முனைவர் த.ஜெயக்குமார்
பகுத்தறிவு உலகின் 19ஆம் நூற்றாண்டில் உலகப்புகழ் அறிவு மாமேதை, ஒப்பற்ற பகுத்தறிவுப் பரப்புரையாளர், அமெரிக்க வல்லரசு நாட்டில் 1833ஆம் ஆண்டு பிறந்தவர் கர்னல் இராபர்ட் கிரீன் இங்கர்சால் ஆவர். அதே நூற்றாண்டில், சற்றேறக்குறைய 46ஆண்டுகளுக்குப் பின் 20ஆம் நூற்றாண்டின் முதன்மை தத்துவச் சிந்தனையாளராகவும், ஈடு இணைற்ற சமூக சீர்திருத்த சமத்துவக் கொள்கைப் போராளியாகவும், இந்தியத் திருநாட்டில் 1879ஆம் ஆண்டு பிறந்தவர்தான் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் எனும் ஈ.வெ.ரா. (ஈரோடு வெங்கட்ட நாயக்கர் ராமசாமி) ஆவர்.
பிறப்புச் சூழலே அறிவுச் சிந்தனைக்குத் திறவுகோலானது
இங்கர்சாலின் தந்தையார் ரெவரென்ட் ஜான் இங்கர்சால் பெரும் கிறித்துவ மதப் பாதிரியார் ஆவார். அவர் வேதப் புத்தகத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே நம்பக்கூடிய கடவுள் நம்பிக்கைகொண்ட மதப் பற்றாளராவார். அவர் தனது மகனையும் பாதிரியாராக்க வேண்டும் என்கிற பேராசையின் காரணமாக இங்கர்சாலை கண்டிப்புடன் வளர்த்ததோடு, கிறித்துவ மத வேதப் புத்தகமாம் பைபிளை வரிவரியாக வாசித்திடக் கட்டளையிட்டார். அவரும் விரும்பிப் படித்தார், ஆழமாகச் சிந்தித்தார். அவரது ஆற்றல்மிகு சுயஅறிவுச் சிந்தனையின் காரணமாக படிக்கப் படிக்க ஏராளமான சந்தேகங்கள் ஏற்பட்டன. அவை யாவும் கேள்விக் கணைகளாக வெடித்தன. அதற்கான விடைகள் சரியாகப் புலப்படவில்லை. மகனின் சந்தேகங்களிலும், வினாக்களிலும் நியாயம் இருப்பதை உணர்ந்த அவரது தந்தை, அவரது மூளையைக் கெடுக்காமல், மனசாட்சிக்கு உண்மையாக இருக்கும்படி சுதந்திரம் கொடுத்தார்.
அதேபோன்றுதான், பெரியாரின் தந்தையார் வெங்கட்டநாயக்கர் அவர்களும் மத ஆச்சாரங்களைக் கொண்ட வைணவ பக்தராவார். அதனால் நாள்தோறும் அவரது வீட்டில் இராமாயணம் போன்ற புராணக் கதாகாலட்சபங்கள், பக்தி பஜனைகள், நிகழ்ந்தவண்ணம் இருந்தன. இதனைக் கேட்டுக் கேட்டு இளம் வயதிலேயே அவரது சிந்தனையில் படும் பொது அறிவு வினாக்களுக்கு, விடைதேட முயற்சித்தார் பெரியார். அதோடு பெரியாருக்கு இருந்த ஒருவித குறும்புத்தனத்தின் காரணமாகவும் தலைவிதி போன்ற புரட்டுகளை எதார்த்தமாகத் தெளிவுபடுத்தினார். அதோடு நன்மை - தீமைகளுக்கும் நாமே காரணம் எனவும் உணரவைத்தார். மேலும், அவருக்கு நம்பிக்கையில்லாத கடவுள், புராணம் தொடர்பான பிரசங்கங்களில் குதர்க்கமான கேள்விகளைக் கேட்டு விதண்டாவாதம் செய்வார். இவ்வாறாக நடைமுறைப் பட்டறிவின் மூலம் பெரியார் அவர்கள் ஒருவித இயற்கைப் பகுத்தறிவைப் பெற்றதோடு, அவருக்கு அப்போது தோன்றிய அய்யங்களுக்கு அறிவுத்தடை போடப்படாமல், சுயசிந்தனை நீரோட்டத்தோடு வளர்ந்ததால், பின்னர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உலகத் தத்துவச் சிந்தைனயாளர்களுள் முதன்மையராகவும் இன்று உலகப் பெரியாராகவும், பகுத்தறிவுத் தந்தையாகவும் பரிணமிக்கச் செய்தது.
மாமேதைகளின் அறிவுக்கும் - கல்விக்கும் சம்பந்தமில்லை
இங்கர்சாலுக்கு பள்ளிப் படிப்பு என்பது குறைவுதான். ஆனால் நல்ல ஞாபகசக்தி கொண்டவர். மொழிகளை உபயோகிப்பதிலும், பேசுவதிலும் கதை சொல்வதிலும் திறமைமிக்கவர். சுயமாக நூல்களைப் படித்துப் படித்து ஏராளமான செய்திகளை மனதில் நிலைநிறுத்திக் கொண்டவர். பின்னாள்களில் சட்டங்களையும் படித்து தன்னை ஒரு வழக்கறிஞராக்கிக் கொண்டார்.
பெரியார் அவர்களோ 5 ஆண்டுகள் மட்டுமே தொடக்கக் கல்வி வரையில் பள்ளிப் படிப்பு பயின்று, தமது 10ஆம் வயதோடு படிப்பை நிறுத்திக்கொண்டவர். படிப்பைக் காட்டிலும் பெரியாருக்கு தொழிலில் அறிவுக்கூர்மை இருந்தது. 12 வயதிலேயே தமது தந்தையின் தரகுக்கடையாம் கமிஷன் மண்டிக்கு திறமைமிகு வணிகராகத் திகழ்ந்திட்டார். அதனூடே தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி போன்ற கலைக்களஞ்சியத் தொகுப்பு நூல்கள், இராமாயணம் உள்ளிட்ட புராணப் புத்தகங்களைப் படித்துப் படித்து அதனை ஆய்ந்து தோய்ந்து அறிவைப் பெருக்கிக் கொண்டதோடு, சுயமரியாதை, பகுத்தறிவு, சீர்திருத்தக் கருத்துகளை தமது சுயசிந்தனைகளோடு அவர்தம் பேச்சிலும் _ எழுத்திலும் பரப்பலானார்.
உலகிலேயே அதிமுக்கியமானவை - சுதந்திரமும், சுயமரியாதையும்
1877இல் இங்கர்சால் தமது கொள்கைப் பிரகடனமாக முழங்கியவை: “உலகத்திலேயே அதி முக்கியமான விஷயம் சுதந்திரம். அது உணவைவிட, உடையைவிடப் பெரியது. சிற்பம், ஓவியம், கலைகள் யாவற்றிலும் உயர்ந்தது. எல்லா மதங்களைக் காட்டிலும் சுதந்திரமே நனி சிறந்தது. இத்தகையை இணையில்லா மதிப்புடைய மனிதச் சுதந்திரம் எனும் மரகதத்தைக் காப்பாற்ற நான் எதனையும் இழக்கத் தயாராக இருக்கின்றேன்’’ என உலகிற்குப் பறைசாற்றினார்.
பெரியார் அவர்கள் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தபோது, தமது தலையாய திட்டமாகக் குறிப்பிட்டது யாதெனில்: “ஈவெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன்’’ என்றும், மேலும் சுதந்திரம் குறித்து தமது சிந்தனை வெளிப்பாடாக ‘குடிஅரசு’ இதழில் (18.7.1937) குறிப்பிட்டு எழுதியதாவது:
“மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.’’ இவ்வாறாக உலகில் “சுயமரியாதை’’ என்னும் ஒற்றைச் சொல்லை ஆயுதமாக்கி வெற்றி கண்டவர் பெரியாரே!
சுயமரியாதைக்கு பெரியார் தந்த விளக்கம் யாதெனில்: சொந்த அறிவுக்கு மரியாதை _ என் சுயமரியாதையை இழக்காமல், பிறர் சுயமரியாதையையும் பாதிக்காமல் அதாவது “எல்லோருக்கும் எல்லாமும்’’ என்பதாகும். நுட்பமான இச்சொல்லாடலில் பகுத்தறிவுச் சிந்தனை_சமத்துவ உணர்வு _ சமூக மேம்பாடு ஆகிய முக்குணங்களும் விளங்கும்.
கொள்கை லட்சியங்களுக்காகப் பதவியை விரும்பாதவர்கள்
1868ஆம் ஆண்டு இங்கர்சால் அவர்கள் அமெரிக்க_இல்லினாய்ஸ் மாநிலத்தின் அட்டர்னி ஜெனரலாக பெரிய பதவி வகித்தபோது, அவருக்கு கவர்னர் பதவி தேடி வந்தது. ஆனால், அந்த வாய்ப்பினை அவர் மறுத்தார். காரணம் அவர் தன்னுடைய கொள்கைகளை சிறிதளவும் விட்டுக்கொடுக்க மனமற்றவராக இருந்தார். அப்போது மறுப்புக்கான காரண விளக்கத்தில் அவர் குறிப்பிட்டதாவது: “என்னுடைய நம்பிக்கை என்னைச் சேர்ந்தது, அது இல்லினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்ததன்று. இந்த உலகத்திற்கே மன்னராக ஆவதாயினுங்கூட என்னுடைய மன உணர்ச்சிகளில் ஒன்றையேனும் என்னால் அடக்கி விரட்ட முடியாது’’ என்று கூறி அப்பதவியை நிராகரித்ததோடு, தம் கொள்கைக்காக கடைசிவரை அரசாங்கத்தார் அளிக்ககூடிய எப்பதவியையும் ஒத்துக் கொள்வில்லை.
பெரியார் அவர்களையும் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த சமயத்தில், இந்தியாவின் சென்னை ராஜதானியின் பிரீமியர் முதல்வராகப் பதவியேற்க வருமாறு 1940இல் கவர்னராக பொறுப்பு வகித்த ஆர்தர் ஹோப் அவர்களும், பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக 1942இல் கவர்னராலும், வைசிராயாலும் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தனர். அரசியலை விரும்பாத பெரியார் அவர்கள் பதவி தனை துச்சமென உதறித் தள்ளினார். தமது நோக்கம் சமூக சீர்திருத்தமே என அறுதியிட்டுக் கூறியவர் பெரியார்.
அதேபோன்று 1919இல் பெரியார் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்தபோதும், அதன் ஒத்துழையாமை இயக்கக் கொள்கைக்காக தாம் பொதுவாழ்க்கையில் அதுநாள் வரை வகித்து வந்த ‘ஹானரரி மாஜிஸ்திரேட்’ உள்ளிட்ட 29 கவுரவப் பதவிகளை ஒரே நாளில், ஒரே தாளில் ராஜினாமா செய்து பதவிகளைத் துறந்து வரலாறு படைத்தவர் என்பதும் பெரியாரின் தனிச் சிறப்பாகும்.
சமூக அரசியல் மாற்றத்திற்குத் தூண்டுகோலான இவர்களின் சொற்பொழிவுகள்
இங்கர்சாலின் சொற்பொழிவுகள் அனைத்தும் கேட்போர் உள்ளத்தை இளகச் செய்து இழுத்ததுடன், அவர்களை வயப்படவும் செய்தது. அமெரிக்க நாட்டில் அதுவும் அக்காலத்தில் கட்டணம் செலுத்தி இங்கர்சாலின் பகுத்தறிவு ததும்பும் மதவாதத்திற் கெதிரான - கடவுள் நம்பிக்கைக்கெதிரான - நாத்திக நன்னெறிக் கருத்துகளைக் கேட்க மக்கள் திரண்டனர் என்பது உலக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாகும்!
1877இல் “மனிதன் - மங்கை - குழந்தை அவர்தம் சுதந்திரம்’’ எனும் தலைப்பிலும், 1880 தலைவர் தேர்தலில் கார்பீல்டு, 1884 - அறவழி, 1885 - பொய்யும் அற்புதமும், 1894 - ஆபிரகாம் லிங்கன், வால்ட்டெயர், வேதப் புத்தகம், 1897- நான் ஏன் கடவுள் நம்பிக்கையற்றவர்? மனிதரை சீர்திருத்தும் விதம், இதேபோன்று உண்மை உணர்ச்சி, கடவுள்கள், 1899 - மதம் என்றால் என்ன? பேய்_பூதம்_பிசாசு அல்லது ஆவி, எந்த வழி? என்பன போன்ற பிரபலமான சொற்பொழிவுகள் சமூக அரசியல் மாற்றத்திற்கு தூண்டுகோலாக அமைந்தன. அவை யாவும் புத்தகங்களாகவும் பிரசுரிக்கப்பட்டன என்பதே பகுத்தறிவுக் கொள்கைப் பரவலுக்குச் சான்றாக அமைந்தன. இதைவிடக் கூடுதல் சிறப்பொன்று உண்டென்றால் அதுதான், இங்கர்சாலின் சொற்பொழிவு நூல்களை தமிழாக்கம் செய்து 1933களிலேயே 6 நூல்கள் வெளியிட்டவர்தான் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியார் அவர்களது சொற்பொழிவு குறித்துக் கூறவேண்டுமானால், நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போன்று ஆழமாக, அதாவது மூலபலத்தோடு தர்க்கம் செய்து வேரோடும், வேரடி மண்ணோடும் பெயர்த்தெடுக்கும் கடப்பாரை போன்ற தாக்கத்தைக் கொண்டவையாகும். பெரியாரது தத்துவத் தாக்கம் என்பது அண்ட பிண்ட சராசரம் வரை பாயும் ஈட்டி போன்ற வலிமையானவையாகும். இந்தியாவின் முதன்முதல் மனிதஉரிமைப் போராட்டமாம் வைக்கம் பேராட்டம் என்பது 1924இல் மனிதன் தெருவில் நடக்க உரிமைக்கானது. இதில் பெரியாரின் தீண்டாமை ஒழிப்புக்கான சொற்பொழிவுகள் இந்தியாவையே புரட்டிப் போட்டது.
அதேபோன்று 1925இல் சமத்துவமற்ற சமூகத்தினை மேம்படுத்திட கல்வி - வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரியாக இடஒதுக்கீடு கேட்டுத் தொடர் போராட்டம் செய்தும், பின் காங்கிரஸ் பேரியக்கத்திலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டபோதும் பேசிய பெரியாரின் வாழ்வுரிமைச் சொற்பொழிவுகள் மிகப்பெரிய சமூகப் புரட்சியை உண்டாக்கியது என்றே சொல்லலாம். மேலும், பெரியாரின் பிரபலமான சொற்பொழிவுகளும், பத்திரிகை இதழ்களில் அவர் எழுதியவையும், பெரியார் சிந்தனை நூல்களும், மிகப்பெரிய விழிப்புணர்வுத் தாக்கத்தினையும்_உணர்ச்சியையும் - கிளர்ச்சியையும் உண்டு பண்ணி சுயமரியாதை சொரணைபெற்று பகுத்தறிவால் மேம்பட்டிட வழிவகுத்ததையும் அறியமுடிகிறது.
பெரியாரின் சிந்தனைச் செல்வங்களான அவர்தம் நூல்வரிகளிலிருந்து 1930 இந்தியாவின் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த முதல் சிந்தனை 1930 - ‘கர்ப்ப ஆட்சி’, 1934 - ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நவீன பெண்ணியத்துக்கான உலகின் முன்னோடி நூல், 1938 - பெரியாரின் தொலைநோக்கு அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடான ‘இனிவரும் உலகம்’, 1944 - ‘கிராம சீர்திருத்தம்’, ‘தத்துவ விளக்கம்’ இப்படியான 153க்கும் மேற்பட்ட நூல் வடிவிலான சிந்தனைச் செல்வங்கள்தாம் இந்தியாவில் நிலவி வந்த ஆரியர் - திராவிடர் எனும் சமத்துவமற்ற சமூகத்தினைச் சீர்திருத்தி, அடிமைப்பட்டிருந்த திராவிடர் சமுதாயத்தை சமூக பொருளாதார - அரசியலில் பெரும் மாற்றம் கண்டு முன்னேற்றமடைய தூண்டுகோலாக அமைந்தன என்பது புலனாகிறது.
(தொடரும்..)
- உண்மை இதழ், 16-31.10.20
முனைவர் த.ஜெயக்குமார்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
அடிமைத்தனத்தை நிலைநிறுத்திய மதத்தை உடைத்தெறிந்தனர்
மதம் குறித்த இங்கர்சாலின் சிந்தனைகளை நோக்குங்கால்: “மதம் என்பது ஒருவித பயமேயாகும்! மதம் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும், மனிதத் தன்மையையும், வீரத்தையும், பாதுகாப்பையும் போதிப்பதில்லை. மாறாக, கடவுளைத் தலைவனாக்கி மனிதனை ஏவலாளாக ஆக்கி அடிமைத்தனத்தை நிலைநிறுத்துகிறது. போலிக் கொள்கையிலேயே மதங்களெல்லாம் தொங்குகின்றன. கிறித்துவர்கள் பிற மதங்களெல்லாம் பொய் எனக் கூறிக் கொள்கிறார்கள். மதமின்றி மக்கள் முன்னேற்றமடைய முடியாதா? மதத்தால் எவ்வித உபயோகமுமில்லை. மதம் ஒருபோதும் மக்களை சிந்திக்கவிடவில்லை. மக்கள் உயிரோடு எரிக்கப்பட்டதும், கழுவேற்றப்பட்டதும் மதத்தால்தானே? ஆகவே, மதம் மனித அறிவுக்கு விரோதியாக இருந்து வருகிறது. மனிதனை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவில்லை.
இதற்கு ஒரே வழி மதக் கட்டுப்பாட்டை நீக்கி முழு சுதந்திரம் கொடுக்கவேண்டும். மதம் ஒருகாலும் மக்களைச் சீர்திருத்தாது. மாறாக, பயத்தால் அடிமைதான் படுத்தும். எனவே, அறிவை வளர்த்து, நியாயத்தைப் பாதுகாப்பதே உண்மையான நெறியாகும். அதனால் மதம் எனும் விலங்கை உடைத்தெறிந்து சுதந்திர மனிதர்களாக மாறுவோம்’’ என்றார் இங்கர்சால்.
சிந்தனைகளால் ஒன்றுபட்ட பெரியார் அவர்களோ, இந்திய நாட்டில் ஒருவர் பிறப்புரிமையாகிய சுயமரியாதைக்கு முக்கியமான செயற்கைத் தடையாய் இருப்பது மதம் என்றார். இந்து மதம் என்பதாக ஒரு கற்பனையை ஒவ்வொருவர் மீதும் சுமத்தியிருக்கிறார்கள் என்றார். மதம் என்பது நாட்டிற்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டும்? மனிதனுக்காக மதமா? மதத்துக்காக மனிதனா? ஆக மடமையை வளர்க்கும் மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார் பெரியார்.
இந்திய நாட்டில் பிறக்கும் மனிதன் ஒவ்வொருவருக்கும் பிறவியின் காரணமாக ஜாதியும், மதமும் கற்பிக்கப்பட்டு, அதனை அவனும் ஒப்புக்கொண்டு இழிவுகளைச் சுமந்து வந்தனர். சமத்துவமும் பொதுஉடைமையும் ஏற்பட வேண்டுமானால் முதலில் மதம் ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் _ சுதந்திரத்திற்கும் _ முற்போக்கிற்கும் _ சுயமரியாதைக்கும் விரோதமான மதம் ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் பெரியார். மதம் மனிதனுக்கு முட்டாள்தனத்தைக் கற்பிக்கிறது. அதனால் பெரிதும் மூடநம்பிக்கைகளை வளர்க்கிறது என்றார்.
தீண்டாமை ஒழிப்புக்கும், ஜாதி ஒழிப்புக்கும் முன்பாக மதத்தை ஒழித்தாக வேண்டும் என்றவர் பெரியார். முதலில் மனிதன் மனிதனாக்கப்பட வேண்டும்; பின் அவனுக்கு அறிவு வளர வேண்டும். எதையும் கண்மூடித்தனமாக நம்புவதைக் கைவிட வேண்டும் என்றவர் பெரியார். மனிதனை மனிதன் தொடக் கூடாது, தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்றவர்களைப் பார்த்து பெரியார் கேட்டார் “அவர்கள் யார் என்று?’’ அதுதான் இந்து மதம் கற்பிக்கும் வர்ணாசிரம தர்மம் என்றனர். அப்படியாயின் அம் மதத்தையும் அதற்கு மூலக் காரணமானவற்றையும் ஒழிப்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் வேலை என பெரியார் எடுத்துரைத்துத் தொண்டாற்றி, வெற்றியும் கண்டார்.
கடவுள் ஒரு பொய் நம்பிக்கை - கற்பனை என்றனர்
கடவுள் நம்பிக்கையைத் தகர்த்திட இங்கர்சால் எடுத்துரைத்த பகுத்தறிவு வாதங்கள் யாதெனில்: மனிதனால் கற்பனை செய்யப்பட்ட புனையப்பட்ட ஒரு பொருளே கடவுள், அதோடு புரோகிதர்கள் எனப்பட்டோரால் கடவுளைப் புகழ்வதும், விளம்பரம் செய்வதும்தான் தொழிலாகக் கொண்டிருந்தனர். உலகைப் படைத்ததாகக் கூறும் கடவுள்களுக்கு புவியின் வடிவம் எப்படி இருக்கிறது என்பதுகூடத் தெரியாமல், அது தட்டையாக இருப்பதாகக் கூறின. இக்கடவுள்கள் முன்பு கொலை புரிந்தோருக்கும், கற்பழித்தோருக்கும்கூட கடைத்தேற வழியுண்டு, மன்னிப்பு பெற மார்க்கமுண்டு.
கடவுளை ஒருவர் நம்பினால் அந்த நிமிடமே அவர்தம் அறிவைப் பறிகொடுத்து அடிமையாகிவிடுவார். நமது அறிவைப் பயன்படுத்த நமக்கு சுதந்திரம் வேண்டும். அதனைத் தண்டிக்க எந்தக் கடவுளுக்கும் பாத்தியம் இல்லை. அறியாமையும், பைத்தியமும் கலந்து ஏற்பட்ட நம்பிக்கையே கடவுள் எனும் பொய் நம்பிக்கை கற்பனையாகும் என்றார் இங்கர்சால். மக்களின் அறிவுச் சுதந்திரத்தினால் அடையும் விடுதலை அளவிடற்கரிய மதிப்புடையாகும்.“உன் கண்களைக் கட்டியிருக்கும் பக்தியை ஒழி, உன் இதயத்திலிருந்து பயத்தை விரட்டியடி, உன்னுடைய மூளையில் இடப்பட்டிருக்கும் மூடநம்பிக்கை விலங்கைத் தகர்த்தெறி’’ என்றார் மாமேதை இங்கர்சால் அவர்கள்.
நமது முன்னோர்கள் தெய்வங்களை தொழிற்சாலைப் பொருள்கள் போல உற்பத்தி செய்ததோடு, நோய்களைக்கூட தெய்வங்கள்தான் அனுப்பின என நம்பினர். எனவே, மனிதன்தான் தன்னைப்போலவே கடவுளையும் உருவகித்துள்ளான் என்பது தெளிவாகிறது. மனிதன் தன் அறியாமையினால் கடவுளை நம்புகிறான். பயத்தினாலே அதனை வணங்கவும் செய்கிறான். பக்தி கொள்வதுதான் மதத்தின் முக்கிய நோக்கமாகும். கடவுள் வழிபாடும், ஆராதனையும் நாகரிகமடையாத மக்களிடம் சர்வசாதாரணமாகக் காணலாம். நாகரிகம் அடைய அடைய, ஒருவன் தனது நம்பிக்கையை விலக்குகிறான். ஆக ஒன்றுமற்ற வெற்றிடமே கடவுளது இருக்கையாகும்.
பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தத்துவச் சிந்தனைகளும் கடவுள் எனும் கற்பனை ஒழிக்கப்பட்டால்தான் மனித சமுதாயம் சமநிலை பெற்று மறுமலர்ச்சி காண முடியும் என தம் அறிவு வழிப்பட்ட பிரச்சாரத்தினால் எடுத்துரைத்துள்ளார். அதனூடே மக்களுக்கு அறிவும், ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சி குறையும் என்றும், மேலும் அறிவும், ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் நம்பிக்கை வளரும் என நுட்பமாய்க் கண்டறிந்து தெளிவுபடுத்தியவர் பெரியார். குருட்டு நம்பிக்கையும், மூடப்பழக்கமும் அழிந்தால்தான் உலகில் ஒழுக்கமும் சமத்துவமும் நிலைபெறும் என்றார் பெரியார்.
கடவுள் எனும் கற்பனை கண்டுபிடிக்கப்பட்டதுமல்ல, தானாகத் தோன்றியதுமல்ல; மாறாக அது முட்டாள்களால் உண்டாக்கப்பட்டது என்று அறுதியிட்டுக் கூறினார். மேலும் “கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றால் கோபப்படுபவனை “இரட்டை முட்டாள்’’ என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்’’ என்பார் பெரியார். மனித சமூகத்தை சமமானதாகப் பாவித்திட தடையாக உள்ள ஜாதிக்கும், மதத்திற்கும் மூலக் காரணம் கடவுள் எனும் கற்பனைத் தன்மையேயாகும். எனவே, கடவுள் ஒழிப்பு என்பது அவசியமாகிறது என்கிற அடிப்படையில்தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்பை முன்னிறுத்தியது.
கடவுள் எனும் கற்பனை அறிவை மாத்திரமல்ல, ஒழுக்கம், நேர்மை, அன்பு, அருள், ஒற்றுமை, சமநிலை முதலியவற்றைப் பாழ்படுத்தி, வளர்ச்சியைக் கெடுத்து, விஞ்ஞானத்தை மறைத்து, அஞ்ஞானத்தை வளர்த்து வருகிறது. எனவேதான் கடவுள் நம்பிக்கை ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பது பெரியாரின் தீர்க்கமான எண்ணமாகும். உலகில் இப்போது ரஷ்யா, சீனா, ஜப்பான், சயாம், பர்மா, சிலோன், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட மேலைநாடுகளில் பெரும்பாலோருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. காரணம் அங்கெல்லாம் காணும் விஞ்ஞான வளர்ச்சியே!
மனித சமுதாயத்தில் கடவுள் கற்பனை புகுத்தப்படாமலிருந்தால் இன்று பேதமற்ற - கவலையற்ற - துக்கமற்ற வாழ்வு நிலையை எய்தியிருப்பான். மனிதனிடம் கடவுள் பக்தி இருப்பதற்கு ஆசைதான் காரணமாகும். ஆக எண்ணங்களும் - ஆசைகளும் - பேராசைகளுமே நம்பிக்கைக்கும், வழிபாட்டிற்கும், தொண்டிற்கும் காரணமாக இருக்கின்றன என பெரியார் அவர்கள் கடவுள் எனும் கற்பனை மாயையை மக்கள் மனதிலிருந்து அகற்றிட பிரச்சாரம் செய்து விழிப்புணர்வூட்டினார்.
அவர்களது படைப்புகள் - எதிரிகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்கள்!
1899இல் இங்கர்சால் மரணமடைந்தபோது அவருக்கு மரணச் சடங்குகள் எதுவும் நடத்தப்படாமல், அவருடைய புத்தகங்களிலிருந்து சில பாகங்களை அவரது நண்பர்கள் வாசித்து புதுமையாகவும், புரட்சியாகவும், அதே சமயம் அவர் எந்த அளவிற்கு புத்தகத்தை நேசித்தார் என்பதற்கான சான்றாகவும் அவரது இறுதி நிகழ்வு அமைந்தது.
இங்கர்சாலைப் போன்றே பெரியார் அவர்களும் புத்தகக் காதல் கொண்டவர். அதேபோன்று பெரியார் அவர்கள் தம் படைப்புப் புத்தகங்களை எதிரிகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தியவர் என்பதனையும் அறிய முடிகிறது. 1973இல் பெரியார் அவர்கள் உடலால் மறைந்தாலும் இன்றும் தத்துவமாக வாழ்கிறார். அவர் தனது வாரிசு குறித்து 10.04.1965 (சிவகங்கையில்) அன்று குறிப்பிடுகையில், “எனக்குப் பின் என் புத்தகங்களே வாரிசாக வழிகாட்டும்’’ என்றார்.
பெரியார் அவர்கள் தமக்குப் பின் தனது கொள்கை வாரிசு குறித்து மேலும் குறிப்பிடுகையில்: “எனது தொண்டும் - பிரச்சாரமும் அறிவை மட்டுமே சேர்ந்ததல்ல! அதனூடே உணர்ச்சியையும் சேர்ந்தது. ஆக, அறிவும்-உணர்ச்சியும்-துணிவும் உள்ள ஒருவர் எனக்குப் பின் வாரிசாக வருவார் என்றார். அந்த வகையில் பெரியாரின் தத்துவங்களையும் அவர் கண்ட சுயமரியாதை இயக்கத்தையும் வழிநடத்தும் ஆற்றல்மிகு தலைவராக உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்களை அடையாளம் காட்டிச் சென்றவர் பெரியார் ஒருவரே!
பகுத்தறிவுக் கொள்கையை உலகமயமாக்க வேண்டும்
உலகின் இருபெரும் பகுத்தறிவு மாமேதைகளாம் இங்கர்சால், பெரியார் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் சுயமாகச் சிந்தித்து மக்களுக்குப் போதித்த புரட்சிகர தத்துவச் சிந்தனைகளையும், அரிய போதனைகளையும், வாழ்க்கையை நல்வழிப்படுத்தும், மேன்மைப்படுத்தும் நன்னெறிக் கொள்கை கோட்பாடுகளையும், தத்துவங்களையும் நூற்றாண்டுகள் கடந்தும், நாடு கடந்தும் உலகில் உள்ள ஒவ்வொருவரும் குறிப்பாக ஏழை-எளிய-பாமர-பெண்டிர் உள்ளிட்ட எதிர்கால இளைய தலைமுறை சந்ததியினருக்கும் எடுத்துக்கூற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
மேலும், அத்தகு மாமேதைகளின் பேச்சு_எழுத்துகளைத் தொகுத்து சிந்தனைச் செல்வங்களான நூல்களை, குறைந்த விலையில் மலிவுப் பதிப்பாக்கி, உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து, உலகெங்கும் தீவிரமாய்ப் பரப்பிடும் பணி காலத்தின் ஞானப்பணியாகும். அதனூடே அவர்கள்தம் பகுத்தறிவுக் கருத்துகளை இணைய தளங்களிலும் பதிவேற்றம் செய்து பகுத்தறிவுக் கொள்கைதனை உலகமயமாக்கிடல் வேண்டும். உலகப் பகுத்தறிவு மாமேதைகளாம் இராபர்ட் கிரீன் இங்கர்சால் மற்றும் தந்தை பெரியார் ஆகிய இருபெரும் மெய்ஞ்ஞான வீரர்களின் தத்துவங்களை இவ் உலகம் மறந்துவிட முடியாது. அதற்கு இதுபோன்ற உலகளாவிய பன்னாட்டுக் கருத்தரங்குகள் மேலும் மேலும் செறிவூட்டி, பயன்படச் செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.
-உண்மை இதழ், 1-15.11.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக