர் புரியாமல் பேசுகிறார், தமிழ்நாட்டில் காவிக் கட்சி மிகவும் பலமாக இருக்கிறது; நாங்கள் திராவிட மாடல் ஆட்சியை எதிர்ப்போம்; ஆட்சியை நாங்கள் கவிழ்த்துவிடுவோம் என்கிறார்.
எங்கள் கோட்டை சரியாது; கோட்டையிலே ஓட்டை போட முடியாது
எந்தக் கொம்பனாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைத்துப் பார்க்க முடியாது.
ஏனென்றால், இது சாதாரண விஷயமல்ல - இது ஒரு மணல் வீடல்ல சரிவதற்கு. இது ஒரு இரும்புக் கோட்டை - செஞ்சிக்கோட்டையிலிருந்து சொல் கிறேன் - இது இரும்புக்கோட்டை - இதில் யாராவது மோதினால், அவர்களுடைய மண்டை உடையுமே தவிர - நாங்கள் உடைக்கமாட்டோம் - எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கைக் கிடையாது. மோதி னால் அவர்களுடைய மண்டை உடையுமே தவிர, எங்கள் கோட்டை சரியாது; கோட்டையிலே ஓட்டை போட முடியாது என்பதை நன்றாகப் புரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் திராவிட மாடல்.
நம்முடைய மக்கள் வரிப் பணத்தில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் சனாதனத் தைப்பற்றிப் பேசுகிறார்.
முகத்தில் பிறந்த ஜாதி, தோளில் பிறந்த ஜாதி, தொடை யில் பிறந்த ஜாதி, காலில் பிறந்த ஜாதி என்கிறார்கள்.
பாரதிதாசன்தான் கேட்டார், ‘‘ஏண்டா, முட்டாள் பயல்களாக இருக்கிறீர்களே, இத்தனை இடத்தில் பிறக்க முடியுமா?’’ என்று கேட்டார்.
தாய்மார்கள், சகோதரிகள் மன்னிக்கவேண்டும்.
என்னுடைய மனம் புண்பட்டு இருக்கிறது
நாம் இதுபோன்று கேட்கும்போது, ஆகா, எங்கள் மனம் புண்பட்டுவிட்டது என்பார்கள். உன் மனம் புண்படுவதற்காக நான் பேசவில்லை; என்னுடைய மனம் புண்பட்டு இருக்கிறது. ஏனென்று கேட்டால், எங்கள் சகோதரர்களை கேவலப்படுத்தி இருக்கிறாயே - உன்னுடைய மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறாயே!
தமிழ்நாடு ஆளுநர், முனிவர்களைப்பற்றியும், ரிஷிகளைப்பற்றியும் பேசுகிறார்.
நீதிபதிகள்கூட, இந்து லாவில் தீர்ப்பு எழுதுகிற பொழுது, சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று எழுதும்பொழுதுகூட,
யக்ஞ வல்லியர் சொல்கிறார்,
நாரதர் ஸ்ருதி சொல்கிறார்,
சாபச் சஞ்சா சொல்கிறார் என்று சொன்னார்கள்.
இதோ இந்த சிறிய புத்தகத்தில் பெரியார் கேட்டார், ரிஷிகள் பிறப்பு எப்படிப்பட்டது?
புராணத்தில் இருப்பதைத்தான் சொல்லியிருக்கிறார்.
பெரியார் கேட்ட கேள்விக்கு இதுவரை எவரும் பதில் சொல்லவில்லை
பெரியாரை நோக்கி மற்றவர்கள் கேட்ட கேள்வி களுக்கெல்லாம் பெரியார் பதில் சொன்னார். பெரியார் கேட்ட கேள்விக்கு இதுவரை எவரும் பதில் சொல்ல வில்லை.
கலைக்கோட்டு ரிஷிகளின்மூலம் பிறப்பெல்லாம் இயற்கைக்கு மாறானதும், ஆபாசமும், அசிங்கமும் நிறைந்தவையாக, அறிவுக்குப் பொருந்தாதவையாக இருக்கின்றன.
முனிவர்களின் பிறப்பைப் பாருங்கள்
எடுத்துக்காட்டாக,
கலைக்கோட்டு ரிஷி மானுக்குப் பிறந்தார்
ஜம்புக ரிஷி நரிக்குப் பிறந்தார்
அகஸ்தியர் குடத்திற்குப் பிறந்தார்
வசிஷ்டர் ஊர்வசிக்குப் பிறந்தார்
சாதன்யவர் விதவைக்குப் பிறந்தார்
மாண்டவியர் தவளைக்குப் பிறந்தார்
சுவர் கிளிக்குப் பிறந்தார்
ஜாம்புவந்த ரிஷி கரடிக்குப் பிறந்தார்
அஸ்வத்தாமன் குதிரைக்குப் பிறந்தார்
ஏண்டா, மனுஷனுக்குப் பிறந்தவன் ஒரு ஆள்கூட இல்லாதவனை வைத்துக்கொண்டு, இதுதான் தத்துவம் என்று சொல்லி, இதுதான் இந்த நாட்டை வளர்ச்சியடையச் செய்யும் என்று சொல்கிறீர்களே நியாயமா? என்று கேட்டார்.
அந்த வளர்ச்சி போய்க் கொண்டிருக்கின்ற நேரத்தில், முன்னோக்கி போகவேண்டிய இடத்தில், பின்னோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய வேலை என்ன?
பகுத்தறிவாளர் கழகங்கள் நாடுதோறும், ஊர்தோறும், வீதி தோறும் உருவாக்கப்படல் வேண்டும்.
அரசியலை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்; நம்முடைய வேலை என்ன?
கோட்டைக்குள்ளே போவது இல்லை.
கோட்டைக்கு வெளியே இருந்து, கோட்டையில் எவரும் ஓட்டை போடாமல் பார்த்துக் கொள்வதுதான் நம்முடைய வேலை.
ஆகவே, பகுத்தறிவாளர் கழக மாநாட்டினை ஏன் நடத்துகிறோம்?
பகுத்தறிவாளர் கழக மாநாட்டில், இப்படிப்பட்ட அறிஞர்களை அழைத்து மக்களுக்கு அறிவுரை சொல்கிறோம்!
அரசியல் கல்வியைக் கொடுப்பதே தமிழ்நாடுதான்!
தோழர்களே, இரவில் இவ்வளவு நேரம் அமர்ந்து பொதுக்கூட்டம் கேட்கின்ற ஒரே ஒரு மாநிலம் எதுவென் றால், தமிழ்நாடுதான். வட நாட்டில் எல்லாம் இப்படி பார்க்க முடியாது.
இந்த மாதிரி ஒரு அரசியல் கல்வியைக் கொடுப்பதே இங்கேதான்.
முற்போக்கான மாநிலமான கேரளாவில்கூட, இவ்வளவு நேரம் கூட்டம் நடத்தமாட்டார்கள். அப்படி கூட்டம் நடந்தாலும், நாற்காலிகள் எல்லாம் காலியாகத் தான் இருக்கும்.
அண்ணா சொன்னாரே, பெரியார்தான் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் என்று. அவருடைய வகுப்பு மாலை நேரக் கல்லூரியாகத் தொடங்கும். மாலையில் ஆரம் பித்து 3 மணிநேரம் பேசுவார்.
உரையைத் தொடங்கும்பொழுதும், கடைசியாக உரையை முடிக்கும்பொழுதும்,
நான் சொல்றேன் என்பதற்காக நாம்பாதீர்கள்! என்று சொல்வார்.
இப்படி சொல்கிற தலைவர் உலகத்தில் வேறு எங்காவது உண்டா?
நான் சொல்வதை நம்பாதீர்கள்; என் அறிவுக்கு சரி என்று பட்டதை சொன்னேன்; உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள் என்பார்.
பெரியார் அவர்கள், குடியாத்தத்தில் உரையாற்றும் பொழுது, ஒரு கல்லூரி மாணவன் கேட்டார், யார் சொல்வதையும் நம்பாதீர்கள் என்று சொல்கிறீர்களே, நீங்கள் சொல்வதை நம்புவதா? இல்லையா? என்று.
(தொடரும்)
சட்டம் கொண்டுவருவது அரசின் வேலை -அந்த இணைப்பை உருவாக்குவதுதான் பகுத்தறிவாளர் கழகம்
செஞ்சி ப.க. மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையுரை
செஞ்சி, ஜூன் 26 பகுத்தறிவு இயக்கம் - பின்னால் வரக்கூடிய பட்டாளத்திற்கு, முன்னால், பாதை - பாலம் அமைத்துத் தருகின்ற தூசிப் படை. சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ். முன்னால் நாங்கள் சென்று கொண்ட இருப்போம் - எங்கெங்கே என்ன இருக்கின்றன? எங்கெங்கே கண்ணி வெடி வைத்திருக்கிறார்கள்? என்று பார்த்து, அதை அகற்றிக் கொண்டு செல்வது எங்களுடைய வேலை. பின்னால், சட்டம் கொண்டு வருவது அரசின் வேலை. இன்றைக்கு அந்த இணைப்பை உருவாக்குவதுதான், பகுத்தறிவாளர் கழகம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுத்தறிவாளர் கழக பொன்விழா
நிறைவு மாநாடு
கடந்த 19.6.2022 அன்று மாலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரை யாற்றினார்.
அவரது தலைமையுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
உன் அறிவு என்ன சொல்லுகிறதோ, உன் பகுத்தறிவு என்ன சொல்லுகிறதோ, அதைக் கேள்!
உடனே, பெரியார் அவர்கள், நான் சொல்வதையும் நம்பாதே! என்றார்.
பிறகு யார் சொல்வதை நம்புவது என்று அந்த மாணவன் கேட்டார்.
உன் அறிவு என்ன சொல்லுகிறதோ, உன் பகுத்தறிவு என்ன சொல்லுகிறதோ, அதைக் கேள் என்றார்.
அந்த சிந்தனையினால்தான், இங்கே திருமாவளவன்,
அந்த சிந்தனையினால்தான், முத்தரசன்,
அந்த சிந்தனையினால்தான், மனிதநேயர் மஸ்தான்
அந்த சிந்தனையினால்தான் நாமெல்லாம் ஒன்று பட்டு வருகிறோம்.
ஏனென்று கேட்டதினால்தானே, ஒலிபெருக்கி -
ரிஷி முறைத்துப் பார்த்ததும், பொத்தென்று கீழே விழுந்ததா, இது?
இங்கே மாநாட்டு நிகழ்வுகளை வீடியோவில் பதிவு எடுக்கிறார்களே, இது எந்த முனிவர் கண்டுபிடித்தது?
கல்யாண மந்திரத்தில் சொல்வார்களே, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, கின்னரர்கள் சாட்சியாக என்று சமஸ்கிருத்ததில் சொல்வார்கள்.
வீடியோ சாட்சி ஏற்றுக்கொள்ளப்படும்
ஆனால், நீதிமன்றத்திற்குச் சென்றால், இந்த சாட்சி கள் கண்டிப்பாக நிற்காது. எந்த ரிஷியும் சாட்சிக்கு வரமாட்டார்.
வீடியோ சாட்சியாக என்று சொன்னால், அது கண்டிப்பாக சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
காரணம், இது அறிவியல்; அது மூடநம்பிக்கை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவேதான், பகுத்தறிவு என்பது ஒவ்வொரு வருக்கும் வாழ்க்கையில் தேவை.
பகுத்தறிவுதான் நம்மை வளர்ச்சியடைய செய்கிறது. பகுத்தறிவினால்தான், நாம் வேட்டிக் கட்டிக் கொண்டிருக்கின்றோம்.
யானை பெரிய உருவம்தான் -
சிங்கம் பெரிய விலங்குதான் -
ஏன் யானை பிறந்த மேனியாக இருக்கிறது -
மனிதர்களாகிய நாம் ஏன் வேட்டிக் கட்டிக் கொண்டிருக்கிறோம். அம்மணமாக யாராவது வெளியே வருகிறார்களா? வருவதில்லை.
அப்படி வடநாட்டில் இருப்பார்கள்; யோகி, முனிவர், ரிஷி என்று சொல்லப்படுகின்றவர்கள். ஒருவர் அரை சட்டை போட்டிருப்பார்; இன்னும் டிகிரி உச்சத்தில் போன முனிவராக இருந்தால், கோவணம் மட்டும் கட்டிக் கொண்டிருப்பார். மகாபெரிய ரிஷி என்றால், அந்தக் கோவணமும் இருக்காது.
இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து, மனிதனை நாகரிகப்படுத்துவதற்கு, வளர்ச்சியடைய வேண்டும் என்று சொல்வதுதான் பகுத்தறிவாளர் கழகம்.
மனிதகுலம் வளரவேண்டும்; அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்!
அதுதான் ‘திராவிட மாடல்.’
எனவே, மனிதகுலம் வளரவேண்டும். அனை வருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்.
எல்லாருக்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
என்று வள்ளுவர் சொன்னார்.
இதுதான் இந்த இயக்கம். இதுதான் பகுத்தறிவாளர் கழகம்.
நிறைய பேர் பசியோடு இருக்கிறார்கள்; சாப்பிட வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் பந்தியில் என்ன செய்வது? என்று கேட்டால், அதுதான் சமூகநீதி.
அதற்கும் பகுத்தறிவு அடிப்படையில் பதில் சொன் னார்கள்.
பசியேப்பக்காரனை முன்னால் உட்கார வை; புளியேப்பக்காரனை அப்புறம் சாப்பிடலாம் என்று வெளியில் நிறுத்து. அதுதான் இட ஒதுக்கீடு.
ஆகவே நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உள்ளூர் தோழர்களே -
இந்த இயக்கம் என்பது இருக்கிறதே, அது யாருக்காக?
இந்த இயக்கத்தை, இந்த ஆட்சியை, ‘திராவிட மாடல்’ ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்றவுடன் என்ன சொல்லுகிறார்கள் என்றால்,
பிரதமர் மோடியிலிருந்து இந்தத் தவறை செய்கிறார்கள்.
எங்கள் வாரிசுகள் எல்லாம்,
எங்கள் கொள்கையில் இருப்பது தவறா?
அது என்னவென்றால், வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என்கிறார்கள்.
நான் சொல்கிறேன், எங்கள் வாரிசுகள் எல்லாம், எங்கள் கொள்கையில் இருப்பது தவறா?
நன்றாக நினைத்துப் பாருங்கள்,
அப்பா ஒரு கட்சி, மகன் இன்னொரு கட்சி, இன்னொரு கொள்கை என்று இருந்தால், வீட்டில் கலவரம்தான் ஏற்படும்.
இரணியன் - பிரகலாதன்
இராவணன் - விபீஷணன்
கும்பகர்ணன் போன்று இருந்தால், அவன் சாதாரணமான ஆள் என்று சொல்லிவிட்டான்.
கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன், இதோ என் னுடைய கைகளில் இருப்பது ‘ஜூனியர் விகடன்’ இதழ். தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்கின்ற பத்திரிகை.
‘‘பா.ஜ.க.வில் வாரிசு அரசியல்’’
ஜூனியர் விகடன் பட்டியல்
27.2.2022 அன்று வெளிவந்த ஜூனியர் விகடன் இதழில், ‘‘பா.ஜ.க.வில் வாரிசு அரசியல்’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தது.
பிரதமர் சொல்லியதால், அதற்கு நான் பதில் சொல் கிறேன். இங்கே அரைவேக்காடுகள் உளறிக் கொண் டிருக்கின்றன; அதற்கெல்லாம் நான் பதில் சொல்வது கிடையாது. நீங்களும் அவற்றைப் பொருட்படுத்தாதீர்கள்.
ஏனென்றால், ஒன்றுமில்லாமல், கடமுடவென்று கல்லைப் போட்டு உருட்டிக் கொண்டிருந்தால், சத்தம் மட்டும்தான் கேட்கும். அதற்கெல்லாம் உடனே பதில் சொல்லக்கூடாது.
நிறைய பேருக்கு வரலாறே தெரியாது. திராவிட இயக்கம் இல்லையென்றால், உன்னுடைய பெயருக்குப் பின்னால் போடுகிறாயே, அந்த மூன்று எழுத்தே மிஞ்சியிருக்காதே - இட ஒதுக்கீடு இருந்ததினால்தானே நாம் படித்திருக்கின்றோம்.
மண்டல் கமிசன் இருந்ததினால்தானே, அய்.பி.எஸ்., களாக, அய்.ஏ.எஸ்.களாக வர முடிந்தது.
அனுராக் தாகூர் - ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தந்தை: பிரேம் குமார் துமால் - மேனாள் முதலமைச்சர், ஹிமாச்சல் பிரதேசம்
தர்மேந்திர பிரதான் - ஒன்றிய கல்வித்துறை அமைச்சர், தந்தை: தேபேந்திர பிரதான் - மேனாள் ஒன்றிய அமைச்சர்
ஜோதிராதித்ய சிந்தியா - ஒன்றிய விமானப் போக்கு வரத்துத்துறை அமைச்சர், தந்தை: மாதவராவ் சிந்தியா - மேனாள் ஒன்றிய அமைச்சர்
ராஜ்நாத் சிங் - ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர், மகன்: பங்கஜ் சிங் - சட்டமன்ற உறுப்பினர், உத்தரப்பிரதேசம்
கருநாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தந்தை: எஸ்.ஆர்.பொம்மை - மேனாள் முதலமைச்சர், கரு நாடகா
துஷ்யந்த் சிங் - மக்களவை எம்.பி, தாய்: வசுந்தரா ராஜே - மேனாள் முதலமைச்சர் ராஜஸ்தான்
வருண்காந்தி - மக்களவை எம்.பி, தாய்: மேனகா காந்தி - மக்களவை எம்.பி
நீரஜ் சேகர் - மாநிலங்களவை எம்.பி, தந்தை: சந்திரசேகர் - மேனாள் பிரதமர்
ராஜ்வீர் சிங் - மக்களவை எம்.பி, தந்தை: கல்யாண் சிங் - மேனாள் முதலமைச்சர், உத்தரப்பிரதேசம்.
இப்படி ஒரு பக்க அளவிற்குப் படத்தோடு செய்தி போட்டு இருக்கிறார்கள்.
நான் அவ்வளவையும் படித்தால் உங்களுக்கு சலிப்பாக இருக்கும்.
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், எங்களுக் குக் கூச்ச நாச்சம் இல்லை. தி.மு.க.விற்கும் சொல்கிறேன்,
தி.மு.க.வை அண்ணா தொடங்கிய வரலாறையெல் லாம் திருமா அவர்கள் இங்கே சொன்னார்.
பெரியாருடைய கொள்கையில்
என்றைக்கும் மாற்றம் இல்லை
இது பகுத்தறிவாளர் இயக்கம் - அடிப்படையில் திராவிட கலாச்சாரம், பண்பாட்டை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த இயக்கம். பெரியாருடைய கொள்கையில் என்றைக்கும் மாற்றம் இல்லை.
அரசியலில் வந்து பார்க்க முடியுமா? என்று சிலர் சவால் விட்டார்கள்.
சரி, அரசியலுக்கும் வரலாம் என்று வந்தார்.
தி.மு.க.விற்கும், மற்ற அரசியல் கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு என்றால்,
அடிப்படையில் தி.மு.க. சமுதாய சீர்திருத்தத்தை மய்யப்படுத்தி இருக்கின்ற அரசியல் கட்சி.
முதல் நாள் சமுதாய சீர்திருத்த மாநாடு போடுவார்கள்; இரண்டாம் நாள் அரசியல் மாநாடு போடுவார்கள்.
நம்முடைய மாவட்டத்திலேயே உண்டு. ஏன் இன் றைக்கு இரண்டையும் சேர்த்திருக்கிறார்கள் என்றால், இரண்டையும் சேர்த்ததுதான் ‘திராவிட மாடல்.’
இன்றைக்கு இரட்டைக் குழல், மூன்றாவது குழலும் இருக்கின்றது. நாங்கள் எல்லாம் வித்தியாசம் பார்ப்ப தில்லை.
‘திராவிட மாடல்’ ஆட்சி நடப்பதினால்தான், அமைதி இருக்கிறது
ஆகவே நண்பர்களே, பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழா நிறைவு மாநில மாநாடு, ஓர் அற்புதமானது. அதுமட்டுமல்ல, நல்ல ‘திராவிட மாடல்’ ஆட்சி நடப்ப தினால்தான், இங்கே அமைதி இருக்கிறது.
இஸ்லாமிய பெருமக்கள் எல்லாம் இங்கே வந்து நமக்கு சிறப்பு செய்தார்கள். நம்முடைய கொள்கை என்னவென்று அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், அவர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல், இங்கே வந்து சிறப்பு செய்தார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்?
மதத்தால் மாறுபட்டு இருந்தாலும், மனதால் ஒன்று பட்டவர்கள்தான் இந்த நாட்டில் உள்ளவர்கள்.
இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்களோ, கிறித்தவர் களோ - அரபு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வர்களோ அல்லது இசுரேலிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டவர்களோ அல்ல.
எட்டு தலைமுறைக்கு முன்பு, 10 தலைமுறைக்கு முன்பு அவர்கள் யார் என்றால், நீ சொல்கின்ற அர்த்த முள்ள இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான். ஏன் இந்து மதத்தை விட்டு, மற்ற மதத்திற்குச் சென்றார்கள்?
கடலூரில், இஸ்லாமானவர் தெரு!
எங்கள் ஊரில் உள்ள தெருவுக்கு இஸ்லாமானவர் தெரு என்று சொல்வார்கள். இஸ்லாம் ஆனவர் தெரு.
ஏன் அவர்கள் அந்த மதத்திற்குப் போனார்கள்?
‘‘தொடதே, நெருங்காதே, கிட்டே வராதே, படிக் காதே!’’ என்று நீ சொன்னாய்.
‘‘வா, நெருங்கு, அணைத்துக் கொள்ளலாம், படி!’’ என்று அவர்கள் சொன்னார்கள், உடனே அங்கே போய்விட்டார்கள்.
குறை உன்னிடம் இருக்கிறதா, அவர்களிடம் இருக்கிறதா?
அவரவர்களுக்கு என்று ஒரு உணவு முறை இருக்கிறது. இங்கே வரும்பொழுது பார்த்தேன், பீப் பிரியாணி கிடைக்கும் என்று பெரிய போர்டு வைத்திருக்கிறார்கள்.
டில்லியில் இதுபோன்ற நிலை உண்டா? அல்லது வடநாட்டில், உத்தரப்பிரதேசத்தில் இப்படி போர்டு வைத்தால், அவர் வெளியில் இருப்பாரா?
பகுத்தறிவு சிந்தனை என்பது பெரியார் மண் என்பதற்கு அடையாளம்தான்!
அந்த உரிமை, பகுத்தறிவு சிந்தனை என்பது பெரியார் மண் என்பதற்கு அடையாளம்தான் - திராவிட பூமி என்பதற்கு அடையாளம்தான்.
எண்ணுவதற்குத் தடை இல்லை -
உண்ணுவதற்கும் தடையில்லை.
இதுதான் திராவிட மாடல் ஆட்சி!
எல்லாருக்கும் எல்லாமும்!
எனவேதான்,
அறிவுச்சுதந்திரம், மனித உரிமைகள், சமத் துவம் இவை அத்தனையையும் உருவாக்கித் தருவதுதான் நம்முடைய வேலை.
சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ்
பகுத்தறிவு இயக்கம் - பின்னால் வரக்கூடிய பட்டா ளத்திற்கு, முன்னால், பாதை - பாலம் அமைத்துத் தருகின்ற தூசிப் படை. சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ்.
முன்னால் நாங்கள் சென்று கொண்ட இருப்போம் - எங்கெங்கே என்ன இருக்கின்றன? எங்கெங்கே கண்ணி வெடி வைத்திருக்கிறார்கள்? என்று பார்த்து, அதை அகற்றிக் கொண்டு செல்வது எங்களுடைய வேலை.
பின்னால், ஆட்சி அமைப்பது, சட்டம் கொண்டு வருவது அவர்களின் - அரசின் வேலை.
இன்றைக்கு அந்த இணைப்பை உருவாக்குவதுதான், பகுத்தறிவாளர் கழகம்.
எனவே, சிறப்பாக இந்த மாநாட்டினை நடத்திய அமைச்சருக்கும், ஒத்துழைத்த அத்துணை பேருக்கும், இறுதி வரையில் இருந்தவர்களுக்கும், மாநாட்டில் பங்கேற்று அற்புதமாக உரையாற்றிய அறிஞர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.
மீண்டும் சந்திப்போம்!
பகுத்தறிவு என்பது ஒரு பொது காரியம் -
பொதுப் பண்பு - அதைப் பயன்படுத்தத் தவறாதீர்கள் என்று கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.