பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநரும், சமூக செயற்பாட்டாளருமான வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு ''சமூக நீதிக்கான கி.வீரமணி விருது'' வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிந்தார். உடன்: எஸ்.ராஜரத்தினம் அய்.ஏ.எஸ். (ஓய்வு), சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், முனைவர் கோ.ஒளிவண்ணன், மருத்துவர் ஆர்.மீனாம்பாள், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர்
இரா.தமிழ்ச்செல்வன்.வித்யா பூஷன் ராவத்தின்
மகள் விதிதா பிரியதர்ஷினி
(சென்னை, 14.11.2025)
இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில் ‘‘வித்யா பூஷன் ராவத்”கள் தேவைப்படுகிறார்கள்!
– திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விருதாளரைப் பாராட்டி உரை!
பெரியார்தான்; தமிழ்நாடுதான்; திராவிட மாடல்தான்
இந்தியாவின் ஒரே நம்பிக்கை!
– விருதைப் பெற்றுக் கொண்டு எழுத்தாளர் வித்யா பூஷன் ராவத் ஏற்புரை!
சென்னை, நவ.15 கிருமிகளை எதிர்க்க உடலுக்கு எதிர்ப்பு சக்தி தேவை என்பதுபோல், மூடநம்பிக்கைகளை தகர்க்க, புத்தியின் எதிர்ப்பு சக்திக்கு பெரியார் அம்பேத்கர் தேவை என்று ”சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார். விருதை பெற்றுக் கொண்டு, ’திராவிடர் கழகம், திராவிடர் இயக்கத்தின் முதுகெலும்பு’ என்று வித்யா பூஷன் ராவத் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார்.
இரு பெரும் விழாக்கள்!
பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில், “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” மற்றும் “ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தக வெளியீட்டு விழா! என்று நடைபெற்ற இரு பெரும் விழாக்கள் நேற்று (14.11.2025), மாலை 6 மணியளவில், சென்னை கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத்தளத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரியார் மருத்துவக் குழுமத்தின் செயலாளர் – மருத்துவர் ஆர்.மீனாம்பாள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். எஸ்.ராஜரத்தினம் அய்.ஏ.எஸ். (ஓய்வு) தலைமையேற்று உரை நிகழ்த்தினார். அமெரிக்கா – பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் ”ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தகத்தை வெளியிட, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் பெற்றுக்கொண்டு, புத்தகம் குறித்த ஆய்வுரையை வழங்கினார். அதைத் தொடர்ந்து நிகழ்வில் தமிழ், ஆங்கில மொழிகள் கலந்து இணைப்புரை வழங்கிய முனைவர் கோ.ஒளிவண்ணன், விருதாளரை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வித்து உரையாற்றினார். விருதுக்கான கருத்துருவை வாசித்த மருத்துவர் சோம. இளங்கோவன், வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு, பலத்த கைதட்டல்களுக்கிடையே 2025 ஆம் ஆண்டுக்கான, “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” விருது வழங்கி சிறப்பித்தார். கழகத் தலைவர் விருதாளருக்கும், நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அவரது மகள் பிரியதர்ஷினி அவர்களுக்கும் சேர்த்து பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். தொடர்ந்து விருதாளரைப் பாராட்டி கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.
பெரியார் பன்னாட்டு அமைப்பின் மாட்சி!
முன்னதாக பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன், “பெரியார் பன்னாட்டு அமைப்பு” தொடங்கப்பட்டதன் பின்னணி மற்றும் இதுவரை விருதுகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன. அவர்களின் வரலாற்றை குறுகிய நேரத்தில் படக்காட்சி மூலம் விளக்கி, 1994 இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 1996 இல் சமூகநீதிக் காவலரும்; இந்திய அரசின் முன்னாள் பிரதமருமான வி.பி.சிங் முதல், 2022இல் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரையிலும் 22 சமூகநீதிப் போராளிகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது என்றும், அந்த வரிசையில் எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான வித்யா பூஷன் ராவத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்றும் விவரித்தார். விருது என்பது, விருதுக்கான கருத்துரு அடங்கிய நினைவுப் பரிசு மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெளியிடப்பட்ட ”ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தகத்தின் விலை ரூ.250/- என்றும் சிறப்புச் சலுகையாக ரூ.200/- க்கு கிடைக்கும் என்று அறிவிக் கப்பட்டு, ஏராளமான தோழர்கள் உரிய தொகை கொடுத்து வரிசையாக வந்து தமிழர் தலைவரிடம் பெற்றுக்கொண்டனர்.
திராவிட மாடல்தான் ஒரே நம்பிக்கை!
விருதை பெற்றுக்கொண்ட வித்யா பூஷன் ராவத் தனது ஏற்புரையில், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியாரின் கொள்கைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் பரப்பி வருகிறார்; திராவிடர் கழகம் தான் திராவிடர் இயக்கத்தின் முதுகெலும்பாக இருக்கிறது; நாங்கள் தமிழ்நாட்டு மாடலை பின்பற்ற விரும்புகிறோம்; வடநாட்டில் மக்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை; ஆர்.எஸ்.எஸ். இதைப் பயன்படுத்திக் கொள்கிறது; பெரியார், ஃபூலே, அம்பேத்கர் ஆகியோரை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்; பெரியார் – ஆசிரியர் வீரமணி – தமிழ்நாட்டின் பங்களிப்பு இந்தியா முழுவதற்கும் பெரிதாகத் தேவைப்படுகிறது; பெரியார் தான் – தமிழ்நாடு தான் – திராவிட மாடல் தான் நம்பிக்கை தருகிறது என்று குறிப்பிட்டுப் பேசினார்.
ஜாதி இருக்கும் வரை
சமூக நீதி இருக்கும்!
இறுதியாக கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். ”நாங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது சுற்றுப்பயணத்திற்கு அல்ல, பெரியாரின் தத்துவத்தை பரப்புவதற்குத்தான். மண் நன்றாக இருந்தால் விதைகள் உடனே முளைத்துவிடும். அப்படித்தான் ஆஸ்திரேலியா! மிகக்குறுகிய காலத்திலேயே ஒரு பன்னாட்டு மாநாடு அங்கே நடந்து முடிந்திருக்கிறது” என்றும், அதில் தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் காணொலி உரைகள் வழங்கியதை பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், ”சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” பெற்ற வித்யா பூஷன் ராவத் அவர்களைப் பற்றி பேசும் போது, ”வடநாட்டில் தமிழ்நாட்டைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், வித்யா பூஷன் ராவத் மிகச்சரியாக புரிந்துகொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் இந்த விருது தனது பெயரில் இருப்பது தனக்கு உடன்பாடு இல்லை என்றும், பெரியார் பெயரில் தான் இருக்க வேண்டும் என்று பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களிடம் குறிப்பிட்டதை எடுத்துரைத்தார். தொடர்ந்து, பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான மருத்துவர்கள் சோம. இளங்கோவன், இலக்குவன் தமிழ், சரோஜா இளங்கோவன் ஆகியோரின் தொண்டுகளை சிறப்பித்துப் பேசினார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் மூலம் நடைபெற்ற நான்கு பன்னாட்டு மாநாடுகளின் சிறப்பை எடுத்துரைத்தார். ஜாதி இருக்கும் வரை ஜாதி அடிப்படையில் சமூக நீதி அவசியம் என்றார்! ஆகவே நமக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் வித்யா பூஷன் ராவத்கள் தேவைப்படுகிறார்கள். கிருமிகளை எதிர்க்க எப்படி உடலுக்கு எதிர்ப்பு சக்தி தேவையோ அதுபோல, மூடநம்பிக்கைகளை தகர்க்க, புத்தியின் எதிர்ப்பு சக்திக்கு பெரியார் அம்பேத்கர் தேவை என்றும், இவ்விருது வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது இன்னமும் அவர் அதிகமாகத் தொண்டாற்றுவதை ஊக்கப்படுத்தத் தான் என்று கூறி, தமது உரையை நிறைவு செய்தார்.
‘பெரியார் உலக’த்திற்கு
நா. எழிலன் எம்.எல்.ஏ. நன்கொடை
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்
நா. எழிலன் ‘பெரியார் திடலின் மாணவனாகிய நான் ‘பெரியார் உலக’த்திற்கு மேலும் 1 லட்சம் வழங்கு கிறேன்’ என்று குறிப்பிட்டு தமிழர் தலைவரிடம் அதற்குரிய காசோலை வழங்கினார்.
கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்!
இறுதியில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்வில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சே.மெ.மதிவதனி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு, மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாம்பரம் சு.மோகன்ராஜ், கலைமாமணி கலைவாணன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன், பெரியார் களம் தலைவர் இறைவி, சி.வெற்றிச்செல்வி, சேரலாதன், வேலூர் பாண்டு, தா.கு.திவாகரன், மு.சண்முகப்பிரியன், மு.ரா.மாணிக்கம், மா.குணசேகரன், கூடுவாஞ்சேரி மா. இராசு, சிங்கபெருமாள் கோயில் கருணாகரன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். உரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘பெரியார் உலகத்திற்கு’நன்கொடை
சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் ‘பெரியார் உலகத்திற்கு’
ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.