பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், மோகன், அரூர் இராஜேந்திரன், அழகிரிசாமி, ஊமை.ஜெயராமன், புதுச்சேரி சிவ.வீரமணி, துரை.திருநாவுக்கரசு, பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தமிழ் பிரபாகரன், கோபு.பழனிவேல், அண்ணா சரவணன், சுப்பராயன், ரகுநாதன் மற்றும் கழகத் தோழர்கள் உற்சாகமாக வரவேற்றனர் (செஞ்சி, 19.6.2022)
திண்டிவனம் மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் பரந்தாமன், வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், இளம்பருதி மற்றும் தோழர்கள் (19.6.2022).
சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன் நினைவரங்கத்தில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன் விழா நிறைவு மாநாட்டில் சவுந்தரி நடராசன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்தார் (செஞ்சி, 19.6.2022)
பகுத்தறிவாளர் கழக பொன் விழா நிறைவு மாநில மாநாட்டில் தமிழர் தலைவருக்கு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, முனைவர் ஆர்.டி. சபாபதி மோகன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் ஆகியோர் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தனர் (செஞ்சி - 19.6.2022)
பகுத்தறிவாளர் கழகத்திற்கு என்று தனியே ஒரு இலச்சினையை (சின்னம்) தமிழர் தலைவர் அவர்கள் அறிமுகப்படுத்தினார். (எல்.இ.டி. திரையில் காண்பிக்கப்பட்டது) மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று (பலத்த கரவொலி) கைதட்டி சிறப்பு தீர்மானத்தை வரவேற்றனர். (முழு விவரம் பின்னர்)
* அரசு பணிமனைகளில் கோயில் கட்டுவது, பூமி பூஜை, ஆயுத பூஜைகள் சட்ட விரோதங்களே!
* வன்முறை ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு அரசு, தனியார் பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது
* விஞ்ஞான சாதனமான ஊடகங்கள் அறிவியலைப் பரப்பட்டும், மூடநம்பிக்கைகளை ஒழிக்கட்டும்!
* கடவுள் நம்பிக்கை அறிவை, பொருளை, பொழுதை விரயப்படுத்தும் வீண் வேலையே! றீ சட்ட ரீதியாக ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்!
செஞ்சி, ஜூன் 19 அரசு பணிமனைகளில் கோயில் கட்டுவது, பூமி பூஜை, ஆயுதப் பூஜைகளைக் கொண்டாடுவது சட்ட விரோதம் என்றும், விஞ்ஞான சாதனங்களான ஊடகங்கள் மூடநம்பிக்கைகளைப் பரப்பக் கூடாது என்றும், சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமென்று திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் செஞ்சியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தந்தை பெரியார் பிறந்த நாளை 'சமூகநீதி' நாள் என்றும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை "சமத்துவ நாள்" என்றும் அறிவித்த தமிழ்நாடு அரசைப் பாராட்டும் தீர்மானம் உள்பட 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
19.6.2022 ஞாயிறன்று செஞ்சியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1:
மக்களிடத்தில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க தனித்துறை தேவை!
இந்திய அரசமைப்புச் சட்டம் 51கி(லீ) என்னும் பிரிவில் மக்களிடத்தில் அறிவியல் மனப்பான்மை, சீர்திருத்தம், மனிதநேயம் ஆகியவற்றை வளர்க்கச் செய்வது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப் பட்டுள்ளதால் மாநில, ஒன்றிய அரசுகள் இதற்கான ஒரு துறையை உருவாக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
மூடநம்பிக்கைக்கு எதிராக மகாராட்டிராவில் பகுத்தறிவாளர் தபோல்கர் 2010இல் தயாரித்த மூடநம்பிக்கை ஒழிப்பு வரைவு மசோதா அவரைச் சுட்டுக்கொன்ற பிறகு 2013இல் நிறைவேற்றப்பட்டது. அதே போன்று கருநாடகாவில் அன்றைய முதலமைச்சர் சித்தராமைய்யா ஆட்சியில் 2017இல் கொண்டுவரப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா பின்னர் 2020இல் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதாவை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2:
அரசுப் பணிமனைக்குள் கோயில் கட்டுவது - ஆயுத பூஜை போன்றவற்றை நடத்துவது தடை செய்யப்பட வேண்டும்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே அரசின் மதச்சார்பற்ற தன்மை வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுப் பணிமனை வளாகங் களுக்குள் கோயில் கட்டுவது, ஆயுத பூஜை போன்ற மதப் பண்டிகைகளைக் கொண்டா டுவது சட்ட விரோதமானதாகும். மாநில, ஒன்றிய அரசுகள் இதில் உறுதியாக இருந்து தடை செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
அரசுப் பணிமனைகள், அலுவலகங்கள், கட்டும்போது பூமி பூஜை செய்வது எல்லாம் மதச்சார்பின்மைக்கு விரோதம் என்பதையும் இம்மாநாடு மாநில, ஒன்றிய அரசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3:
நடைபாதைக் கோயில்களை அகற்றுக!
தமிழ்நாட்டில் 77,450 கோயில்கள் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளன. இவை அகற்றப்பட வேண்டும்; அதனை நிறைவேற்றாத மாநில அரசின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வரவேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அழுத்தம் திருத்தமாக தங்களின் தீர்ப்பில் 14.9.2010 அன்று கூறியுள்ளனர். இதுவரை செயல்படுத் தாதது நீதிமன்ற அவமதிப்பாகும். ஆகையால், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
பொது இடத்தைக் கடவுளே ஆக்கிர மித்தாலும் அதையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி திரு.என்.ஆனந்த் வெங்கடேஷ் 26.3.2022 அன்று திட்ட வட்டமாகத் தனது தீர்ப்பில் கூறி இருப்பதை இம்மாநாடு வரவேற்கிறது. இதனைச் செயல்படுத்துமாறு ஒன்றிய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4:
பாடத் திட்டத்தில் புராணங்கள்,
இதிகாசங்கள் இடம் பெறக் கூடாது!
பாடத் திட்டங்களில் புராணம், இதிகாசம் போன்றவற்றை இடம் பெறச் செய்வது - மாணவர்களைப் பிற்போக்குத் திசையில் இழுத்துச் செல்லும் என்பதால் அவற்றை இடம் பெறச் செய்யக் கூடாது என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5:
ஜாதியைக் குறிப்பிடுவது
தவிர்க்கப்பட வேண்டும்!
இடஒதுக்கீட்டுக்காக சமூகநீதிக் கண் ணோட்டத்தில் ஜாதி என்று கேட்கப்படும் படிவங்களில் ஜாதியைக் குறிப்பிடாமல் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. (பி.சி., எம்.பி.சி.), எஃப்.சி என்று பதிவு செய்யும் முறையைக் கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 6:
ஜாதி ஆணவக் கொலைகளுக்கு
முடிவு கட்டப்பட வேண்டும்!
ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் சமுதாய இயக்கங்கள் ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்தாலும், இதற்கென்று காவல்துறையில் ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தி, ஜாதி, மத மறுப்புத் திருமணங்களைச் செய்துகொள்வோர்க்குத் தக்க பாதுகாப்பினை அளிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தனி ஒதுக்கீடுக்கு (Inter-Caste Quota) வழி செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7:
அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்பதற்குப் பதில் ஜாதியை ஒழிக்கத் திருத்தம் தேவை!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பிரிவு தீண்டாமை ஒழிக்கப்படுவதாகக் கூறுகிறது. தீண்டாமை எனப்படும் நோய், ஜாதியின் ஆணி வேரிலிருந்து பிறக்கிறது. ஆகையால், அப்பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 8:
கைகளில் ஜாதி வாரியாக வண்ணக் கயிறுகள் கட்டுவது தடுக்கப்பட வேண்டும்!
கல்விக் கூடங்களில் தத்தம் ஜாதியை அடையாளம் காட்டுவதற்காக தனித்தனி வண்ணத்தில் இருபால் மாணவர்களும் கைகளில் கயிறுகளைக் கட்டி வருவதைக் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9:
கடவுள் பக்தியின் பெயரால் ஏற்படும் இழப்புகள்!
கடவுள் நம்பிக்கை, மூடநம்பிக்கை, பண்டிகைகள், சடங்குகள், நேர்த்திக் கடன்கள், ஆன்மிகப் பயணங்கள் எனப் பக்தியின் பெயரால் ஆண்டு ஒன்றுக்கு 197 நாள்களை வீணடிப்பதால், காலநட்டம், பொருள் நட்டம், பகுத்தறிவுச் சிந்தனை இழப்புகள் ஏற்படுகிற காரணத்தால், இத்தகைய இழப்புகளைத் தரும் நம்பிக்கைகளிலிருந்தும் செயல்பாடுகளிலிருந்தும் தங்கள் நலம் கருதி விடுபடுமாறு பொதுமக்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
இந்த வகையில் பகுத்தறிவாளர் கழகம், மக்கள் மத்தியில் அமைதியான முறையில் பில்லி, சூன்யம், மாந்த்ரீகம் இவற்றின் மோசடிகளை கலை நிகழ்ச்சிகள், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகள் முதலியவற்றைப் பயன்படுத்தியும், பகுத்தறிவுப் பிரச்சாரம் மூலமும் விளங்க வைக்க வேண்டும் என்று இம்மாநாடு முடிவு செய்கிறது. முற்போக்கு இயக்கங்களும், தன்னார்வக் குழுக்களும், பகுத்தறிவாளர் கழகத்தின் அவசியமான - தேவையான இத்தகைய பணிகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறது. கல்விக் கூடங்களில் வாரம் ஒரு நாள் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்திட ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 10:
தமிழ்நாடு அரசுக்கு - முதல் அமைச்சருக்குப் பாராட்டு!
தந்தை பெரியார் பிறந்த நாளை "சமூகநீதி" நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்த தமிழ்நாடு அரசை - குறிப்பாக மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களை இம்மாநாடு மனந்திறந்து பாராட்டுகிறது.
தீர்மானம் 11:
ஊடகங்களின் கடமை!
விஞ்ஞான சாதனங்களைப் பயன்படுத்தி அச்சிடப்படும் ஏடுகள், இதழ்கள் மக்களை மூடநம்பிக்கையில் மூழ்கடிக்கும் வகையில் ஆன்மிகச் சிறப்பு இதழ்களை வெளியிட்டு, மக்களின் பொருளையும் அறிவையும் பறிக்கும் போக்கு ஒரு வகையான சுரண்டல் என்பதை இம்மாநாடு மிகுந்த வேதனையோடு தெரிவிக்கிறது. மின்னணு சாதனங்களான தொலைக்காட்சிகளும் இதே போக்கைப் பின்பற்றுவது வருத்தத்திற்குரியதாகும். விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி அஞ்ஞானத்தைப் பரப்புவது அறிவு நாணயமற்ற செயல் என்பதோடு கேபிள் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளை நடத்துவதற்கான விதிமுறைகள் (The Cable Television Network Rules, 1994) HK¾ 6 (1)(j)¡ð® No Programme should be carried in the cable service which encourages superstition or blind belief ன்படி என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளமைக்கு எதிரான செயலாகும்.
பில்லி, சூனியம், ஏவல், பல்வகை ஜோதிடங்கள், ராசிக்கல், எந்திரத் தகடு விற்பனை என்று மூடநம்பிக்கைகளைப் பரப்பும் விளம்பரங்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புவதை ஊடகங்கள் நிறுத்திட வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h)இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக வரையறுத்துள்ள அறிவியல் மனப்பான்மையைப் பரப்பும் பணிக்கு, குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையாவது பகுத்தறிவு, அறிவியல் சிறப்பு இதழ்களை வெளியிட வேண்டுமாய் ஏடுகளையும், இதழ்களையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. தொலைக்காட்சிகளும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் அறிவூட்டலைச் செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 12:
ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்குத் தடை தேவை!
அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் பிற நிறுவனங்கள் மற்றும் பொதுஇடங்களில் ஆர்.எஸ்.எஸ். அளிக்கும் வன்முறைப் பயிற்சிக்கு தமிழ்நாடு அரசின் அனுமதி கிடையாது. ஆர்.எஸ்.எஸ். மூன்று முறை ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஆகும்.
மன்னார்குடியில் 11.4.1982 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும், தமிழ்நாடு சட்டப் பேரவையில் 29.3.1982 அன்று முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களும், ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகளுக்குத் தடை விதிப்பதை உறுதிப்படுத்திக் கூறியுள்ள நிலையில், அரசுக்குச் சொந்தமான இடங்களிலும், பொது இடங்களிலும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வன்முறைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதை அரசின் கவனத்துக்கு இம்மாநாடு கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகள், அரசு சம்பந்தப்பட்ட இடங்களில் தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக