அய்ரோப்பிய நாடுகள் பல சென்று அய்யாவின் கொள்கைமணம் பரப்ப இங்கிலாந்து நாட்டிலும், பிரான்ஸ் நாட்டிலும், ஜெர்மனி நாட்டிலும் வாழும் இன உணர்வுமிக்க தமிழ் சகோதர, சகோதரிகளின் அன்பழைப்பை ஏற்று 26.08.1983 மற்றும் செப்டம்பர் 17, 18 தேதிகளில் நடைபெறும் திரு.வி.க. நூற்றாண்டு, தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்களிலும் கலந்துகொள்வதற்காக 24.08.1983 அன்று மாலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றேன்.
அய்ரோப்பிய நாடுகளுக்கு ஒரு மாதகால சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிற என்னை வழியனுப்பு விழாவை கழகத் தோழர்களும் நண்பர்களும் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் கழகத் தோழர்கள் அணிவித்த மாலைகளுடன், துண்டுகளும் மலைபோல் குவிந்தன.
ஜனார்த்தனம் எம்.எல்.சி., மணவைத் தம்பி எனக்கு மாலை அணிவித்தனர். என்னுடன் கா.மா.குப்புசாமி, மதுரை மாநகர கழகத் தலைவர் தேவசகாயம், சுபா.சுந்தரம், ஆகியோர் வந்தனர்.
லண்டன் போய் சேருவதற்கு முன்பாக, லண்டன் செல்லும் வழியில் பம்பாய் விமான நிலையத்தில் பம்பாய் திராவிடர் கழகம், தி.மு.க., பகுத்தறிவாளர் கழகம், தாராவி தி.மு.க., ஓர்லி தி.மு.க., பாந்தரா தி.மு.க., தி.மு.க. இலக்கிய அணி ஆகிய அமைப்புகள் சார்பாக மலர்மாலைகள், கைத்தறி துண்டுகள் அணிவித்தார்கள். சிறப்புமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுக்கொண்டு நன்றியுரை ஆற்றினேன்.
பாரீஸ் விமான நிலையத்தில் தமிழக குடும்பங்கள் வந்திருந்து அன்பான வரவேற்பை அளித்தார்கள். தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் நாகதேவன், செயலாளர் தேவதாசன், துணைத் தலைவர் சுந்தரம், துணைச் செயலாளர் ரத்தினம் மற்றும் ராமசாமி, வீசிங்கம், வடிவேலு, இராயகுமார், புருஷோத்தமன், புலவர் மாயவன், தியாகராசன், சந்திரபாபு, ‘அம்பேத்கர் நினைவு டிரஸ்டின்’ முக்கிய பொறுப்பாளர் சக்கரவர்த்தி, என்னுடைய மைத்துனர் ஜெயம் மற்றும் தோழர்கள் வரவேற்றனர்.
தமிழ் விடுதலைக் கூட்டணி _ லண்டன் கிளையைச் சார்ந்த அமீர். காண்டீபன் (தமிழ் அய்க்கிய முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் மகன்) உமாமகேஸ்வரன் ஆகியோரும் என்னை சந்தித்துப் பேசினர்.
நான் லண்டன் சேர்ந்தவுடன் ‘விடுதலை’ அலுவலகத்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலமாக வந்துசேர்ந்த செய்தியை தோழர்களுக்கு தெரிவிக்குமாறு சொன்னேன்.
27.08.1983 அன்று லண்டன் நகரில் நடைபெற்ற திரு.வி.க. நூற்றாண்டு மலரை தோழர் அரங்க.முருகையன் வெளியிட, முதல் பிரதியை நான் பெற்றுக்கொண்டேன்.
லண்டன் _ திருவள்ளுவர் பள்ளியில் நடந்த திரு.வி.க. நூற்றாண்டு விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். தமிழர் குடும்பங்கள் பெருமளவு கலந்துகொண்டனர்.
29.8.1983 அன்று கொள்கைப் பிரச்சாரம் மேற்கொள்ள லண்டன் சென்று இருந்த நான் கழகத் துணைப் பொதுச்செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன். கழகப் பணிகள் செம்மையாக நடைபெறவும், கல்வி நிறுவனங்களில் ‘அட்மிஷன்ஸ்’ குறித்தும், லண்டனில் சிறப்புடன் நடைபெற்ற விழாக்கள் குறித்தும் விளக்கி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டேன்.
“இந்த ஆண்டு நமது அறிவு ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாளை பாரீசில் நானும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் கலந்து கொண்டு இங்குள்ள தோழர்களுடன் சிறப்பாகக் கொண்டாடும் நல்வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம். நமது தோழர்கள் அனைவரும் அய்யா அவர்களின் பிறந்த நாளில் கலந்துகொண்டு சிறப்புடன் கொண்டாட வேண்டும்’’ என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
16.09.1983 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசு நகரத்தில் தமிழீழ விடுதலை அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நானும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் கலந்துகொண்டோம். நிகழ்ச்சிக்கு ஏராளமான தமிழன்பர்கள், இளைஞர்கள் வந்திருந்தனர்.
தந்தை பெரியார் அவர்களின் படத்தை நான் திறந்து வைத்தேன். நிகழ்ச்சி தியேட்டர் சணலா மண்டபத்தில் நடைபெற்றது. (இங்குதான் முன்பு பாரதி விழாவும் நடைபெற்றது) நிகழ்ச்சியில் இனவுணர்வு கொண்ட தமிழர்கள் ஏராளமாக குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டார்கள்.
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் 17.09.1983 அன்று மாலை பாரீசு நகரத்தில் தந்தை பெரியார் அவர்களின் மார்பளவு சிலையை பாவலரேறு பெருஞ்சித்திரனார் திறந்து வைத்தார்.
பழ.நெடுமாறன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டும் ஆசிரியர் கி.வீரமணி.
இந்த சிலை உலகப் புகழ்பெற்ற ‘ஜார்ஜ் பம்பைடு தேசிய நூலகம்’ _ அருங்காட்சியத்திற்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. கார்ல் மார்க்ஸ் போன்ற உலகப் புகழ் பெற்ற முக்கிய தலைவர்களின் சிலை இந்த காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தந்தை பெரியாரின் சிலையும் அங்கு வைக்கப்பட்டது.
அதன் பிறகு பிற்பகல் 1 மணிக்கு (லண்டன் நேரம்) பாரீசிலிருந்து லண்டன் சென்றோம். அங்கு 19.9.1983 அன்று இலங்கை தமிழர் அய்க்கிய முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களும் நானும் சந்தித்துப் பேசினோம் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
பின்பு லண்டனில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் நாங்கள் இருவரும் கலந்துகொண்டோம்.
விழாவில் தந்தை பெரியார் படத்தை தமிழ் அய்க்கிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் திறந்து வைத்து தந்தை பெரியாரின் தொண்டுகளைப் பற்றியும், தமிழ் ஈழ விடுதலை பற்றியும், இந்தியாவின் தூதர் ஜி.பார்த்தசாரதி ஜெயவர்த்தனேயுடன் தாம் நடத்திய பேச்சு வார்த்தைகள் பற்றியும் விளக்கி உரையாற்றினர்.
விழாவில் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தினர் கேட்ட கேள்விகளுக்கு அமிர்தலிங்கம் பதிலளித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து நானும் உணர்ச்சிபூர்வமான உரையை ஆற்றினேன்.
19.09.1983 அன்று லண்டன் ‘பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்’ (ஙி.ஙி.சி) தமிழோசை நிகழ்ச்சிக்கு திரு.தி.சங்கரமூர்த்தி அவர்கள் என்னை பேட்டி கண்டார். அப்பேட்டியில், “தந்தை பெரியார் ஆலமரத்தின் விழுதுகள் நாங்கள். நான் இந்த இயக்கத்தின் தொண்டர்களுக்கெல்லாம் தொண்டன். பெரியார் இந்தியாவைத் தாண்டி உலகத்தவரால் பின்பற்றப்படுகிறார்’’ என்று குறிப்பிட்டேன்.
அதனைத் தொடர்ந்து 20.9.1983 அன்று ‘அம்பேத்கர் மிஷன்’ அமைப்பைச் சார்ந்த தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
தொடர்ந்து லண்டன் நகரில் நடைபெற்ற லண்டன் பகுத்தறிவாளர் சங்கம் (ழிணீtவீஷீஸீணீறீ ஷிமீநீuறீணீக்ஷீ ஸிமீபீ ஷிஷீநீவீமீtஹ்) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினேன்.
உலக நாத்திகத் தலைவர்களில் ஒருவரான சார்லஸ் பிராட்லா அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு.
இந்த சிறப்பான நிகழ்ச்சி லண்டன் நகரில் உள்ள “ரெட் ஸ்கொயர்_கான்வே’’ மன்றத்தில் (ஸிமீபீ ஷிஹீuணீக்ஷீமீ சிஷீஸீஷ்ணீஹ் லீணீறீறீ) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு திருமதி மார்பரா தலைமை தாங்கினார். சார்லஸ் பிராட்லாவின் 150ஆவது பிறந்த நாள் செப்டம்பர் மாதம் வருவதை ஒட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆசிரியர் அவர்களும் இலங்கை தமிழர் அய்க்கிய முன்னனித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களும் உரையாடும் காட்சி.
பிராட்லா அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டு பின் நிகழ்வில் உரையாற்றினேன். தந்தை பெரியார் அவர்களின் நாத்திக கொள்கைகளையும் சிந்தனைகளையும் மனிதாபிமானக் கொள்கைகளையும் விளக்கி உரையாற்றினேன். உலகப் புகழ்வாய்ந்த இந்தப் பகுத்தறிவு சங்கத்திற்கு தந்தை பெரியார் படத்தையும், அய்யாவின் நூல்களையும் நான் அன்பளிப்பாக வழங்கினேன்.
கேள்வி _ பதில் நிகழ்ச்சியும் 3 மணி நேரம் நடைபெற்றது. மனிதாபிமான சங்கத்தைச் சேர்ந்தவர்களும் (பிuனீணீஸீவீst கிssஷீநீவீணீtவீஷீஸீ) ஆந்திர நாத்திகர் கோராவுடன் மகன் லவணனும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ‘அம்பேத்கர் மிஷன்’ அமைப்பைச் சார்ந்த தோழர்களும் கலந்துகொண்டனர்.
21.9.1983 அன்று ‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்’ பகுதியில் பிரிட்டிஷ் லேபர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த விழாவில் நானும் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
லேபர் கட்சியைச் சார்ந்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் என்னை சந்தித்து உரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதும், லண்டன், பாரீசு உள்ளிட்ட நகரங்களில் என்னுடைய பயணம் கொள்கைப் பயணமாக அ¬மைந்தது.
அய்யாவின் கருத்துகளை அய்ரோப்பிய நாடுகளில் புகழ்பரப்பி வெற்றியுடன் திரும்பிய என்னை சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார். 29.09.1983 அன்று விமான நிலையத்தில் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து என்னை வரவேற்றார்கள். கழகக் குடும்பங்களின் அன்பு வெள்ளத்திலும், மறைந்த ஈழ விடுதலைப் போராளிகள் தங்கதுரை, குட்டிமணி குடும்பத்தாரின் சார்பிலும் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றார்கள் என்பதை நினைக்கும்போது உணர்வு மெய்சிலிர்க்கிறது.
02.10.1983 அன்று சென்னை பெரியார் திடலில் மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி நடக்கும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி நடந்த அனைத்துக் கட்சி பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
நாத்திகர் சார்லஸ் பிராட்லா சிலை அருகில் ஆசிரியர்.
03.10.1983 அன்று மத்திய அரசு அலுவலகங்களின் முன் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்து 2.10.1993 அன்று முக்கிய அறிக்கை ஒன்றின் மூலமாக கழகத் தோழர்களை கேட்டுக் கொண்டேன்.
அய்ரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய எங்களுக்கு ‘பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்’ சார்பாக 06.10.1983 முற்பகல் 11.30 மணிக்கு மிகச் சிறப்பான அளவுக்கு வரவேற்புக் கொடுத்தார்கள்.
நான் உரையாற்றினேன். தமிழ் மக்களுடைய வாழ்வு, நாகரீகம், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவைகளை மேலைநாட்டுடன் ஒப்பிட்டுக் காட்டியும், குறிப்பாக பெண்களுடைய நிலைமை நமது நாட்டிற்கும், மேலை நாட்டிற்கும் எவ்வாறு மாறுபட்டிருக்கிறது என்பதனை விளக்கி மிகச் சிறப்பான அளவுக்கு பேசினேன்.
- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
உண்மை இதழ், 1.8.18