புதுடில்லி, பிப்.6 புதுடில்லியில் அரசமைப்புச் சட்ட மன்றத்தில் (Constitution Club) உள்ள துணை சபாநாயகர் (Deputy Speaker) அரங்கில் 2018 ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது' வழங்கும் விழா நடைபெற்றது. அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் பெரியார் பன்னாட்டு மய்யம் ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதிக்காகப் பாடுபட்ட சான்றோர், போராளிகள், தலைவர்களுக்கு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கி வருகிறது.
1996 ஆம் ஆண்டு விருது வழங்குவது தொடங்கப்பட்டு, இதுவரை 2018 ஆம் ஆண்டுக்கான விருதுவரை மொத்தம் 10 பெருமக்களுக்கு சமூகநீதி விருது வழங்கப்பட்டுள்ளது. நாடு, மொழி, இனம் பாகுபாடு எதுவும் இன்றி, இந்தியாவில், தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராட்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சார்ந்த தலைவர்களுக்கும், சிங்கப்பூர், மியான்மா, குவைத், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சமூகநீதிக்குப் பங்காற்றிய பெருமக்களுக்கும் இதுவரை விருது வழங்கப் பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான விருது மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி சமூகநீதி வழங்குவதற்கு அளப்பரிய பங்களித்த ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
புதுடில்லியில் 5.2.2019 அன்று பிற்பகல் நடைபெற்ற சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு, இந்த விருதினை 2009 ஆம் ஆண்டு வழங்கப் பெற்றவரும், கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவரும், கருநாடக மாநில அரசின் மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்ம குமார் தலைமை வகித்தார்.
விருதினை நிறுவிய பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் சமூகநீதிக்கான வீரமணி விருது நிறுவப்பட்ட வரலாறு, விருது வழங்கப் படுவதன் நோக்கம்பற்றி எடுத்துக் கூறி, 2018 ஆம் ஆண்டுக்கான விருதினை பி.எஸ்.கிருஷ்ணனுக்கு வழங்கப்படுவதன் சிறப்புப்பற்றி உரையாற்றினார்.
விருது வழங்கல்
ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பூபீந்தர்சிங் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.
2018 ஆம் ஆண்டு சமூகநீதிக்கான கி.வீரமணி விரு தினை' (K.Veeramani Award for Social Justice) பணி நிறைவு பெற்ற, மத்திய அரசின் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குப் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் விருதுக் குழுவின் சார்பாக டாக்டர் சோம.இளங்கோவன் வழங்கினார்.
விருது மடலினையும், விருதுத் தொகையான ரூ.1 லட்சத்திற்கான வங்கி வரைவோலையும் வழங்கப்பட்டது. விருது வழங்கப்பட்டபொழுது பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் இருவருக்கும் சேர்த்து சிறப்பு செய்யப்பட்டது. அவர்களது மகளும் உடன் இருந்தார். விருது வழங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.
விருது வழங்கும் நிகழ்வின் சிறப்புரையினை மத்திய அரசின் மேனாள் செயலாளரும், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் பூபீந்தர்சிங் வழங்கினார்.
தமிழர் தலைவரின் பாராட்டுரை
நிறைவாக விருது பெற்ற பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சமூகநீதிக்காக ஆற்றிய பணிபற்றி எடுத்துக்கூறி, பாராட்டித் தமிழர் தலைவர் உரையாற்றினார்.
அவர் தமது பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:
சமூகநீதிக்கான விருதினை பெரியார் பன்னாட்டு மய்யம், என்னுடைய பெயரில் நிறுவிய நேரத்தில், நான் எனது பெயரில் விருது அமையப் பெறுவது வேண்டாம்; சமூகநீதிக்காக களம் அமைத்து 95 ஆண்டுகாலம் போரா டிய தந்தை பெரியாரது பெயரில்தான் விருது அமையப் பெறவேண்டும் என அழுத்தமாக எடுத்துக் கூறினேன்.
தந்தை பெரியார் போற்றி காத்து வந்த சமூகநீதிச் சுடரை, அவர்தம் கொள்கையினை, அவரது காலத்திற்குப் பின் யார் எடுத்துச் செல்லுகிறார்கள் என்பதை உலகினர் அறிந்து கொள்வதன் பேரில் ஓர் அடையாளமாக எனது பெயரில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான டாக்டர் சோம.இளங்கோவன் மற்றும் டாக்டர் இலக்குவன்தமிழ் ஆகியோர் கூறினர். விருது பெயரில் தந்தை பெரியாரும், அவர் ஏற்றிப் பாதுகாத்திட்ட சமூகநீதிக் கொள்கையும் உள்ளடக்கம் என விளக்கமளித்தனர்.
சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழாவில் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர் (டில்லி, 5.2.2019).
1970 களில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணியினை மண்டல் அவர்களுக்கு மத்திய அரசு வழங்கியது. நாடெங்கும் பயணம் செய்து குழுவின் தலைவர் மண்டலும், குழுவின் உறுப்பினர்களும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கருத்தறிந்து, உண்மை நிலைபற்றி ஆய்வு செய்து 1980 ஆம் ஆண்டில் அறிக்கையை அளித்தனர். அரசிடம் அளிக்கப்பட்ட மண்டல் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையினைப் பிரசுரிக்க, பலவிதமான தடைகளை அதிகார வர்க்கத்தினர், அரசியல்வாதிகளில் உயர்ஜாதியினர் ஏற்படுத்தினர். பெரியாரின் இயக்கம்தான் மண்டல் குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட நாடு தழுவிய அளவில் 42 போராட்டங்களையும், 16 மாநாடுகளையும் நடத்தியது. 1990 ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமரானபொழுதுதான் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த சமயம் அதிகார நிலையில் அரசின் செயலாளராக இருந்து நிலவி வந்த நடைமுறைக்கான தடைகளைக் களைந்து பரிந்துரைக்கு ஆதரவாக இருந்து சமூகநீதிக் கொள்கைபற்றிய புரிதலுடன், அவசியம் கருதி உறுதுணையாக இருந்தார்- இந்த நிகழ்வின் விருதாளர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். பி.எஸ்.கிருஷ் ணன் அவர்களின் பங்களிப்பு இல்லையெனில், மண்டல் பரிந்துரைகள் நடைமுறையாக்கம் காணுவது அதிகார நிலையிலேயே தடைபட்டு தாமதமாகி இருக்கும். மண்டல் பரிந்துரைகள் வெளிச்சம் காண உதவியாக இருந்தார் - பணி நிறைவு பெற்ற நிலையிலும் சமூகநீதிப் பணிகளில் அக்கறைகாட்டிப் பாடுபட்டு வருபவர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினர் மேம்பாட்டுக்காக இன்றளவும் பாடுபட்டு வருகிறார். சமூகநீதிக்கான அறைகூவல்கள் எழும்பொழுதெல்லாம் உரிய வகையில் விளக்கமளித்து, தனது அதிகார வர்க்கப் பணியில் கிடைக்கப் பெற்ற அனுபவங்கள் வாயிலாக உண்மை நிலையினை உணர்த்தி வருகிறார். தற்பொழுது மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள உயர்ஜாதியினரில் ஏழை(?)களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடுபற்றிய கருத்தினையும் கூறி, இட ஒதுக்கீட்டுக் கோட்பாடு ஒடுக்கப்பட்டோருக்கான கோட்பாடு; உயர்ஜாதியினருக்கானது அல்ல என்று குரல் கொடுத்து வருகிறார். இப்படி ஒடுக்கப்பட்ட மக் களுக்காகப் பாடுபட்டுவரும் பி.எஸ்.கிருஷ்ணன் முற்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர். அப்படிப்பட்டவரின் ஓய்வு என்பது தனது அரசுப் பணிக்குத்தான், தான் குரல் கொடுத்துவரும் சமூகநீதிக் கொள்கைக்கு அல்ல என்பதாகும். உடலால் சற்று முதுநிலை அடைந்தாலும், உள்ளத்தால் இளைஞரைப்போல சமூகநீதிக்காகப் பணியாற்றிவரும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களைப் போற்றிப் பாராட்டுகிறோம். அவரது பணி தொடர்க என வாழ்த்துகிறோம்.
- இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.
சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்படும் விழா விற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங் கோவன், து.ராஜா, அரிபிரசாத் மற்றும் சமூகநீதிக்கான வழக்குரைஞர் சங்கத்தின் நிர்வாக அறக்கட்டளையாளர் - உயர்நீதிமன்ற முதுநிலை வழக்குரைஞர் சுப்பாராவ், வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், மத்திய அரசின் மேனாள் உயரதிகாரிகள், டில்லி மற்றும் ஜவகர்லால் நேரு பல் கலைக் கழக மாணவர்கள், பேராசிரியப் பெருமக்கள், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த திராவிடர் கழக வழக்குரைஞர்கள், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் எனப் பலதரப்பட்டோரும் வருகை தந்திருந்தனர். வடமாநிலத்தில், டில்லி தலை நகரில் சமூகநீதிபற்றிய ஒரு விழிப்புணர்வு, இன்றைய பொருத்தப்பாடுபற்றிய விளக்கும் நிகழ்ச்சியாக சமூகநீதிக் கான கி.வீரமணி விருது வழங்கிடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சமூகநீதி விரு தாளரும், செயல்பாட்டாளருமான கோ.கருணாநிதி நன்றி கூறி நிறைவு செய்தார்.
- விடுதலை நாளேடு, 6.2.19