செவ்வாய், 3 ஜூலை, 2018

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற கலந்துரையாடல்



சென்னை, ஜூலை 2 பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 18.6.2018 அன்று மாலை 3.15 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்விற்கு திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு கூட்டத்தின் நோக்கம் பற்றியும், கலந்து கொண்டுள்ள தோழர் தோழியர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் கூறி கூட்டத்தினை தொடங்கிவைத்தார்.

கூட்டத்திற்கு தலைமை ஏற்ற கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் என்னும் அமைப்பு ஏற்கெனவே இருந்ததையும், பல்வேறு செயல்பாடுகளை அந்த அமைப்பு ஆற்றியதையும், மதுரையில் மறைந்த பேரா.பு.இராசதுரை அவர்கள் தலைவராக இருந்தபொழுது பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநில மாநாடு நடைபெற்ற தையும் குறிப்பிட்டார். முதலில் நமது தோழர்களை வாசகர் கடிதங்கள் எழுதச் சொல்லவேண்டும். அப்புறம் ஒவ்வொரு பக்கத்திற்கு தங்கள் கருத்துக்களை எழுதச்சொல்லவேண்டும். இவை பத் திரிகைகளில் வெளியானால் தோழர்க ளுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும். தொடர்ந்து எழுத ஆரம்பிப்பார்கள். எழுத்தாளர்களை ஒன்றிணைக்கவேண் டும். பெரியார் இப்போது எங்கும் பரவி இருக்கின்றார். பெரியாரின் கருத்து களுக்கான தேவை இன்று மிகப்பெரிய அளவில் இருக்கிறது. எனக்குறிப்பிட்டு தனது அனுபவங்கள், தான் எழுத ஆரம் பித்தது எப்படி என்பதையெல்லாம் குறிப்பிட்டு மிக விரிவான ஆக்கபூர்வ மான கருத்துக்கள் அடங்கிய உரையினை அளித்தார்கள்.  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத்தலைவர் எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன் அவர்கள் , இன்றைய காலகட்டத்தில் நாம் எவ்வாறெல்லாம் செயல்படலாம் என்பதனை விரிவாக எடுத்துக்கூறியதோடு ஆங்கிலத்தில் எழுதுபவர்கள், மற்ற மொழிகளில் எழுதுபவர்கள் தேவை இன்றைக்கு இருக்கின்றது, புத்தகம் எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டும், இது ஒரு ஆரம்பம்தான், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு சரியான வழிகாட்டுதலை நமக்கு அளித்திருக்கின்றார்கள். கவிஞர் அவர்கள் பல செய்திகளை இங்கு எடுத்துரைத்தார்கள். மிக விரிவான திட்டங்களோடு நாம் செயல்படுவோம் எனக்குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஆவடி மாவட்ட கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல் 'இந்தக் கூட்டம் ஒரு ஆலமரத்திற்கு ஊன்றும் விதை போன்று தோன்றுகிறது என்றும் இன்னும் சில ஆண்டுகளில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தனது கண்முன்னால் இப்போதே தோன்றுகிறது 'என்றும் குறிப்பிட்டு தனது எழுத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பேஸ்புக்கில் வந்த ஒரு கவிதை அரங்கம் தன்னை எப்படி ஈர்த்தது என்பதையும் அதனுடைய அனுபவங்களையும் பெரி யார் திடல் கலை பகிர்ந்துகொண்டார். வழக்குரைஞர் பா.மணியம்மை தான் ஒரு பேச்சாளர் என்ற நிலையில் இருந் தாலும் எழுத்தாளர் என்னும் நிலைக்கு உயர இந்தக்கூட்டம் நம்பிக்கை தரு கின்றது என்றார்.எழுத்தாளர் ந.தேன் மொழி அவர்கள் குடியாத்தம் நூலகத்தின் மாதாந்திரக் கூட்டம் பற்றியும் அதில் நடைபெறும் நூல் திறனாய்வு பற்றியும் குறிப்பிட்டார். எழுதுவதில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டையும் ,பெரியார் அரங்கம் போன்ற நிகழ்வையும் குறிப் பிட்டு விளைச்சலை எதிர்பார்ப்போம் என்றார்.

குறும்படங்கள் எடுக்க பயிற்சி

அன்புமதி குணசேகரன் அவர்கள், சிறுகுழந்தைகளை, பிள்ளைகளை ஈர்க் கும் விசயங்களைக் கண்டுபிடிக்கவேண் டும். பாட்டு & வீடியோ மூலம் எப்படி குழந்தைகள் ஈர்க்கப்படுகின்றார்கள் என் பதனைக் குறிப்பிட்டார். நாம் சின்னச் சின்ன குறும்படங்களை குழந்தைகளுக் காக உண்டாக்க வேண்டும். பழகுமுகாம் போன்றவைகளில் பிள்ளைகளை குறும் படம் எடுக்க பயிற்சிகொடுக்க வேண் டும். கதை சொல்லல் என்னும் கலையை நாம் ஊக்குவித்து ,அவர்களின் தனித் திறனை கண்டறிய வேண்டும், ஹிக் கிம்பாதம்ஸ் போன்ற புத்தகக்கடைகள் புதுமாதிரியான வழிமுறைகளைக் கையாளுகிறார்கள் எனக்குறிப்பிட்டார்.  மயிலாடுதுறை மாவட்டத்தின் திராவிடர் கழகத்தலைவர், கி.தளபதிராஜ், தூத் துக்குடி சு.காசி, சொ.நே.அன்புமணி, செந்துறை சா.இராசேந்திரன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை எடுத்துவைத்தனர். திராவிடர் கழக மாநில அமைப்புச் செய லாளர் மதுரை வே.செல்வம்- முதலில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் அமைப் பைக் கட்டவேண்டும். திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர் களைத் தொடர்புகொண்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள எழுத்தாளர்களை அடையாளம் காணவேண்டும் என்றார். திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் தர்மபுரி ஊமை.ஜெயராமன், கலை இலக்கிய இரவுகள் நடத்த வேண்டும். முக நூலில் எழுதும் நமது தோழர்களையே அழைத்து எழுத்தாளர் என்னும் அங்கீகாரத்தைக் கொடுத்து எழுதச்செய்ய வேண்டும் .ஆண்டிற்கு ஒருமுறை மிகப்பெரிய நிகழ்வாக நடத்தவேண்டும் எனக்குறிப்பிட்டார். மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார் தனது உரையில், நாம் புதிய படைப்பாளிகளை எப்படி ஊக்கப்படுத்தலாம்? என்பதனை யோசிக்க வேண்டும், புத்தகமாக்கும் முயற்சிக்கு உறுதுணை செய்கின்றோம், இன்னும் செய்வோம், மண்டலப் பொறுப்பாளர்களை மட்டும் போட்டுக் கூட ஆட்களை அடையாளம் காணலாம். சிறுகதை எழுத பயிற்சி முகாம் நடத் தலாம். என்பனவற்றை குறிப்பிட்டுக் கருத்துரைத்தார்.

இணையத்தில் விழிப்புணர்வு

ப.க., மாநிலப்பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், மாவட்டந்தோறும் அமைப்பாளர்கள் போடவேண்டும். உண்மையுடன் இணைந்து கதை, கட் டுரைப்போட்டிகளை மாவட்டந்தோறும் பகுத்தறிவாளர் கழகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்யலாம். இலக்கிய அமைப் புகளில் உள்ளவர்களை அடையாளம் காணலாம். விருதுகள் வழங்கலாம்" எனக்குறிப்பிட்டார்.

மாநில மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி "மாநாடுகள் மாவட்டந்தோறும் நடத்த லாம். கலை இலக்கிய மாநாடாக அதனை நடத்தலாம். அதற்கு மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க வேண்

டும்" எனக்குறிப்பிட்டார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் தஞ்சை மா.அழகிரிசாமி "இணையத்தில் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும். கவியரங்கங்கள் நடத்தலாம். மாவட்ட அளவில் அமைப் பாளர்களை நியமிக்கவேண்டும். எழுத்து ஈர்ப்பு கொடுக்கக்கூடியது. பயிற்சி கொடுக்கவேண்டும் "எனக் குறிப்பிட்டார்.

நிறைவாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு, ஏறத்தாழ 3 மணி நேரம் இந்தக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற் றுள்ளது. ஆக்கபூர்வமான பல கருத்துகள் கிடைக்கப்பெற்றோம். இதனை செயல் படுத்த அனைவரும் உறுதி ஏற்போம் என்று குறிப்பிட்டார்.

தர்மபுரி மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளராக பாவலர் பெரு.முல்லையரசு, பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளராக முனைவர். தங்க பிரகாசம் ஆகியோர் கூட்டத்தில் அறி விக்கப்பட்டனர்.

- விடுதலை நாளேடு, 2.7.18

சனி, 23 ஜூன், 2018

*பகுத்தறிவாளர் யார்?*

*இதோ பெரியார் சொல்கிறார் கேளுங்கள்*

1. எண்ணம், சொல், செயல் ஆகியவற்றின் அடிப்படையாகப் பகுத்தறிவையே முன்னி றுத்தி, தன்னம்பிக்கையுடன் இயங்குபவர்.

2. மனஉறுதியும், தெளிவான சிந்தனையும் பெற்றவர்.

3. அஞ்சாமையுடன் அறிவுக்கு முதலிடம் தந்து ஆக்கப்பணிகளில் ஈடுபடுபவர். நல்ல நோக்கத்துடன் தீமையைக் களைந்திட அறிவுப்பணி ஆற்றவும் தயங்காதவர்.

4. எங்கும் எதிலும், யாரிடத்திலும் என்றும் உண்மையை ஆராய்ந்து அறிவோர்.

5. சிந்தனையே அனைத்து ஆற்றல்களையும் அளிக்க வழி வகுக்கும் மாமருந்து என உணர்வோர்.

6. கடவுள், மதம், சாதி முதலிய பொய்மைகளினின்றும் விடுபடுவதுடன் - நாடு, இனம், மொழி, மரபு, இலக்கியம் முதலான எல்லைகட்கும் அப்பாற்பட்டு இயங்குபவர்.

7. ஆண், பெண் வேறுபாடுகளைக் கருதாதவர்; பொதுஉரிமையுடன் கூடிய பொதுவுடைமைச் சமுதாயம் அமைக்கப் பாடுபடுபவர். புரட்சி - மனப்பான்மை மிக்கவர்.

8. அடக்கமும், அமைதியும் உடையவராய்த் தற்பெருமையும், தாழ்வு மனப்பான்மையும் இன்றி வாழ்வோர்.

9. துன்பம், தடை, சிக்கல், ஒழுக்கம், அச்சம், பிணி முதலியவற்றை அறிவியல் முறையில் அகற்றக் கற்றவர்.

10. மனித உடல் பல நுட்பங்கள் பொருந்திய பொறி (இயந்திரம்) என்னும் உண்மையைக் கருத்தில் கொண்டு உடலை ஓம்பி, எந்நிலையிலும் மாள அஞ்சாதவர்.

11. பெயர், புகழ், வீண் பெருமை ஆகியவற்றுக்காக ஆடம்பரமான வாழ்வு நடத்தாமல், தற்புகழ்ச்சியைத் துறந்து, பிறர் நலம் பேணுபவர்.

12. மனிதரைச் சமநோக்குடன் அணுகி, மதிக்கும் இயல்பும், உண்மை அன்பும், தன்னலமின்மையும், வினைத்தூய்மையும், மிக்கவராய் ஊக்கமுடன் உழைப்பவர்.

13, தான் ஏற்றுக் கொண்ட பொறுப்பு ஒவ்வொன்றிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றுபவர்

  *தந்தை பெரியார்*

புதன், 20 ஜூன், 2018

உலகளவில் நாத்திகர்கள்



உலகிலேயே அதிக விழுக்காட்டில் நாத்திகர்கள் இருப்பது சீனாவில்தான் என்று ஆய்வுத்தகவல் கூறுகிறது.

globalnation.inquirer.net இணையத்தில் (9.5.2018) இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கேல்லப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் 2017ஆம் ஆண்டுவரை பன்னாட்ட ளவில் 68 நாடுகளில் சுமார் 68,000பேரிடம் மத நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் மத நம்பிக்கையற்றவர்கள்குறித்து புள்ளிவிவரம் திரட்டப்பட்டது.

சீனாவில் 67 விழுக்காட்டினர் நாத்திகர்கள்


அப்புள்ளிவிவரத்தின்படி, சீனாவில் 67 விழுக்காட்டினர் மத நம்பிக்கையற்ற நாத்தி கர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பத்துபேரில் ஏழு பேர் நாத்திகர்களாக உள்ளனர்.  வேறு எந்த நாட்டையும்விட, இருமடங்கு அளவில் 23 விழுக்காட்டினர் மத மற்றவர்களாக அறிவித்துக்கொண்டுள்ளனர்.

சீனாவில் 9 விழுக்காட்டினர் மட்டுமே தங்களை மத நம்பிக்கை கொண்டவர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவைத் தொடர்ந்து நாடுவாரியாக நாத்திகர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

ஜப்பான் நாட்டில் 29 விழுக்காடு, சுலோவேனியா நாட்டில் 28 விழுக்காடு, செக் குடியரசில் 25 விழுக்காடு, தென்கொரியாவில் 23 விழுக்காடு, அய்ரோப்பிய நாடுகளான பெல்ஜியம் 21 விழுக்காடு, பிரான்சு 21 விழுக்காடு, சுவீடன் 18 விழுக்காடு, அய்ஸ்லாந்து 17 விழுக்காடு அளவில் நாத் திகர்களாக தங்களை அறிவித்துக்கொண் டுள்ளனர்.

நம்பிக்கையில் பல விதங்கள்


மதநம்பிக்கையைச் சார்ந்துள்ளவர்களாக 62 விழுக்காட்டினர் தங்களை மதநம்பிக்கை உள்ளவர்கள் என்று கூறியுள்ளனர். மத நம்பிக்கை உள்ளவர்களிடையே ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நம்புபவர்களாக 74 விழுக்காட்டினரும், கடவுள் நம்பிக்கை யாளர்களாக 71 விழுக்காட்டினரும், சொர்க்கம் என்று இருப்பதாக நம்புபவர்களாக 56 விழுக்காட்டினரும், மறுபிறப்பு உள்ளதாக 54 விழுக்காட்டினரும், நரகம் என்ற ஒன்று இருப்பதாக 49 விழுக்காட்டினரும் உள்ளதாக புள்ளி விவரத் தகவல் கூறுகிறது.

வங்கதேசம், இந்தோனேசியா, பிலிப் பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்களிடையே மதம், கடவுள், ஆன்மா, சொர்க்கம், நரகம் ஆகிய நம்பிக்கைகள் மிகுந்துள்ளதாக கேல்லப் இன்டர்நேஷனல் நிறுவனப் புள்ளிவிவரத்தகவல் கூறுகிறது. மங்கோலியா நாட்டில் 8 விழுக்காடு, வியட்நாம் 6 விழுக்காடு, இந்தியா 2 விழுக்காடு, பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்தில் ஒரு விழுக்காடு நாத்திகர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள் இருப்பதாக புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது.

ஆக, மதத்தை நம்புவோரிடையே ஆன்மா, சொர்க்கம், மறுபிறப்பு, நரகம், கடவுள் ஆகிய கருத்துகளை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள் என்று இப்புள்ளி விவரத்தகவல்கள் மூலம் தெரிகிறது.

வருவாய், கல்வி, சமூக பண்புநலன்கள் பெருக நாத்திகம்


புள்ளிவிவரத் தகவலின்படி, மதநம்பிக்கை குறைவாக உள்ள நிலையில் வருவாய் மற்றும் கல்வி நிலை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது.

மத நம்பிக்கை சார்ந்தவர்களிடையே குறைவான வருவாய் கொண்டவர்களாக 66 விழுக்காடும்,

மத நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர் களில்  50 விழுக்காட்டளவில் அதிக வருவாய் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

அதேபோன்று மத நம்பிக்கை மிகுந்தவர்களிடையே 83 விழுக்காட்டளவில் கல்வி நிலையில் குறைந்து காணப்படு வதாகவும், மதநம்பிக்கையற்றவர்களிடையே  49 விழுக்காட்டளவில் கல்விநிலையில் உயர்ந்து காணப்படுவதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. புள்ளிவிவரத்தின்படி, மதம் சார்ந்த நம்பிக்கை மற்றும் சமுதாயத்தில் மக்களின் பண்புநலன்களிடையே ஒப்பீட்டளவில் வயது, வருவாய், கல்வி நிலை உள்ளிட்டவற்றில் மதநம்பிக்கை இல்லாதவர்களின் நிலை ஓங்கியும், மத நம்பிக்கையாளர்களின் நிலை குறைந்தும் காணப்படுகிறது. மேலும் இளைஞர்கள் ஒரே மதத்தைச் சார்ந்திராமல், பன்மத நம்பிக்கையாளர்களாக அதிகரித்துவருவதாக தகவல்கள் கூறுகின்றன.

சமுதாயத்தில் மதத்தை ஏற்றுக்கொள்வதில் கூட, கல்வியின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாக  தகவல்கள் கூறுகின்றன.

பன்னாட்டளவில் தனிமனிதர்களின் வாழ்வில் மதம் பொருந்தக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு நாட்டின் வரலாற்றைப் பொருத்தவரையிலும்கூட,கல்விநிலைமட்டுமே குறிப்பிடத்தக்க மதிப்புகளை பெறுவதாக இருந்து வருகிறது.

- இவ்வாறு புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது

- விடுதலை ஞாயிறுமலர், 12.5.18

வெள்ளி, 18 மே, 2018

கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் "சார்வாகம் 2018"

அறிவியல் பகுத்தறிவுக் கருத்தரங்கத்தில் திராவிடர் கழகம் பங்கேற்பு




கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் யுக்திவாத பாடனகேந்திரத்தின் ஏற்பாட்டில் "சார்வாகம் 2018" நிகழ்ச்சி  மே 12-13 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியான அறிவியல் பகுத்தறிவு கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன் பங்கேற்றார்.

"மதச்சார்பற்ற இந்திய நாட்டில் பகுத்தறிவாளர் களுக்கான அறைகூவல்கள்" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. எர்ணாகுளம் நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள நகர் மன்ற அரங்கில் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் நாள் பிற்பகலில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு "டெக்கான் கிரானிக்கல்" ஆங்கில ஏட்டின் நிர்வாக ஆசிரியர் கே.ஜே. ஜேக்கப் நெறியுரைஞராக இருந்தார். கருத்தரங்கில் அனைந் திந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், மகாராஷ்டிர அந்தஸ்திரத நிர்மூலன் சமிதியின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல், கேரள யுக்திவாதி சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜகோபால் வக்கதானம்  கர்நாடக மாநில பகுத்தறிவாளர் சங்கத்தின் துணைத் தலைவர் பி.வி. சுப்பாராவ், யுக்திவாத பாடனகேந்திராவின் துணைத் தலைவர் ஷிபு எரிக்கல் ஆகியோருடன் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசனும் பங்கேற்றார்.

கருத்தரங்கில் வீ. குமரேசன் உரை


கருத்தரங்கில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலா ளர் வீ. குமரேசன் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:

மதச் சார்பற்ற இந்தியா எனக் குறிப்பிடும் பொழுது நாட்டுக் குடிமக்களிடத்தில், நாட்டை ஆட்சி செய்யும் அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை உள்ளதா எனக் கேள்வி எழுகிறது.  குடிமக்களைப் பொறுத்த அளவில் தொன்றுதொட்டு மதச்சார்பின்மை, சகிப்புத் தன்மை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர்; இன்றும் இருந்து வருகின்றனர். 'மதமா? மனித  சமுதாய நல்லிணக்கமா? என கேள்வி எழுந்தபொழுதெல்லாம் மத உணர்வுகள் மக்களிடம் மட்டுப் பட்டே வந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்தினைப் பொறுத்த அளவில் மதச் சார்பின்மையினை வலியுறுத்தும் விதிகள் உள்ளன. விதிகள் எனும் பொழுது மதச்சார்பின்மை கருத்தினை வலியுறுத்தும் எழுத்துகள் உள்ள அளவிற்கு மதச் சார்பின்மை எண்ணங்கள் இன்றைய ஆட்சியாளர்களால் போற்றப்படவில்லை; பேணப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை. மத உணர்வுகளை பாதுகாத்து மத நடவடிக்கையால் விளைந்த மனித சமத்துவத்துக்கு எதிரான நிலைகளுக்கு ஏதுவான விதிமுறைகளும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியினை வலியுறுத்தும் விதிமுறைகள் நீக்கப்பட வேண்டும் என 1957-இல் தந்தை பெரியார், அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட் டத்தினை நடத்தினார். 3000க்கும் மேற்பட்டோர் சிறை புகுந்தனர். மேலும் ஒரே மதத்திற்குள்ளே ஏற்றத் தாழ்வு, தொட்டால் தீட்டு, என்று, தாம் விரும்புகின்ற கடவுளைக் கூட பூஜை செய்யும் பணி ஒரு ஜாதியினருக்கு மட்டுமே உள்ளது. இதனை எதிர்த்து அனைத்து ஜாதியினரும் கோயில்களில் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என பெரியார் தொடங்கிய போராட்டம் பெரியார் நிறுவிய பகுத்தறிவு சுயமரியாதை இயக்கமாகிய திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் இன்றும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இதற்கென தனிச் சட்டம் இயற்றப்பட்டாலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

கேரள அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் ஆணையினை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி யுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில்  மத உணர்வுகளை போற்றிப் பாதுகாக்கின்ற விதிமுறைகள் பலவீனப்படுத்தப் பட வேண்டும். இறுதியில் முறையாக நீக்கம் பெற வேண்டும். மதச் சார்பின்மைக்கு வலு சேர்க்கும் விதி முறைகள் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். வெறும் விதிமுறையாக எழுத்தில் மட்டுமல்லாமல் நடைமுறை யிலும் ஆக்கம் பெறுகின்ற வகையில் ஆட்சியாளர்களை நடத்திடும் பணி பகுத்தறிவாளருக்கு உள்ளது.  அறிவியல் மனப்பான்மை எதனையும் கேள்விக்கு உள்ளாக்கி உண்மையினை அறிந்து கொள்வது குடிமக்களின் அடிப்படைக் கடமையாக அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி கூறி பதவி ஏற்றுள்ள ஆட்சியாளர்கள் அடிப் படைக் கடமைகளுக்குப் புறம்பாக வெறும் புராணச் செய்தி களையும் அறிவியல் ஆதாரம் அற்ற செய்தி களையும் அறிவியல் தொழில் நுட்பச் செய்திகளாக கூறி வருகின்றனர். ஆளும் பிஜேபி அரசின் பிரதமர் தொடங்கி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் எனப் பலரும் முக்கிய நிகழ்ச்சிகளில், அறிவியல் மாநாட்டில் ஆதாரம் ஏதுமின்றி, போகிற போக்கில் புராணச் செய்திகளை அறிவியல் தொழில் நுட்பத்துடன் தொடர்பு படுத்தி கருத்தினைக் கூறி வருகின்றனர்; அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக நடந்து வருகின்றனர். சட்டத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொள்ளுவது பகுத்தறி வாளர்களுக்கு ஒரு பெரிய அறைகூவலாக இருக்கிறது. இதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்திடும் பகுத்தறி வாளர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படு கிறார்கள். 2013-இல் தொடங்கி டாக்டர் நரேந்திர தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் எம்.எம். கல்புர்கி மற்றும் இதழியல் மனித உரிமை ஆர்வலர் கவுரி லங்கேஷ் ஆகியோர் ஒரேவிதமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப் பட்டு தண்டனை வழங்கப்படவில்லை என்பதே ஆட்சியின் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதுவும்  கொலை செய்த மத ஆதிக்கவாதிகள் இன்னும் சட் டத்தின் பிடியில் சிக்காததுவும் மதச் சார்பற்ற இந்தியாவை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மேலும் பல பகுத்தறிவா ளர்கள் - மனித நேயர்கள் மதவெறியர்களின் கோரப் பசிக்கு இரையாகலாம். இவ்வளவு இன்னல் களையும் எதிர்த்துதான் பகுத்தறிவாளர்கள் போராட வேண்டி யுள்ளது; எதிர் வன்முறை தவிர்த்து பிரச்சாரம் செய்திட வேண்டியுள்ளது. தொடர்ந்து பகுத்தறிவாளர்கள் செய் திடும் பிரச்சாரத்தின் மூலம்தான் பொது மக்களிடம் விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்திட முடியும். அறிவியல் மனப்பான்மையினை அவர்களிடம் உருவாக்கிட முடியும். அறிவியல் அல்லாதவற்றை, அறிவியலுக்கு புறம்பானவற்றை பகுத்து, தவறாக வழி மாற்றிடும் ஆட்சியாளர்களை அடையாளம் காண முடியும். இதுவே மதச் சார்பற்ற இந்திய நாட்டில் பகுத்தறிவாளர்கள் நேர் கொண்டுள்ள அறைகூவல்கள்; ஆற்றிட வேண்டிய கடமைகள். இது நீண்ட நெடிய பணி - பயணமாகும். ஆனால் மானுடத்திற்கு நிலையான பயனை அளித்திட வல்லதாகும். அத்தகைய பயணத்தை பகுத்தறிவாளர் களாகிய நாம் மேலும் உறுதிபூண்டு வலிமையாக தொடர்ந்து நடத்துவோம்! இவ்வாறு வீ. குமரேசன் தமதுரையில் குறிப்பிட்டார்.

பகுத்தறிவாளர் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களுக்கு விருது வழங்கல்


கடந்த ஆறு ஆண்டுகளாக "சார்வாகம்" நிகழ்வு நடத்தப்பட்டு வந்தாலும், நடப்பு ஆண்டு (2018) முதல் "சுதந்திர சிந்தனையாளர் விருது" வழங்கிட யுக்திவாத பாடனகேந்திரம் முடிவெடுத்தது. "சார்வாகம் 2018" நிகழ்ச்சியில் முதன் முறையாக சுதந்திர சிந்தனையாளர் விருது (Free Thought Award) வழங்கப்பட்டது. அனைத் திந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களுக்கு விருது வழங் கப்பட்டது. விருதுக் கேடயம், விருது மடல் ஆகியவற் றுடன் விருது பண முடிப்பாக ரூபாய் பத்தாயிரத்தை யுக்திவாத பாடனகேந்திர அமைப்பினர் வழங்கினர்.

"சார்வாகம் 2018" இதர நிகழ்ச்சிகள்


முதல் நாள் முற்பகல் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் குரீபுழா சிறீகுமார் தொடக்கவுரை ஆற்றினார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் ஆட்சியின் தேசிய செயலாளர் பினாய் விஸ்வம் சிறப்புரை வழங்கினார். அடுத்து "உண்மையின் மணம்" (Fragrance of Truth) எனும் தலைப்பில் பேராசிரியர் சி. ரவிச்சந்திரன் கணினி படங்கள் மூலம் விளக்கம் அளித்து உரையாற்றினார்.

மாலையில் கணினி தொழில் நுட்பத்துடன் கூடிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறார்கள் மகளிர் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர். கலை நிகழ்ச் சிகள், பார்த்தோர் மனம் கொள்வதாக சிறப்புடன் நடந்தன.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஒரு கிரேக்கப் புராணம் (A Greek Myprology) எனும் தலைப்பில் தொழில் நிறுவன உரிமையாளர் ஜோர்டி ஜார்ஜ், 'மதம் சார்ந்த சமூகத்தில் மகளிருக்கு சுதந்திர சிந்தனை சாத்தியமா? (Is Free Thought Possible for Women in Religion Society) எனும் தலைப்பில் கல்வியாளர் அஜா சூசன் ஜார்ஜ் மற்றும் "குடியரசு மற்றும் மக்களாட்சி; இந்தியாவின் ஏக்கங்கள்" (Republic and Democracy Longing India) எனும் தலைப்பில் டாக்டர் அருண்குமார் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

பிற்பகல் 'பயம் பற்றிய உள்ளுணர்வுகள்' (Chemistry of Fear) எனும் தலைப்பில் உளவியலாளர் இ. பிரியதர்சினி, 'ஹேராம் (Heyram) எனும் தலைப்பில் மனுஜா மைத்ரி, 'ஆட்டம் முடிக்கப்பட்டது. (Innings Declared) எனும் தலைப்பில் டாக்டர் பி.எஸ். ஜினேஷ் மற்றும் "நான் நேர்கொண்ட கேள்விகள்"(Questions I Faced) எனும் தலைப்பில் இ.பி. ஜாபர் உரையாற்றினர்.

"சார்வாகம் 2018" நிகழ்வுகள் இரண்டு நாள்கள் சிறப்பாக நடந்தேறின. யுக்திவாத பாடனகேந்திரத்தின் பொறுப்பாளர்கள் ஜார்ஜ், கோபக்குமார் மற்றும் ஆர்வ லர்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

- விடுதலை நாளேடு, 16.5.18