வெள்ளி, 14 ஜூன், 2024

கன்னடத் திரைப்படங்களில் பெரியார் சிந்தனை!


விடுதலை ஞாயிறு மலர்
Published June 15, 2024

கன்னடத் திரைப்படங்களின் பரிதாப நிலை கருநாடக மாநில எல்லைக்கு வெளியே அவற்றுக்கு வியாபாரமே இல்லை என்பதுதான். அவ்வப்போது எழும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளாலும் மற்ற மாநிலங்களில் திரையிட இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பல சிறந்த கன்னடப் படங்கள் பற்றி நமக்குத் தெரிவதே இல்லை. தொழிற்நுட்ப வளர்ச்சி ஏற்பட்ட பிறகு சில வலைதளங்களில் சிலவற்றைப் பார்க்க முடிகிறது என்றாலும் குறை முழுமையாகத் தீரவில்லை. அற்புதமான சில கன்னடப் படங்களில் பெரியார் சிந்தனை பளிச்சிடுகிறது. மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு போன்ற பல அம்சங்கள் அவற்றில் புதைந்துள்ளன. “அடடே! தந்தை பெரியாரும் இதைத்தானே சொன்னார்!” என்று சில படங்கள் வியக்க வைக்கின்றன. மூன்று முத்தான திரைப்படங்கள் – “கடஷ்ரத்தா” (1977), “வம்ச விருஷா” (1971), “சம்ஸ்காரா” (1970) ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போமா?

கடஷ்ரத்தா

படம் வெளிவந்த ஆண்டு 1977. உடுப்பா என்ற பார்ப்பனர் வேத பாடசாலை நடத்தி வருகிறார். மகள் யமுனா ஒரு கைம்பெண். சமூக எதிர்ப்புகளை மீறி மறுவாழ்வு தேடிக் கொள்ள முடிவு செய்கிறாள். ஒரு பள்ளி ஆசிரியரைக் காதலித்து ரகசியமாக உறவு கொள்கிறாள். வேதப் பாடசாலைக்கு நன்கொடை திரட்ட ஊர் ஊராகச் செல்லும் உடுப்பாவுக்கு இது தெரியாது. யமுனா கருவுற்றிருக்கும் நிலையில் பார்ப்பனர் கூட்டம் அவளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அவளை விரட்டியடிக்கிறது. யமுனாவிற்கு கருக்கலைப்பு நிகழ்கிறது. ஊர் திரும்பி வரும் உடுப்பா நடந்தவற்றையெல்லாம் கேள்விப்பட்ட பின் உயிருடன் வாழும் மகளுக்கு ஈமச் சடங்குகள் (கடஷ்ரத்தா) செய்கிறார். உயர்ஜாதி வெறியர்களால் யமுனாவின் சிரம் மழிக்கப்பட்டு ஓர் ஆலமரத்தடியில் அவள் அனாதையாக விடப்படுகிறாள். வேதப் பாடசாலையில் பயின்ற ஒரு சிறுவன் நானி அவளுக்காக பரிதாபப்பட்டு ஆறுதலாக இருக்கிறான். அதுவும் நீடிக்கவில்லை. அவனை இழுத்துச் சென்று விடுகிறார்கள்.

தந்தை பெரியாரால் சமூகச் சீர்திருத்தம் ஏற்படுவதற்கு முன்பு இருந்த அவல நிலையை இந்தப் படம் சித்தரிக்கிறது. பெரியார் ஏன் எல்லா காலத்திற்கும் தேவைப்படுகிறார் என்பதையும் புரிய வைக்கிறது.

வம்ச விருஷா

1971இல் வெளிவந்து பல விருதுகளைப் பெற்ற படம். மூலக்கதை எஸ்.எல்.பைரப்பா எழுதிய நாவல். இயக்குநர் கிரீஷ் கர்னாட். கதையின் காலக்கட்டம் 1924.

சிறீனிவாஸ ஷ்ரோத்திரி ஆச்சார அனுஷ்டானங்களில் மூழ்கிப் போன பார்ப்பனர். மகன் நஞ்சுண்டன் ஒரு குளத்தில் நீரில் மூழ்கி இறந்துவிடுகிறான். மருமகள் கார்த்தியாயினி தலையை மழித்துக் கொள்ளாமல், விதவைக் கோலம் பூணாமல் வாழ முடிவு செய்கிறாள். மகன் சிறீனி தாத்தாவின் பெயருடன் வாழ்கிறான். கார்த்தியாயினி உயர் கல்விக்காக கல்லூரிக்குச் செல்கிறாள். ராஜா ராவ் என்ற கல்லூரிப் பேராசிரியரை நேசித்து மறுமணம் செய்து கொள்கிறாள்.

சிறீனிவாஸ ஷ்ரோத்திரிக்குத் தான் பார்ப்பனரே அல்ல என்ற உண்மை ஒரு நாள் தெரிய வருகிறது. ஆண்மை இழந்த தந்தை மனைவியை ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞனுடன் உறவு கொள்ள வைத்து, அப்படிப் பிறந்தவர் இவர் என்ற உண்மை தெரிய வருகிறது. வம்சம் என்ற மரம் (விருஷம்) தழைக்கவும், சொத்து பங்காளிகளுக்குப் போய்விடக் கூடாது என்பதற்காகவும் அந்த மனிதர் செய்த கொடுமை அது. சில பார்ப்பனர்களின் வேர் உண்மையில் எது என்று யாருக்குத் தெரியும் என்பதே இந்தப் படம் மறைமுகமாகக் கேட்கும் கேள்வி.

சம்ஸ்காரா

நம் பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில இரண்டு ஆண்டுகளுக்கு முன் திரையிடப்பட்ட படம் இது. 1970இல் வெளிவந்தது. மூலக்கதை யு.ஆர்.அனந்தமூர்த்தி. தேசிய விருது பெற்ற படம்.

துர்வாசபுரா என்ற கிராமத்தில் நாராயணப்பா எனும் பார்ப்பன இளைஞன் எல்லா பார்ப்பனிய கோட்பாடுகளையும் நிராகரித்து வாழ்பவன். அவன் இறந்த பின் இறுதிச் சடங்குகள் செய்ய பார்ப்பனர் எவரும் முன்வராத நிலை ஏற்படுகிறது. ப்ரானேஷாச்சார்யா என்ற பார்ப்பனர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முயல்வதே படத்தின் இறுதிக் கட்டம். பார்ப்பனர் அல்லாத எவரும் சடங்கைச் செய்யவும் கூடாதாம். இறுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் ரகசியமாக சடங்கைச் செய்தே விடுகிறாள். உயர் ஜாதியினரின் ஆணவப் போக்கையும், பிற்போக்குத்தனத்தையும் வெளிப்படுத்திய படம் “சம்ஸ்காரா”.

அறிவியல் சாதனை

‘இனிவரும் உலகம்’ தந்தை பெரியார் எந்த அளவுக்கு அறிவியல் சாதனைகளை உறுதியாக நம்பினார் என்பதை நமக்குப் புரியவைத்தது, அவருடைய அடிச்சுவட்டில் பயணித்து வந்துள்ள நம் ஆசிரியர் அறிவியலின் சிறப்பைப் பற்றி எக்கச்சக்கமாக எழுதிக் குவித்துள்ளார். அறிவியலின் சமீப கால சாதனை காலத்தால் அழியாதவை என்று எல்லோரும் நம்பியும் அழிந்துப் போன பல இந்தியத் திரைப்படங்களுக்கு மீண்டும் உயிரூட்டி புதிய வடிவம் தந்த அதிசயம்தான்.

பல பழைய படங்களின் நெகடிவ்கள் புழுதி படர்ந்து கிடக்கின்றன. National Film Archive of India (NFAI) மற்றும் Film Heritage Foundation (FHF) எனும் நிறுவனங்கள் பல நவீன தொழிட்நுட்பங்களைப் பயன்படுத்தி அத்தகைய படங்களைப் புதுப்பித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 46 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த “கடஷ்ரத்தா” என்ற கன்னடப் படம் இவர்களால் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. ஷ்யாம் பெனகலின் “மன்தன்” புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

பல தமிழ்ப் படங்களும் காணாமல் போய்விட்டன. உதாரணமாக – “வேலைக்காரி”. 1980இல் வெளிவந்த திரைப்படம் “நதியைத் தேடி வந்த கடல்” வலைதளங்களில் கூட இல்லை. அதன் இயக்குநர் லெனின் “நானே தேடிக்கிட்டிருக்கேன்.

கிடைச்சா சொல்லுங்க” என்கிறாராம். அவருடைய சகோதரர் இருதயராஜும் தேடும் பணியில் உள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக