தந்தை பெரியாரின் ராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலை “சச்சி ராமாயண்” என்ற பெயரில் ஹிந்தியில் கொண்டுவந்த பெருமை லலாய் சிங்கைச் சேரும்.
அவர் பெரியாரின் ‘ராமாயணப் பாத்திரங்கள்’ நூலை ஹிந்தியில் மொழிபெயர்த்ததும் வட இந்தியாவில் புயல் கிளம்பியது.
1968இல் லலாய் சிங் “தி ராமாயணா (ஏ ட்ரூ ரீடிங்)” என்ற நூலை ஹிந்தியில் மொழிபெயர்த்து “சச்சி ராமாயண்” என்ற பெயரில் வெளியிட்டார்.
வெளியான உடனேயே அந்த நூல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது, இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று கூறும் ஹிந்துத்துவ அமைப்புகள் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தின.
அப்போதைய உத்தரப்பிரதேச அரசு போராட்டத்திற்கு அடங்கி டிசம்பர் 8, 1969 அன்று மத உணர்வுகளை புண்படுத்தும் என்ற குற்றச்சாட்டின் பேரில் புத்தகத்தை பறிமுதல் செய்தது.
லலாய் சிங் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். ஆனால் பெரியாரின் வழியில் வழக்கிற்கு அஞ்சாத லலாய் சிங் அரசை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் மாநில அரசின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறுகையில், இந்த நூல் மாநிலத்தின் பெரும்பான்மையான ஹிந்து மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்றும், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மக்கள் பெரிதும் மதிக்கும் அவதார புருஷரான ராமன், சீதை மற்றும் ஜனகன் போன்ற தெய்வீகப் பாத்திரங்களை அவதூறு செய்துள்ளார் என்றும், இந்துக்கள் வணங்கும் தெய்வங்களைக் களங்கப்படுத்தியுள்ளார் என்றும் கூறினார். எனவே இந்த புத்தகத்தைத் தடை செய்வது அவசியம் என்றார்.
இதுகுறித்து லலாய் சிங் வழக்குரைஞர் பன்வாரி லால் கூறும்போது, ‘சச்சி ராமாயண்” எனும் நூல் மூல ராமாயணத்தில் உள்ளவற்றை வைத்துத்தான் எழுதப்பட்டது. எங்கள் கருத்துகளோ திணிப்போ அதில் இல்லை என்று கூறிச் சான்றுகளை அளித்தார்.
ஜனவரி 19, 1971 அன்று அலகாபாத் நீதிமன்றம் நூலுக்கான தடை உத்தரவை ரத்து செய்து, பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து நூல்களையும் திருப்பி அளிக்குமாறும், லலாய் சிங்கிற்கு செலவாக முந்நூறு ரூபாய் வழங்குமாறும் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
லலாய் சிங் மொழி பெயர்த்து வெளியிட்ட ‘சச்சி ராமாயண்’ மூல நூல் இந்த நூல்தான் உத்தரப் பிரதேச அரசால் தடை செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் தடை விலக்கப்பட்டது.
இதன் பிறகு உத்தரப்பிரதேச அரசு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அதற்கு நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் தலைமை தாங்கினார், மற்ற இரு நீதிபதிகள் பி.என். பகவதி மற்றும் சையத் முர்தசா பசல் அலி. அமர்வு தீர்ப்பளித்தது
லலாய் சிங் யாதவ் மொழி பெயர்த்த
‘சச்சி ராமாயண்’ என்ற வடமொழி நூலை குஜராத்தி மொழியில் ‘சவ்ரத பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது
“உத்தரப்பிரதேச அரசு – எதிர் லலாய் சிங் யாதவ்” என்ற பெயரில் இந்த வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 16, 1976 அன்று வழங்கப்பட்டது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு புத்தக வெளியீட்டாளருக்கு ஆதரவாக இருந்தது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் சரியானதாகக் கருதி, மாநில அரசின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.
இந்து மதத்தை விட்டு
பவுத்தராக மாறிய லலாய் சிங்
அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ‘சச்சி ராமாயண்’ நூல் வழக்கை வென்ற பிறகு, லலாய் சிங் தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோரின் தலைவராக மாறினார்.
லலாய் சிங் யாதவ் 1967இல் இந்து மதத்தைத் துறந்து பவுத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். பவுத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் தனது பெயரிலிருந்து ‘யாதவ்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டார்.
‘யாதவ்’ என்ற வார்த்தையை நீக்கியதன் பின்னணியில் அவரது ஆழமான ஜாதி எதிர்ப்பு உணர்வு இருந்தது.
அவர் ஜாதியற்ற சமூகத்திற்காக களப்பணியாற்றினார்.
பெரியார் லலாய் சிங் இந்தியத் தலைவர்களின் வரலாற்றைத் தொடர்ந்து படிக்கத்துவங்கினார்.
பவுத்த மதத்தைப் பின்பற்றிய அசோகர் அவரது முன்மாதிரி ஆளுமைகளில் ஒருவராக இருந்தார்.
அவர் “அசோக புத்தகாலயம்” என்ற பெயரில் பதிப்பக நிறுவனத்தை நிறுவி, “சஸ்தா(புத்தர்) பிரஸ்” என்ற பெயரில் அச்சகத்தை நிறுவினார்.
அவர் அய்ந்து நாடகங்களை எழுதினார் – (1) அங்குலிமால நாடகம், இது தாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது (2) சம்பூக வதம், (3) சாந்த மாயா பலிதானம், (4) ஏகலைவன், மற்றும் (5) நாக யக்ஞ நாடகம். உரைநடையிலும் அவர் மூன்று புத்தகங்களை எழுதினார் – (1) ஒடுக்கப்பட்ட மக்களை மீதான மத அடக்குமுறை
(2) மதத்தின் பெயரால் சுரண்டப்படும் மண்ணின் மைந்தர்கள் (3) சமூக ஏற்றத்தாழ்வு எவ்வாறு ஒழிய வேண்டும்? போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
அவரது நாடகங்கள் மற்றும் இலக்கியத்தில் அவரது பங்களிப்பு குறித்து கன்வல் பாரதி எழுதுகையில், “இந்த இலக்கியம் ஹிந்தி இலக்கியத்தில் புதிய சிந்தனைப் புரட்சியின் இலக்கியமாக இருந்தது. இது இந்துக் கடவுள்கள் மற்றும் இந்துக் கலாச்சாரம் குறித்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் மாற்றியது” என்கிறார்.
இது ஒரு புதிய விவாதமாக இருந்தது; இந்தி இலக்கியத்தில் புதிய கோணத்தை உருவாக்கினார்.
லலாய் சிங்கின் நூல்கள் பார்ப்பனீய அடக்குமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வை ஏற்படுத்தியது. மக்களிடையே சமத்துவம், சமூகநீதிச் சிந்தனையின் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.
தீவிர பகுத்தறிவாதியாக, கொள்கைப்பிடிப்பில் எதற்கும் அஞ்சாதவராக, தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் லலாய் சிங் வட இந்தியாவின் பெரியாராக பிரபலமானார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான லலாய் சிங் செப்டம்பர் 1, 1921 அன்று கான்பூருக்கு அருகிலுள்ள கதாரா கிராமத்தில் பிறந்தார்.
பிற ஒடுக்கப்பட்ட தலைவர்களைப் போலவே, அவரது வாழ்க்கையும் போராட்டங்களால் நிறைந்திருந்தது. அவர் 1933இல் க்வாலியர் சமஸ்தான ஆயுதப்படை காவல்துறையில் சிப்பாயாகச் சேர்ந்தார். ஆனால், காங்கிரசின் சுயராஜ்யத்தை ஆதரித்தார். இது பிரிட்டிஷ் ஆட்சியில் குற்றமாக இருந்ததால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டார். பணி நீக்கத்தை எதிர்த்து அவர் குவாலியர் ராணுவ நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
1946இல் அவர் க்வாலியரில் “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ராணுவம்” என்ற அமைப்பை நிறுவினார். இது ராணுவத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகச் சிப்பாய்களின் உரிமையை மீட்க உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக அவரே ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் கதர் கட்சி என்ற ஒன்றை துவக்கினார்.
அந்த அமைப்பிற்காக லலாய் சிங் ‘போர்ப்படை வீரர்கள்’ என்ற தலைப்பில் ‘சோல்ஜர் ஆஃப் தி வார்’ என்ற நூல் ஒன்றை எழுதினார்.
1946இல் ‘சிப்பாயி கி தபாஹி’ (சிப்பாயின் அழிவு) என்ற புத்தகத்தை எழுதினார். இது அச்சிடப்படவில்லை. ஆனால், தட்டச்சு செய்து சிப்பாய்களிடையே விநியோகிக்கப்பட்டது.
ராணுவத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இந்த புத்தகத்தைப் பற்றி அறிந்ததும், அவரது சிறப்பு ஆணையின் மூலம் அதை பறிமுதல் செய்தார். ‘சிப்பாயி கி தபாஹி’ உரையாடல் பாணியில் எழுதப்பட்ட புத்தகமாக இருந்தது.
இந்த நூலில் மகாத்மா ஜோதிபா பூலேவின் ‘கிசான் கா கோடா’ (விவசாயிகளின் குதிரை) மற்றும் ‘அச்சூதோன் கி கைபியத் (தீண்டத்தகாத மக்களின் நிலை)’ ஆகிய புத்தகங்களை மேற்கோள் காட்டி இருந்தார்.
லலாய் சிங் அச்சுப்பிரதியில் ஒரு உரையாடல்: ஒரு சிப்பாய்க்கும் அவரது மனைவிக்கும் இடையேயான உரையாடல் வீட்டின் ஏழ்மை நிலை குறித்து உள்ளது. “உண்மையில் புரோகிதர்கள், பாதிரிகள் மற்றும் இதர மதத் தலைவர்கள் – கற்பனையான சொர்க்கம் என்றும் நரகம் என்றும் கூறுவது எல்லாம் போலியானது” என்று மனைவியிடம் வாதிடுகிறார்.
“நாம் இருக்கும் இந்த நிலைதான் (சிப்பாயின் வீடு) உண்மையான நரகம். இந்த நரக அமைப்பிற்கான காரணம் இந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகம். எனவே, இதை எந்த நிலையிலும் மாற்ற வேண்டும்; முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ‘மக்களால் மக்களுக்கான ஆட்சி’ அமையும்போது, நமது அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படும்” என்று எழுதியிருந்தார்.
இந்த நூலின் வாயிலாக லலாய் சிங் சிப்பாய்களைப் புரட்சிக்கு அழைத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 29, 1947 அன்று கைது செய்யப்பட்டார். வழக்கு நடத்தப்பட்டு, அவருக்கு அய்ந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் 9 மாதங்கள் சிறையில் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து, குவாலியர் சமஸ்தானம் இந்தியாவில் இணைந்த பிறகு, ஜனவரி 12, 1948 அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
1950இல் அரசு அரசுப்பணியில் இருந்து விலகி அவர் தன்னை முழுமையாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார்.
பார்ப்பனீயத்தை ஒழிக்காமல் மண்ணின் மைந்தர்களுக்கு விடுதலை சாத்தியமில்லை என்பதை ஆழமாக உணர்ந்திருந்தார். ஒரு சமூக ஆர்வலராக, எழுத்தாளராக, பதிப்பாளராக, அவர் தனது முழு வாழ்க்கையையும் பார்ப்பனீயத்தை ஒழிப்பதற்கும் மண்ணின் மைந்தர்களின் விடுதலைக்கும் அர்ப்பணித்தார். பிப்ரவரி 7, 1993 அன்று அவர் மரணமடைந்தார்.
லலாய் சிங் வழியில் அவரது குடும்பத்தினரும் அவரைப் பின்பற்றும் அனைவரும் தங்களது பெயருக்கு முன்னால் பெரியார் என்று சேர்த்துக்கொண்டே வருகின்றனர்.