வெள்ளி, 7 ஜூன், 2019

பகுத்தறிவாளர்கள் செயல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

70 பேர் வந்துள்ளீர்கள் பயிற்சிக்கு என்றால் தலா 10 பேர் என்று கணக்கிட்டு அதனை 700 ஆக வளர்க்கவேண்டும்!
பகுத்தறிவாளர்கள் செயல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை
தஞ்சை, ஜூன் 7   பகுத்தறிவாளர் பயிற்சிப் பட்டறைக்கு 70 பேர் வந்துள்ளீர்கள் பயிற்சிக்கு என்றால், தலா 10 பேர் என்று கணக்கிட்டு அதனை 700 ஆக வளர்க்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்
19.5.2019 அன்று  தஞ்சையில் நடைபெற்ற பகுத்தறி வாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது  உரை வருமாறு: ஒரு குறுகிய கால அறிவிப்பு செய்யப்பட்டாலும், பெரியாரியல்  பகுத்தறிவாளர் கழக பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்கின்ற அருமை பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களே,
மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி தோழர் அழகிரிசாமி அவர்களே,
அதேபோல, பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவதற்குப் பொறுப்பும், கவலையும் எடுத்துக் கொண்டு எல்லாத் தோழர்களையும் ஒருங்கிணைத்த பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் அருமை நண்பர் தமிழ்ச்செல்வன் அவர்களே,
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, கழகப் பொருளாளர் அருமை நண்பர் குமரேசன் அவர்களே, தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்களே, மகளிரணி பொறுப்பாளர் தோழர் கலைச் செல்வி அவர்களே, மாணவரணி பொறுப்பாளர் தோழர் கண்மணி அவர்களே
மற்றும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வந்தி ருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலாவது, இந்த முயற்சி ஒரு நல்ல வெற்றியைத் தந்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியோடு நான் உங்களைப் பாராட்டுகின்றேன்.
ஒருங்கிணைக்காதது  பொறுப்பாளர்களுடைய  குற்றமா?
தெரிந்துகொள்ளாதது எங்களுடைய குற்றமா?
ஏனென்றால், அருமையான தோழர்கள்; இவ்வளவு தோழர்கள் இருந்தும் ஏன் பளிச்சென்று தெரியவில்லை என்பதுதான் நமக்கு வியப்பு. புதைபொருள் இலாகாவில், கீழடி அகழாய்வில் தோண்டி எடுத்ததுபோன்று இருக் கிறது. திராவிடர் நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் மிகப்பெரிய அளவில் பழைமை வாய்ந்தவை என்பதைக் கண்டுபிடித்தவுடன் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அதைவிட மகிழ்ச்சியாக இருக்கிறது - இவ்வளவு தோழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். இவ் வளவு பேரையும் ஒருங்கிணைக்காதது தலைவர்களு டைய, பொறுப்பாளர்களுடைய குற்றமா? அல்லது இவ்வளவு பேர் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாதது எங்களுடைய குற்றமா? என்று எனக்கே புரியவில்லை.
எல்லா பகுதிகளிலிருந்தும் இந்தப் பட்டறைக்கு வந்திருக்கிறீர்கள். அதுவும் ஒரு குறுகிய முயற்சியில். இங்கே வந்திருக்கின்ற ஒவ்வொருவரும் மிகத் தெளிவானவர்கள். பொறுப்பாளர்களுக்கான பட்டறை யாகும் இது. பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களின் கூட்டமல்ல; பொதுக்குழு கூட்டமல்ல; முழுக்க முழுக்க பொறுப்பாளர்களாக இருந்து இன்றைக்குப் பயிற்சியா ளர்களாக உங்களை ஆக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு அருமையான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி.
எல்லோரும் பகுத்தறிவாளர்கள்,
எல்லோரும் பெரியாரிஸ்ட்!
இதிலிருந்து ஒன்றை தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். 70 பேர் இங்கே வந்திருக்கிறீர்கள், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த 70 பேரையும் பார்த்தீர் களேயானால், ஒவ்வொருவரும் 10 பேருடைய, 15 பேருடைய, 20 பேருடைய பிரதிநிதி. அப்படித்தான் நான் கருதுகிறேன்.
முதல் பயிற்சியில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயமே அதுதான். நீங்கள் உங்களுடைய ஊருக்குத் திரும்பியவுடன், உடனடியாக செய்யவேண்டிய பணி என்னவென்றால், நம்மிடையே 10 கூட்டுத் தோழர்கள் இருக்கிறார்கள். நம்மில் மேல், கீழே என்றெல்லாம் கிடை யாது. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் செய் பவர்கள். எல்லோரும் பகுத்தறிவாளர்கள், எல்லோரும் பெரியா ரிஸ்ட் இதுதான் அடிப்படையான ஒரு பெரு மையான விஷயமாகும்.
ஆக, நாம் குறைந்தது 10 பேரையாவது அமைப்பில் இணைத்து பலப்படுத்தவேண்டும். அந்தந்தப் பகுதியில் ஏற்கெனவே அமைப்புகள் இருக்கும். உடனடியாகக் கலந் துரையாடல் நடத்தி இந்தப் பணியை செய்ய வேண்டும்.
இரண்டாவதாக மிக முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால், இங்கே 70 பேர் வந்திருக்கிறீர்கள். அதில் மூன்று பேர்தான் மகளிர். இந்த நிலைமை முற்றிலும் மாற்றி அமைக்கப்படவேண்டும்.
சமுதாயத்தில் ஒரு பெரிய மாறுதலை
செய்யவேண்டும்!
நாம் மதவாதிகளைப் பார்க்கவேண்டும்; அவர்கள் கோவிலுக்குச் செல்லுகையில், மூடத்தனமான ஒரு செயலாக இருந்தாலும், இது சரியான உவமையல்ல என்றாலும், உங்களுக்குப் புரிவதற்காகச் சொல்லுகிறேன், மதவாதிகள் எப்படி குடும்பத்தோடு கோவிலுக்குச் செல்லுகிறார்களோ, அதிலும் ஆண்கள் செல்வதைவிட, பெண்கள் அதிகமாகப் போவார்கள். அதேபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுகளுக்குக் குடும்பம் குடும் பமாகச் செல்லுகிறார்கள். வெறும் நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்டதற்கே இதுபோன்று இருக்கிறது என்றால்,  நாம் பகுத்தறிவாளர்களாக இருந்துகொண்டு, சமுதாயத்தில் ஒரு பெரிய மாறுதலை செய்யவேண்டும் என்று நாம் நினைக்கும்பொழுது, நம்முடைய தோழர்கள் குறைந்தபட்சம், அடுத்து கமிட்டிகள் போன்றவைகளில் இதை ஒரு கடமையாகக் கருதவேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திலிருந்து இரண்டு, மூன்று பேராவது பங்கேற்கவேண்டும்
பயிற்சிப் பட்டறைகள் மட்டுமல்லாமல், கூட்டங்கள் நடைபெறும்பொழுதும் அவர்கள் பங்கேற்கவேண்டும். சரி பகுதி பெண்கள் என்று சொன்னால், நம் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நம்முடைய பிள்ளைகள், துணைவியார், சகோதரி என்று வருகிறபொழுது, குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திலிருந்து இரண்டு, மூன்று பேராவது பங்கேற்கவேண்டும். நம்முடைய அமைப்பை அப்படி நீங்கள் பலப்படுத்திவிட்டீர்கள் என்றால், இரண்டு வகையில் லாபம். இயக்கத்திற்கும் லாபம்; அதைவிட உங்களுக்கும் லாபம். எப்படியென்றால், என்னங்க, இவர் எப்பொழுது பார்த்தாலும் கூட்டங்களுக்கோ, கலந்துரையாடல் களுக்கோ சென்றுவிடுகிறரே என்று உங்களுடைய துணைவியாரோ, மகளோ நினைப்பார்கள். ஆனால், இதனுடைய பெருமை என்ன? இதனுடைய லாபம் என்ன? இதனுடைய முக்கியத்துவம் என்ன? இதனால் ஏற்படுகின்ற சிறப்பு என்ன? என்று தெரியாத பெண் களுக்கு, இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொண்டால், பல பேருடைய அறிமுகம் கிடைக்கும். பல பேருடைய உறவுகள் மிஞ்சும்.
அதற்காக தோழர்கள் குடும்பம் குடும்பமாக வர வேண்டும். அது திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி, பகுத்தறிவாளர் கழகமானாலும் சரி - இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம் என்று சொல்வதுபோன்று,
பெண்கள் கட்டாயமாக பங்கேற்கவேண்டும்
மிகத் தெளிவாக செய்யவேண்டிய பணி என்னவென் றால், குடும்பம் குடும்பமாக கலந்துரையாடலில் பங்கேற்க வேண்டும் என்கிற நிலையை நாம் உருவாக்க வேண்டும். பெண்கள் கட்டாயமாக பங்கேற்கவேண்டும். அந்த நிலை வந்தால்தான், நம்முடைய கொள்கையை நிலைக்க வைக்க முடியும். இல்லையென்றால், நம்மோடு சரி என்கிற நிலை வரும்.
அதுமட்டுமல்ல, அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். நம் வீட்டில் மணவிழாக்கள் நடைபெறும், நம்முடைய வீட்டில் இறப்புகள் ஏற்படும் - நல்லது கெட்டது; இன்பம் - துன்பம் எல்லாம் ஏற்படும். இவை எல்லாம் ஏற்படும்பொழுது சில சிக்கல்கள் வரும். பகுத்தறிவாளர்களாக குடும்பத்தையே நாம் ஆக்கிவிட்டோம் என்றால், நம்முடைய அப்பா - அம்மா வைதீர்களாக இருந்தால், அவர்களை விட்டு விடலாம். அவர்கள் எல்லாம் எக்ஸ்பியரி டேட் நெருங்கிக் கொண்டிருக்கின்ற மருந்து மாதிரி. அவர்களைப்பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு மனித உடல்கள் கிடைக்கவில்லை
ஆனால், நாம் அடுத்து வரப் போகின்றவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும். அப்படி மாறினால், பகுத்தறிவாளர் குடும்பத்தில் ஒருவர் இறந்தால், அவரது உடலை மருத்துவக் கல்லூரியில் வழங்கலாம்; சடங்கு சம்பிரதாயங்கள் இல்லை, செலவில்லை. இறந்தாலும் சமுதாயத்திற்கு பகுத்தறிவாளர்கள் பயன்படுகிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம். ஏனென்றால், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு மனித உடல்கள் கிடைக்கவில்லை. ஆகவே, இதுபோன்ற பக்குவத்தை நம் குடும்பத்தாருக்குப் புரிய வைக்கவேண்டும்.
உங்களுடைய துணைவியாரையோ, மகளையோ வீட்டிலேயே விட்டுவிட்டு, நீங்கள் மட்டும் கலந்துரை யாடல் கூட்டங்களுக்கு வருகிறீர்கள். அப்படி அவர்களை  விட்டுவிட்டு வராமல், அவர்களை கொஞ்சம் வற்புறுத்தி, நம்முடைய கலந்துரையாடல் கூட்டங்களுக்கு அழைத்து வாருங்கள். அவர்களை அறிமுகப்படுத்தி வையுங்கள். இதுபோன்ற நிலைகள் வந்தால்தான், பகுத்தறிவாளர்கள் குடும்பம் என்று வரும். குடும்பம் என்று வந்துவிட்டால், குடும்ப உறவுகள் வரும். உறவுகள் வந்தால், அதில் ஏற்படுகின்ற விளைவுகள் உண்டு.
நம்முடைய பலம் எதிரிகளை திகைக்கச் செய்யும்
ஆகவே, முதற்கண் நாம் எல்லோரும் தெளிவாக இருக்கவேண்டிய விஷயம். குடும்பம், குடும்பம், குடும்பம் - கொள்கைக் குடும்பம், உறவுக்குடும்பம் - அதுமட்டுமல்ல, நாம் 10 பேர் பகுத்தறிவாளர்கள் சேர்ந்து ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம் என்றால், அந்த 10 பேரும் 10 குடும்பங்களாக மாறிவிட்டால், அது ஒரு தனி பலமாகும். எந்தக் காரியமாக இருந்தாலும், அந்த 10 குடும்பங்கள் டக்கென்று வந்து நிற்கும் என்ற நிலை வந்தால், அந்த பலம் எதிரிகளை திகைக்கச் செய்யும்.
கான்ஷிராம் தொடங்கிய பாம்செஃப் அமைப்பு
கான்ஷிராம் அவர்கள், பாம்செஃப் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பில் உள்ள வர்கள் எல்லோரும் அரசாங்கத் துறையில் பணியாற் றுபவர்கள். ஆண்டு தவறாமல் அந்த அமைப்பினர் சந்திப்பார்கள். அந்த அமைப்பிலிருந்துதான் கான்ஷி ராமே வந்தார். அவரே ஓய்வு பெற்ற அரசு அதிகாரிதான்.
அந்த அமைப்பின் சார்பில் நடைபெற்ற பல மாநாடுகளுக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். அந்த அமைப்பிலிருந்துதான் அரசியலுக்கு வந்து ஒரு கட்சியை தொடங்கி, பகுஜன் சமாஜ் கட்சி என்று பெயர் வைத்தார். உங்களுக்கெல்லாம் நான் சொல்கின்ற விஷயம் ஆச் சரியமாக இருக்கும். அந்த அமைப்பின் சார்பில் பெங் களூருவில் மாநாடு போடுவார்கள். அவர்கள் எல்லாம் பஞ்சாபில் இருப்பார்கள்; அப்படி இருந்தாலும், அவர்கள் குடும்பம் குடும்பமாக அந்த மாநாட்டில் கலந்துகொள் வார்கள். சுற்றுலா போன்று அந்த வாய்ப்பைப் பய ன்படுத்திக் கொள்வார்கள்.
அந்த அமைப்பு வளர்ந்து, ஒரு கெட்டியான அமைப் பாகி, அதிலிருந்து சிலர் வந்தார்கள். அதிலேயே சில கருத்து மாறுபாடுகள் வந்தன. அது என்னவென்றால், அரசியலுக்கு இந்த அமைப்பு சென்றால், அதனுடைய அடிக்கட்டுமானம் போய்விடும் என்று நினைத்து, அமைப் பாகவே அது இருந்தாலே போதும் என்று நினைத்தார்கள்.
பார்ப்பனர்களை சேர்த்ததால் கோளாறுகள் ஏற்பட்டன
பாம்செஃப் அமைப்பிலிருந்து சிலர் அரசியலுக்குப்  போனார்கள்; பகுஜன் சமாஜ், சர்வ ஜன் ஆகி, அந்த அமைப்பில்  பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஆகி, அதற்குப் பிறகு கோளாறுகள் ஏற்பட்டன.
அந்த பாம்செஃப் அமைப்பைச் சார்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள்.
அதுபோன்றதுதான் திராவிடர் கழகமும். பொதுவாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு, குடும்பம் குடும்பமாக பங்கேற்கி றார் களே, குடும்பம் குடும்பமாக அய்யாவிடம் இருக்கி றார்களே - பெரியாரின் பெருங்குடும்பம் என்று சொல் வதற்கு நாமெல்லாம் பெருமைப்படவேண்டும். அந்தக் குடும்பத்துப் பிள்ளைகள், அந்தக் குடும்பத்துப் பேரப் பிள்ளைகள் என்கிற பெருமையோடு இருக்கின்ற வாய்ப்புகளை முதலில் பகுத்தறிவாளர்களாக இருக்கின்ற நாம் உருவாக்கவேண்டும்.
பகுத்தறிவாளர் கழகத்திற்கான செயல் திட்டங்கள்!
அடுத்ததாக, பகுத்தறிவாளர் கழகம் வேகமாக செயல் படுவதற்காக சில திட்டங்களை வகுத்திருக்கின்றோம். புதிதாக வந்தவர்களுக்கு பல செய்திகளை நினைவூட்ட வேண்டும்.
ரேசனலிஸ்ட் ஃபாரம் என்பதை அய்யா அவர்கள், 1971 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சென்னையில் தொடங் கினார். அதுவும் திராவிடர் கழகத்தில் நேரிடையாக சேருவதற்கு யாருக்கு வாய்ப்பில்லையோ, அவர்களுக் காக ஒரு அமைப்பை உருவாக்கினார், அதுதான் பகுத்தறி வாளர் கழகம்.
ஆர்.எஸ்.எஸை எடுத்துக்கொண்டால், 1925 ஆம் ஆண்டு உருவானது. அப்பொழுது அந்த அமைப்பில் பெண்களுக்கு இடமே இல்லை.
நமக்கு நேர் எதிரான கொள்கைதான் ஆர்.எஸ்.எஸ். கொள்கையாகும்.
திராவிடர் கழகத்தினுடைய கொள்கை என்னவென்று சொன்னால், ஜாதி ஒழிப்பு, பிறவி பேதம் ஒழிப்பு, பெண் ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவு, மூடநம்பிக் கைகளை களைதல், சம வாய்ப்பு, சமுகநீதி, வகுப்புரிமை, அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் என்று எழுதினால்,
இதற்கு நேர் எதிரானது என்னவோ, அதுதான் ஆர்.எஸ்.எஸ். கொள்கையாகும்.
ஆர்.எஸ்.எஸ். கொள்கை என்னவென்று கேட்டால், திராவிடர் கழகத்தின் கொள்கைக்கு நேர் எதிரான கொள் கைகள்தான்.
ஆக, திராவிடர் கழகம் வெளிப்படையானது.
ஆர்.எஸ்.எஸ். ரகசிய இயக்கம்.
திராவிடர் இயக்கம் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி எடுத்தவர்தான் காந்தியாரை சுட்டுக்கொன்ற கோட்சே!
ஆர்.எஸ்.எஸ். வன்முறையை நம்புவது. காந்தியாரை சுட்டுக்கொன்ற கோட்சேகூட அந்த அமைப்பில்தான் பயிற்சி எடுத்தவர். ஆனால், அதை சாமர்த்தியமாக மறுப்பார்கள். 1925 ஆம் ஆண்டில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வருகிறது
1925 ஆம் ஆண்டில்தான் சுயமரியாதை இயக்கம் வருகிறது.
1925 ஆம் ஆண்டில்தான் பொதுவுடைமை இயக்கம் வருகிறது.
ஆக, இந்த மூன்று அமைப்புகளும் ஒரே ஆண்டில்தான் தொடங்கப்பட்டன.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களுக்கு இடம் கிடையாது என்று சொன்னவுடன், பிரச்சினை ஏற்பட்டது. 11 ஆண்டுகள் கழிந்த பிறகுதான், ராஷ்ட்ரீய சேவிகா கமிட்டி என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதிலும் தந்திரமாக அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களுக்குப் பொறுப்பு கிடையாது
ஆர்.எஸ்.எஸ். என்றால், ராஷ்ட்ரிய சுய சேவக் சங்கம் என்பதன் சுருக்கம்தான்.
ராஷ்ட்ரீய சேவிகா கமிட்டி என்றால், அதுவும் ஆர்.எஸ்.எஸ். என்றுதான் வரும். இரண்டும் ஆர்.எஸ்.எஸ்தான். ஆனால், பெயர் வேறுபாடாகத் தெரியும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களுக்குப் பொறுப்பு கிடையாது. ஆனால், திராவிடர் கழகத்தில் மண்டல செயலாளர்களாக, மாநில பொறுப்பாளர்களாக மாவட்டத் தலைவர்களாக பெண்கள் இருக்கிறார்கள்.
நாட்டில் நிறைய பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பழங்குடி மக்கள் என்று சொல்வ தில்லை. வனவாசி கல்யாண் ஆஸ்ரம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். அதாவது, காட்டு மனிதர்கள் என் கிறார்கள்.
ஒருமுறை கருநாடகாவில் உள்ள தலித் தோழர்கள் நடத்திய மாநாட்டிற்கு என்னை அழைத்திருந்தார்கள். இதுபோன்ற பெயர்களை நீக்குவதற்காகவே. வனவாசி என்று சொல்லக்கூடாது. வனவாசி என்றால், காட்டுப்பயல் என்று அர்த்தம். ஆகவே, அதுபோன்ற பெயர்களை நீக்கவேண்டும் என்பதற்காகத்தான் அந்த மாநாடு.
வனவாசி கல்யாண் ஆஸ்ரம் அமைப்பை ஏற்படுத்தி, அந்த சமுதாய மக்களை ஈர்க்கவேண்டும். அவர்களுக்கு சமஸ்கிருதம், அவர்களுக்குப் படிப்பு என்று அவர்க ளுடைய நலனுக்காகப் பாடுபடுவது போன்று காட்டுவது.
அதற்கடுத்தாக, மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு வரவேண்டும் என்று நினைத்து, அகில பாரத் வித்யார்த்தி பரிஷத் - ஏபிவிபி என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
முதலில் சாதாரண அமைப்பு - இரண்டாவது மகளிர் அமைப்பு -
அதற்கொரு துணை அமைப்புப் போன்று, அதற்கடுத்து வனவாசி கல்யாண் ஆஸ்ரம் அமைப்பு, அதற்குப் பிறகு ஏபிவிபி அமைப்பு.
அடுத்ததாக, வெளிநாட்டில் இருக்கின்றவர்களையெல் லாம் ஒன்று சேர்க்கவேண்டும். மத மாற்றங்களைத் தடுக்க வேண்டும் என்று நினைத்து, விசுவ இந்து பரிஷத் அமைப்பை உருவாக்கினார்கள்.
அதற்குப் பிறகு தொழிலாளர்களை எல்லாம் ஒன்று சேர்க்கவேண்டும் என்று சொல்லி, பாரதீய மஸ்தூர் சங் - பிஎம்எஸ் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
இப்படியாக இன்னும் சில அமைப்புகளை உருவாக் கினார்கள். சமஸ்கிருத பாரதி, வித்யா பாரதி, சிஷு பந்தன் என்று நிறைய அமைப்புகளை ஏற்படுத்தினார்கள்.
நம்முடைய அமைப்புகள் ஒவ்வொன்றையும் நீங்கள் பலப்படுத்தவேண்டும்!
எதற்காக இதனை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன் என்று சொன்னால், ஆர்.எஸ்.எசைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, ஒரு மரத்தினுடைய வேர் எப்படி ஆணி வேர், சல்லி வேர் என்று பலமாக இருக்கின்றவோ - அதுபோல நம்முடைய அமைப்புகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையில் நீங்கள் பலப்படுத்தும் பணிகளை செய்தீர்கள் என்றால், அந்தப் பணி நிறைவாக இருக்கும்.
பெரியாருடைய தத்துவங்கள், பெரியாருடைய கொள் கைகள், பெரியாருடைய லட்சியங்கள், பெரியாருடைய வாழ்நாள் பணிகள், பெரியாருடைய இலக்குகள் என்று வரக்கூடிய அளவிற்கு வரும்பொழுது, அந்த வாய்ப்பு களை நாம் நிலைநாட்டி, உலகளாவிய நிலைக்குச் செல்லவேண்டும்.
பிரச்சாரம் என்பது மிகவும் முக்கியம்!
நிச்சயமாக, நம்முடைய இந்தக் காலகட்டம்தான் மிகவும் முக்கியமானது. நான் பல கூட்டங்களில் அடிக்கடி சொல்வதையே இங்கேயும் நினைவூட்டுகிறேன். கொள் கைகளை உருவாக்கியவர்களைவிட, யார் மிகவும் முக்கியம் என்றால், கொள்கையை உருவாக்கியவர்கள் கொடுத்துவிடுகிறார்கள் - கஷ்டப்படுகிறார்கள், எதிர் நீச்சல் அடிக்கிறார்கள் - எல்லாவற்றையும் செய்து அதை நிலைநாட்டுகிறார்கள். ஆனால், அந்தக் கொள்கைகள் பரவவேண்டும். அப்படி பரவுவதுதானே மிக முக்கியம். ஒரு பொருளை ஒருவர் கண்டுபிடித்தால், அந்தப் பொருள் மிகப்பெரிய அளவிற்கு மக்களுக்குப் பயன்பட்டால்தானே நல்லது. ஆனால், அந்தப் பொருளை மார்க்கெட்டிங் இல்லாமல் மக்களுக்குத் தெரியப்படுத்த முடியாதல்லவா! மார்க்கெட்டிங் செய்வது மிகவும் முக்கியம்.
கிறித்துவ மதத்தை எடுத்துக்கொண்டீர்களேயானால், அப்போசல்ஸ் என்று சொல்லக்கூடியவர்கள் இருப் பார்கள். அதேமாதிரி நபிகள் நாயகம். என்னடா, மத உதாரணம் சொல்கிறாரே என்று நினைக்காதீர்கள். ஏனென்றால், அவ்வளவு ஆழமாக அவர்கள் அதை செய்து வைத்திருக்கிறார்கள். அது மனதில் ஊடுருவுகிற அளவிற்கு.
அதனால், நாம் என்ன செய்யவேண்டும் என்றால், மத நம்பிக்கைக்காரர்களின் பிரேமை அப்படியே எடுத்துக் கொண்டு, அதனுள் நம்முடைய சரக்கை வைத்தீர் களேயானால், மிகவும் சுலபமாக இருக்கும்.
ஒரு சிறிய உதாரணத்தை சொல்கிறேன் உங்களுக்கு. திருவிழாக் காலம் என்று கோடைகாலத்தைத்தான் தேர்ந் தெடுத்து இருக்கிறார்கள். ஏனென்றால், கோடை காலத் தில்தான் விடுமுறைக்காக ஊருக்கு வருவார்கள். கோடை காலத்தில்தான் சுற்றுப்பயணம் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள். வெளியூரில் உள்ள அனைவரும் சொந்த ஊருக்கு திருவிழாவிற்கு வருவார்கள். பெருமளவு கூட்டம் சேர்கிறது.
(தொடரும்)
- விடுதலை நாளேடு,7.6.19

புதன், 29 மே, 2019

பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை



வல்லம், மே 28- பகுத் தறிவாளர் கழக பொறுப்பா ளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 2019 மே திங்கள் 18, 19 ஆகிய இரு நாட்களும் தஞ்சாவூர் வல்லத்தில் நடை பெற்றது.

துவக்க நாளன்று காலை 9 மணிக்கெல்லாம் மாநிலம் முழுமையுமிருந்து பொறுப் பாளர்கள் கலந்து கொண்டு பதிவை தொடங்கினார்கள். முற்பகல் நிகழ்வு அறிவித்தபடி காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோபு.பழனிவேல் வரவேற்புரை யாற்றினார். பயிற்சி பட்ட றையின் நோக்கம் பற்றியும், நடைபெற உள்ள வகுப்புகள் பற்றிய முன்னோட்டத்தி னையும் பயிற்சி நாட்களில் பொறுப்பாளர்கள் எப்படி கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன் உரை யாற்றினார்.

முற்பகல் 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புர வலர் தமிழர் தலைவர் ஆசி ரியர் கி.வீரமணி அவர்கள் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்ற ஒவ்வொருவரும் 10 புதிய  அமைப்புகளை உருவாக்கி 700 புதிய அமைப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தாங்கள் சார்ந்துள்ள ஆசி ரியர் அமைப்புகளில் பரப் புரை மேற்கொள்ள வேண் டும் எனவும், பொதுவான வர்களை ஆதரவாளராக மாற்றும் பயிற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். எது நம்மைப் பிரிக்கிறதோ அதை அலட்சியப் படுத்த வேண்டும், எது நம்மை இணைக்கிறதோ அதை பலப்படுத்த வேண்டும். சாதனையாளர்களை ஆங்காங்கு பாராட்டிட தயங் கக்கூடாது.

குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். வடமொழி பெயர்களை தமிழ்ப்படுத்திப் பார்த்தால் அசிங்கமாக இருக்கும். வட மொழிப் பெயர்களை மாற்றம் செய்வதை இயக்க மாகவே செய்யலாம். எழுதக் கூடியவர்கள் எழுதுங்கள். பேச வாய்ப்பு கிடைத்தவர்கள் பேச்சாளர்களாக வாருங்கள். கோபம் ஏற்படவே கூடாது. அன்பு செய்ய வேண்டும். பொதுவானவர்களை கருத்து  தெரிவித்து, கருத்தால் ஒத் திசைய வைத்து ஆதரவாள ராக கொண்டு வர வேண்டும். (சிஷீஸீஸ்வீஸீநீமீ ணீஸீபீ சிஷீஸீஸ்மீக்ஷீ) என சிறப்புரையாற்றினார்கள், பயிற்சியாளர்கள் கேள்விகள் கேட்க தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் பதிலளித்தார்கள். முற்பகல் அமர்வு பகல் ஒரு மணிக்கு நிறைவு பெற்றது.

பிற்பகல் நிகழ்ச்சியில் 2.15 மணி அளவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் "பகுத்தறிவு ஓர் வாழ்க்கை நெறி" என்ற தலைப்பில் உரையாற்றினார். பகுத்தறிவாளர்கள் கழகத் தினை தந்தை பெரியார் தோற்றுவித்ததைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றி யும் பேசினார்.

தொடர்ந்து பேராசிரியர் தேவதாஸ் அவர்கள் பகுத் தறிவாளர் கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், தக்க வைத்தல் பற்றி உரை யாற்றினார்.

தொடர்ந்து திராவிடர் கழகப் பொருளாளர் வீ.கும ரேசன்  அவர்கள் "பகுத்தறி வாளர் கழகம் சிறப்பாக எப்படி செயல்பட வேண்டும்" என்ற தலைப்பில் அமைப் பியல் உரை வழங்கினார். தேநீர் இடைவேளைக்குப் பின் மாலை 4.30 மணி அளவில் மகேந்திரா சிட்டி, இன்ஃபோசிஸ் நிறுவன ஜோஸ்பின் சாந்தி "நேர மேலாண்மை" என்ற தலைப்பிலும், "பேச்சுக்கலை" என்ற தலைப்பிலும் பொறுப் பாளர்கள் நேரத்தை எப்படி சிறப்பாக மேலாண்மை செய்து, வெற்றிகரமான பேச் சாளராக  ஆவது எப்படி என்றும், வெற்றியாளர்கள் பின்பற்றவேண்டியவைகள் பற்றியும் விளக்கி பேசி னார்கள்.  பயிற்சியாளர்களின் கேள்விகளுக்கு விடையளித் தார்கள். பிற்பகல் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு அரங்கத்தில் நிறைவடைந்தது.

இரவு நிகழ்ச்சி மாலை 7 மணிக்கு புல்வெளியில் தொடர்ந்தது. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மேனாள் இணை இயக்குநர் க.பன்னீர் செல்வம் "சாதித்துக் காட்டும் குழுவை உருவாக்குவது எப் படி என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். 8.30 மணிக்கு முதல் நாள் நிகழ்ச்சி நிறை வடைந்த உடன் பயிற்சியா ளர்கள் இரவு உணவுக்கு சென் றார்கள்.

19.5.2019 அன்று இரண் டாம் நாள் நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் பா.ராசு அவர்களின் பகுத் தறிவு பாடலுடன் தொடங் கியது. பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிசாமி "பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் அமைப்பு ரீதியாக செயல்படுவது எப் படி" என்ற தலைப்பில் உரை யாற்றினார். தொடர்ந்து பயிற்றுநர் டாக்டர் கணேஷ்வேலுச்சாமி அவர்கள் "அறிவியல் சந்தே கங்கள்" என்ற தலைப்பில் கணினி திரை வழியே பல்வேறு அரசியல் சந்தேகங் களுக்கு விளக்கம் அளித்து பேசினார். தேநீர் இடை வேளைக்கு பின்னர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், "நமது அணுகுமுறை பற்றியும் அமைப்பாக (நெட் வொர்க்) இணைந்து செய லாற்றுவது பற்றியும்" விளக்கிப் பேசி னார்கள். அவரது உரைக்கு பின்னர் பயிற்சி யாளர்களின் கேள்வி களுக்கு விடையளித்தார்கள். தொடர்ந்து பயிற்சியா ளர்கள், பொறுப்பாளர்கள் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டார்கள். முற்பகல் அமர்வு நிறை வடைந்தது.

மதிய உணவு இடை வேளைக்குப் பின்பு "மக்களை ஈர்ப்பதற்கான தலைமைப் பண்புகள்" என்ற தலைப்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மேனாள் இணை இயக்குநர் தி.க.பன் னீர்செல்வம் அவர்கள் உரை யாற்றினார்கள்.

பங்கேற்ற பயிற்சியாளர் களுக்கு கருத்துக் கேட்பு படிவங்களை மாநிலத் துணைத் தலைவர் கா.நல்ல தம்பி வழங்கினார். பயிற்சி பற்றிய கருத்துக் களை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்கள் ராயகிரி கே.டி.சி.குருசாமி, அண்ணா சரவணன், ச.மணி வண்ணன், அ.தா. சண்முக சுந்தரம், அ.சரவணன், காரைக்குடி மு.சு. கண்மணி, திருவண்ணாமலை பா.வெங்கட்ராமன், வட சென்னை கோவி.கோபால், மறைமலை நகர் அ.சிவக் குமார், மதுக்கூர் ஆ.இரத் தினசபாபதி, கல்லக்குறிச்சி ம.சுப்பராயன், புதுச்சேரி கு.இரஞ்சித்குமார், தஞ்சாவூர் ச.அழகிரி, உசிலம்பட்டி அ.மன்னர்மன்னன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் ஆத் தூர் வா.தமிழ் பிரபாகரன், லால்குடி மு.செல்வி, திருச்சி மதிவாணன் ஆகியோர் வழங்கினார்கள்.

பயிற்சியாளர்களுக்கு பெரியார் மணியம்மை பல் கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.வேலுச்சாமி சான்றிதழ்களை வழங்கி பாராட்டுரை வழங்கினார். பயிற்சியாளர்களுக்கு  சான்றிதழுடன் இரண்டு நூல்கள் நினைவுப் பரிசாக வழங் கப்பட்டன. பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப் பாளர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார். மொத்தம் 72 பேர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 28 .5 .2019

பகுத்தறிவாளர் கழகப் பயிற்சிப் பட்டறையில் பங்கு பெற்றோர்

தஞ்சை வல்லத்தில் மே மாதம் 18, 19 தேதிகளில்  நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் களுக்கான பயிற்சிப் பட்டறையில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்கள், பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்கள் பயிற்சியாளர்கள் உள்ளனர்.

 - விடுதலை நாளேடு, 24 .5 .2019

திங்கள், 20 மே, 2019

பகுத்தறிவாளர் கழகப் பயிற்சிப் பட்டறை தொடங்கியது



தஞ்சை வல்லத்தில் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கான 2 நாள் பயிற்சிப் பட்டறை இன்று (18.5.2019) தொடங்கியது. பகுத்தறிவாளர் கழகப் புரவலர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவாளர் கழகப்  பொதுச் செயலாளர் இரா.தமிழ்செல்வன்  மற்றும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.



-  விடுதலை நாளேடு, 18.5.19

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

டில்லியில் சமூகநீதிக்கான கி.வீரமணி விருது: பணியின்போதும், ஓய்வுக்குப் பிறகும் சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும் பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்களுக்கு வழங்கப்பட்டது



புதுடில்லி, பிப்.6 புதுடில்லியில் அரசமைப்புச் சட்ட மன்றத்தில் (Constitution Club) உள்ள துணை சபாநாயகர் (Deputy Speaker) அரங்கில் 2018 ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது' வழங்கும் விழா நடைபெற்றது. அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் பெரியார் பன்னாட்டு மய்யம் ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதிக்காகப் பாடுபட்ட சான்றோர், போராளிகள், தலைவர்களுக்கு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கி வருகிறது.

1996 ஆம் ஆண்டு விருது வழங்குவது தொடங்கப்பட்டு, இதுவரை 2018 ஆம் ஆண்டுக்கான விருதுவரை மொத்தம் 10 பெருமக்களுக்கு சமூகநீதி விருது வழங்கப்பட்டுள்ளது. நாடு, மொழி, இனம் பாகுபாடு எதுவும் இன்றி, இந்தியாவில், தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராட்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சார்ந்த தலைவர்களுக்கும், சிங்கப்பூர், மியான்மா, குவைத், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சமூகநீதிக்குப் பங்காற்றிய பெருமக்களுக்கும் இதுவரை விருது வழங்கப் பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான விருது மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி சமூகநீதி வழங்குவதற்கு அளப்பரிய பங்களித்த ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

புதுடில்லியில் 5.2.2019 அன்று பிற்பகல் நடைபெற்ற சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு, இந்த விருதினை 2009 ஆம் ஆண்டு வழங்கப் பெற்றவரும், கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவரும், கருநாடக மாநில அரசின் மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்ம குமார் தலைமை வகித்தார்.

விருதினை நிறுவிய பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் சமூகநீதிக்கான வீரமணி விருது நிறுவப்பட்ட வரலாறு, விருது வழங்கப் படுவதன் நோக்கம்பற்றி எடுத்துக் கூறி, 2018 ஆம் ஆண்டுக்கான விருதினை பி.எஸ்.கிருஷ்ணனுக்கு வழங்கப்படுவதன் சிறப்புப்பற்றி உரையாற்றினார்.

விருது வழங்கல்




ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.  அதிகாரி பூபீந்தர்சிங் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.


2018 ஆம் ஆண்டு சமூகநீதிக்கான கி.வீரமணி விரு தினை' (K.Veeramani Award for Social Justice) பணி நிறைவு பெற்ற, மத்திய அரசின் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குப் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் விருதுக் குழுவின் சார்பாக டாக்டர் சோம.இளங்கோவன் வழங்கினார்.

விருது மடலினையும், விருதுத் தொகையான ரூ.1 லட்சத்திற்கான வங்கி வரைவோலையும் வழங்கப்பட்டது. விருது வழங்கப்பட்டபொழுது பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் இருவருக்கும் சேர்த்து சிறப்பு செய்யப்பட்டது. அவர்களது மகளும் உடன் இருந்தார். விருது வழங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

விருது வழங்கும் நிகழ்வின் சிறப்புரையினை மத்திய அரசின் மேனாள் செயலாளரும், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் பூபீந்தர்சிங் வழங்கினார்.

தமிழர் தலைவரின் பாராட்டுரை


நிறைவாக விருது பெற்ற பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சமூகநீதிக்காக ஆற்றிய பணிபற்றி எடுத்துக்கூறி, பாராட்டித் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

அவர் தமது பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:

சமூகநீதிக்கான விருதினை பெரியார் பன்னாட்டு மய்யம், என்னுடைய பெயரில் நிறுவிய நேரத்தில், நான் எனது பெயரில் விருது அமையப் பெறுவது வேண்டாம்; சமூகநீதிக்காக களம் அமைத்து 95 ஆண்டுகாலம் போரா டிய தந்தை பெரியாரது பெயரில்தான் விருது அமையப் பெறவேண்டும் என அழுத்தமாக எடுத்துக் கூறினேன்.

தந்தை பெரியார் போற்றி காத்து வந்த சமூகநீதிச் சுடரை, அவர்தம் கொள்கையினை, அவரது காலத்திற்குப் பின் யார் எடுத்துச் செல்லுகிறார்கள் என்பதை உலகினர் அறிந்து கொள்வதன் பேரில் ஓர் அடையாளமாக எனது பெயரில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான டாக்டர் சோம.இளங்கோவன் மற்றும் டாக்டர் இலக்குவன்தமிழ் ஆகியோர் கூறினர். விருது பெயரில் தந்தை பெரியாரும், அவர் ஏற்றிப் பாதுகாத்திட்ட சமூகநீதிக் கொள்கையும் உள்ளடக்கம் என விளக்கமளித்தனர்.



சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழாவில் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள்,  பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர் (டில்லி, 5.2.2019).


1970 களில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணியினை மண்டல் அவர்களுக்கு மத்திய அரசு வழங்கியது. நாடெங்கும் பயணம் செய்து குழுவின் தலைவர் மண்டலும், குழுவின் உறுப்பினர்களும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கருத்தறிந்து, உண்மை நிலைபற்றி ஆய்வு செய்து 1980 ஆம் ஆண்டில் அறிக்கையை அளித்தனர். அரசிடம் அளிக்கப்பட்ட மண்டல் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையினைப் பிரசுரிக்க, பலவிதமான தடைகளை அதிகார வர்க்கத்தினர், அரசியல்வாதிகளில் உயர்ஜாதியினர் ஏற்படுத்தினர். பெரியாரின் இயக்கம்தான் மண்டல் குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட நாடு தழுவிய அளவில் 42 போராட்டங்களையும், 16 மாநாடுகளையும் நடத்தியது.  1990 ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமரானபொழுதுதான் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த சமயம் அதிகார நிலையில்  அரசின் செயலாளராக இருந்து நிலவி வந்த நடைமுறைக்கான தடைகளைக் களைந்து பரிந்துரைக்கு ஆதரவாக இருந்து சமூகநீதிக் கொள்கைபற்றிய புரிதலுடன், அவசியம் கருதி உறுதுணையாக இருந்தார்- இந்த நிகழ்வின் விருதாளர்  பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். பி.எஸ்.கிருஷ் ணன் அவர்களின் பங்களிப்பு இல்லையெனில், மண்டல் பரிந்துரைகள் நடைமுறையாக்கம் காணுவது அதிகார நிலையிலேயே தடைபட்டு தாமதமாகி இருக்கும். மண்டல் பரிந்துரைகள் வெளிச்சம் காண உதவியாக  இருந்தார் - பணி நிறைவு பெற்ற நிலையிலும் சமூகநீதிப் பணிகளில் அக்கறைகாட்டிப் பாடுபட்டு வருபவர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினர் மேம்பாட்டுக்காக இன்றளவும் பாடுபட்டு வருகிறார். சமூகநீதிக்கான அறைகூவல்கள் எழும்பொழுதெல்லாம் உரிய வகையில் விளக்கமளித்து, தனது அதிகார வர்க்கப் பணியில் கிடைக்கப் பெற்ற அனுபவங்கள் வாயிலாக உண்மை நிலையினை உணர்த்தி வருகிறார். தற்பொழுது மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள உயர்ஜாதியினரில் ஏழை(?)களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடுபற்றிய கருத்தினையும் கூறி, இட ஒதுக்கீட்டுக் கோட்பாடு ஒடுக்கப்பட்டோருக்கான கோட்பாடு; உயர்ஜாதியினருக்கானது அல்ல என்று குரல் கொடுத்து வருகிறார். இப்படி ஒடுக்கப்பட்ட மக் களுக்காகப் பாடுபட்டுவரும் பி.எஸ்.கிருஷ்ணன் முற்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர். அப்படிப்பட்டவரின் ஓய்வு என்பது தனது அரசுப் பணிக்குத்தான், தான் குரல் கொடுத்துவரும் சமூகநீதிக் கொள்கைக்கு அல்ல என்பதாகும். உடலால் சற்று முதுநிலை அடைந்தாலும், உள்ளத்தால் இளைஞரைப்போல சமூகநீதிக்காகப் பணியாற்றிவரும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களைப் போற்றிப் பாராட்டுகிறோம். அவரது பணி தொடர்க என வாழ்த்துகிறோம்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்படும் விழா விற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங் கோவன், து.ராஜா, அரிபிரசாத் மற்றும் சமூகநீதிக்கான வழக்குரைஞர் சங்கத்தின் நிர்வாக அறக்கட்டளையாளர் - உயர்நீதிமன்ற முதுநிலை வழக்குரைஞர் சுப்பாராவ், வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், மத்திய அரசின் மேனாள் உயரதிகாரிகள், டில்லி மற்றும் ஜவகர்லால் நேரு பல் கலைக் கழக மாணவர்கள், பேராசிரியப் பெருமக்கள், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த திராவிடர் கழக வழக்குரைஞர்கள், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் எனப் பலதரப்பட்டோரும் வருகை தந்திருந்தனர். வடமாநிலத்தில், டில்லி தலை நகரில் சமூகநீதிபற்றிய ஒரு விழிப்புணர்வு, இன்றைய பொருத்தப்பாடுபற்றிய விளக்கும் நிகழ்ச்சியாக சமூகநீதிக் கான கி.வீரமணி விருது வழங்கிடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சமூகநீதி விரு தாளரும், செயல்பாட்டாளருமான கோ.கருணாநிதி நன்றி கூறி நிறைவு செய்தார்.

- விடுதலை நாளேடு, 6.2.19

பொதுத் துறைகளில் பணிபுரிவோர் மத அடையாளங்களை கொண்டிருக்கக்கூடாது

சுவிட்சர்லாந்தில் மதச்சார்பின்மைக்கான சட்டம்  பொதுமக்கள் வாக்கெடுப்பில் 55 சதவிகிதம் ஆதரவு




2012-2016 ஆம் ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி ஜெனீவாவில் மதமற்றவர்கள் 38 விழுக்காடு, ரோமன் கத்தோலிக்கர்கள் 35 விழுக்காடு, புரோட்டஸ்ட்ன்ட் 10 விழுக்காடு, பிற கிறித்தவ பிரிவு 6 விழுக்காடு, முசுலீம்கள் 6 விழுக்காடு, பிற மதத்தவர்கள் 6 விழுக்காடு உள்ளனர்.


ஜெனீவா, பிப்.12 சுவிட்சர்லாந்து நாட்டில் அரசுத் துறைகளில் நியமிக்கப்படும் அலுவலர்கள், பொதுத் துறைகளில் பணியாற்றுவோர் எவரும் எந்தவித மத அடையாளங்களையும் கொண்டிருக்கக் கூடாது.மதஅடையாளச்சின்னங்கள், மத உடைகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில்மதச்சார்பின்மைக்கானசட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.10.2.2019அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 55 விழுக் காட்டுக்கும் மேல் வாக்குகள் சட்டத்துக்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப்உள்ளிட்டமதஅடையாளங் களைவெளிப்படுத்துகின்றஉடைகளை பள்ளிகளில்  ஆசிரியர்கள் அணிந்திருக்கக் கூடாதுஎன்று ஜெனீவாவில் ஏற்கெனவே தடை போடப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மக்களிடையே நேரடியாக தொடர் பிலுள்ள பொதுத்துறை ஊழியர்கள் அனைவரும் இப்புதிய சட்டத்தின்படி, மத அடையாளச் சின்னங்கள் மற்றும் மத அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய உடைகளை உடுத் தக்கூடாது என்று அச்சட்டத்தில் கூறப்பட் டுள்ளது.

இசுலாமிய மற்றும் கிறித்தவ மத நிறுவனங்கள் இச்சட்டத்துக்கு எதிராக களமிறங்கனாலும்,சுவிட்சர்லாந்து நாட் டின் புகழ்பெற்ற ஜனநாயக முறையில் மக்களே நேரடியாக வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். அந்த வகையிலேயே 55 விழுக்காட்டினர் மதசார்பற்ற சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ள னர்.

சுவிட்சர்லாந்துநாட்டின் அரசமைப் புச்சட்டத்துக்குமாறானதாகவும்,அய் ரோப் பியசமூகத்தில் மனித உரிமை களுக்குஎதிரானதாகவும்  புதிய சட்டம் உள்ளதாக பசுமைக் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அலுவலர் சபைன் தைகேமவ்னின் கூறுகிறார்.  நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றார். இவர் முசுலீம் பெண்கள் அணிகின்ற முகத்தை மூடுகின்ற உடையை அணிந்தவர்.

பசுமைக்கட்சி, பெண்ணிய அமைப் புகள், முசுலீம் அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் மதச்சார்பற்ற சட்டத்துக்கு எதிராக உள்ளன. பாகுபாடுகளுடன், இசு லாமிய எதிர்ப்புணர்வுடன் புதிய சட்டம் இருப்பதாகவும், குறிப்பாக முகத்தை மூடுகின்ற பெண்களுக்கு எதிராக உள்ளதாக எதிர்ப்பாளர்கள் கூறு கின்றனர்.

1907ஆம் ஆண்டிலிருந்து சுவிட்சர் லாந்து நாட்டில் நடைமுறையிலுள்ள அரசமைப்புச் சட்டத்தில் தற்போது திருத்தம்மேற்கொள்ளப்பட்டு,மதச் சார்பற்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்துநாட்டில்நிறைவேற் றப்பட்டுள்ள மதச்சார்பற்ற சட்டம் குறித்து அரசுடன்  மத அமைப்புகள்  விவாதிக்கலாம். பொது இடங்களில் மதத்தை வெளிப்படுத்துவோர் எண் ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான ஒத் துழைப்பதற்கான நடவடிக்கையை மேற் கொள்ளலாம் என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.இதன்மூலம்,மதநம் பிக்கையாளர்கள்மற்றும்மதநம்பிக்கை இல்லாதவர்கள் குறித்து அரசமைப்புச்சட்டம் கூறுகின்ற  மதம் குறித்த உரிமைகள், வரையறைகள் குறித்து விளக்கமளிக்க உதவும் என்கின்றனர் மதச்சார்பற்ற சட்டத்தை ஆதரிக்கும் தரப்பினர்.

-  விடுதலை நாளேடு, 12.2.19

புதன், 6 பிப்ரவரி, 2019

டில்லி பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை


"தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் ஆழ்கடல் போன்றது உயர்வு - தாழ்வினை நீக்கி மானுடத்தை மாண்புறச் செய்வது!''

டில்லி பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை




புதுடில்லி, பிப்.5 டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை ஏற்பாடு செய்த சிறப்புக்  கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்'' எனும் தலைப்பில் ஆழமானதொரு உரையினை ஆற்றினார்.

அன்று (23.11.1946) சேலம்' நகராட்சி கலைக் கல்லூரியில் தத்துவ விளக்கம்' எனும் தலைப்பில் தந்தை பெரியார் ஆழமானதொரு உரையாற்றினார். இன்று (4.2.2019) டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்'' எனும் தலைப்பில் பெரியார்தம் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் ஆசிரியர்  ஆழமானதொரு விளக்க உரையினை வழங்கினார்.

டில்லி பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தத்துவத் துறையின் பேரா சிரியர் பி.கேசவகுமார் தலைமை வகித்தார். முனைவர் ஆயிசா கவுதம் வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

டில்லி பல்கலைக் கழக மாணவர்கள், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள், சட்டம் பயிலும் மாணவர்கள் மற்றும் பல துறை சார்ந்த பேராசிரியப் பெரு மக்கள் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் தமிழர் தலைவர் உரையினை செவிமடுத்தனர்.

மேலும் கூட்டத்தில்  கருநாடக மாநில மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்மகுமார் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் தமிழர் தலைவரது உரையினைக் கேட்க வருகை தந்திருந்தனர். ஏறக்குறைய 70 நிமிடங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்பற்றி விளக்க உரையாற்றினார். அதற்கடுத்து 20 நிமிடங்கள் வருகை தந்தோரின் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் விடையளித்தார்.

தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்ட சில செய்திகள்:



தந்தை பெரியார் தமது தொடக்க நிலைக் கல்வியைக் கூட முடிக்காதவர். சுயசிந்தனையாளர். அந்த சிந்தனைகள் இன்று பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களையும் தாண்டி கற்றறிந்த சான்றோர் மத்தியில் பேசப்பட்டும், ஆய்வு செய்யப்பட்டும் வரும் நிலை இன்று உருவாகி உள்ளது. பெரியாரது குடும்பம் மத நம்பிக்கை, சடங்குகளைக் கடைப்பிடித்து பழுத்த கடவுள் நம்பிக்கையாளர்கள் உள்ள குடும்பம் ஆகும். அத்தகைய குடும்பத்தில் அந்த நம்பிக்கையிலிருந்து விலகி நின்று அதன் பாதிப்பு தனது செயல்களில் இல்லாதபடி இயல்பாகவே தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

மனித சமுதாயம் ஏற்றத் தாழ்வின்றி சமத்துவமாக வாழவேண்டும்; எல்லோருக்கும் எல்லாம்' என்பதாக இருக்கவேண்டும் எனும் எண்ணங்கள் சிறு வயதிலிருந்தே  அவரிடம் தென்படத் தொடங்கியது. பிறப்பின் அடிப் படையில் மனிதர்கள் பாகுபடுத்தப்பட்டு, ஜாதி அடையாளத்துடன் இழிவுபடுத்தப்படுவது பெரியாரது மனத்தில் ஆழமாக பதிந்துவிட்டது. தொடக்கக் கல்வி பயின்ற காலத்தில், தாகத்திற்குத் தண்ணீர் வேண்டி, உயர்ஜாதி குடும்பத்திடமும், தாழ்த்தப்பட்ட ஜாதி குடும் பத்திடமும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அவர் பாகுபாட்டுடன் நடத்தப்பட்ட விதம் பின்னாளில் சுயமரி யாதைத் தத்துவத்தை மானுட குலத்திற்கே வழங்கிட வைத்தது. எதையும் ஏன்? எதற்கு? யாரால்?' எனும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்ந்து உண்மை நிலையினை அறிந்து கொள்ளும் உளப்பாங்கினை அவரிடம் உருவாக வைத்தது. 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என எளிமையாக, அழகாக அந்த நேரத்தில் ஓர் ஆழமான தத்துவ வெளிப்பாட்டை மானுட குலத்திற்கு வழங்கிட வைத்தது. சுயமரியாதையும் (மானமும்), பகுத்தறிவும் (அறிவும்) ஒவ்வொரு மனிதருக்கும் உண்மையான அழகை வழங்கிடும் தன்மை வாய்ந்தது.' இதை உணராத நிலையில்தான் மனிதர்களிடம் உயர்வு - தாழ்வு நிலை ஏற்பட்டு, மனிதரை மனிதர் இழிவுபடுத்திடும் நிலை, அடக்குமுறை, அடிமைப்படுத்தி வைக்கும் சுரண்டல் நிலை உருவானது.

இந்த மாபெரும் உலகளாவிய பொருத்தப்பாடு கொண்ட மனிதநேய தத்துவத்தை வெறும் அறிவுசார் கூற்றாக மட்டும் பெரியார் வழங்கிடவில்லை. அதனை மனிதரிடம் உணரச் செய்து அவர்களை மேம்படச் செய்வதற்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். அத்தகைய பிரச்சாரம் பரந்துபட்ட அளவில் நடைபெறவேண்டும். தனது காலத்திற்குப் பின்பும் தொடர்ந்திடவேண்டும் எனக் கருதி அதற்காக ஓர் அமைப்பினை உருவாக்கினார். காரணம், பல நூற்றாண்டுகள் மனிதரிடம் நிலவி வரும் உயர்வு - தாழ்வு பெரும்பாலான உழைக்கும் மக்களை அடிமைப்படுத்திடும் நிலை ஒரு மனிதரது வாழ்நாள் காலத்தில் மாறிவிட முடியாது. சமூகத்தில் நிலவிடும் அடக்குமுறையினை பாதுகாத்து வரும் ஆதிக்கவாதிகள் அவ்வளவு எளிதாக மாறுபவர்கள் அல்ல; ஒவ்வொரு மனிதனும் சுயமரியாதை உணர்வும், பகுத்தறிவினைப் பயன்படுத்தும் நிலை உருவாகும்பொழுதுதான் அவர்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும் என்பதால், இயக்கம் சார்ந்த செயல்பாட்டை போராட்டம், பிரச்சாரம் என்ற வழிமுறைகளில் வன்முறைக்கு இடமின்றி அமைத்துக் கொண்டார்.

இந்த நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அரசியல் விடுதலை' பெறுவதைவிட, முன்னுரிமை பெறவேண்டியது சமூக விடுதலை' எனக் கருதியதால், சமத்துவம், ஒடுக்கப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் என நடைமுறை காணவேண்டும் என்ற நோக்கில்தான் 1919 இல் காங்கிரசு கட்சியில் பெரியார் சேர்ந்தார். தனது எதிர்பார்ப்பு நிறைவேறாது என அவருக்குக் கிடைத்த அனுபவங்களினால் 1925 இல் காங்கிரசிலிருந்து வெளியேறினார்.

தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்திட தனியாக அமைப்பினை உருவாக்கினார். சுயமரியாதை இயக்கம் என தொடக்கக் காலத்தில் அழைக்கப்பட்டாலும், தனது பிரச்சார வல்லமையால், விடா முயற்சியால் அந்த அமைப்பு மாபெரும் இயக்கமாக  - சுயமரியாதை இயக்கமாக உருவெடுக்க கடுமையாக உழைத்து பெரியார் சமுதாயப் பணி ஆற்றினார்.

சமூகநீதியை முன்னெடுத்து, பார்ப்பனர் அல்லாத இயக்கமாக உருவான நீதிக்கட்சி அன்றைய சென்னை ராஜதானியில் 1920ஆம் ஆண்டில் ஆட்சியில் அமர்ந்தது. தந்தை பெரியார் காங்கிரசுக் கட்சியில் வலியுறுத்தி, நடைமுறைப்படுத்த முடியாத 'வகுப்புவாரி உரிமை" 1928ஆம் ஆண்டு அரசாணையாக உருவானது. இந்த நிலை ஆட்சியில் உள்ளோருக்கு ஏற்பட்டதற்கு தந்தை பெரியாரின் பிரச்சாரமும் முக்கிய காரணமாக இருந்தது. ஆட்சி, அதிகாரம் இவற்றில் இருந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் தந்தை பெரியாரிடம் அறவே இல்லை. ஆட்சியில் உள்ளோருக்கு அழுத்தம் அளித்து, மக்களிடம் தனது கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டி, அதன் மூலம் ஆட்சியில் உள்ளோரை சமூகநீதித் தளத்தில் நெறிப்படுத்துவதை தந்தை பெரியார் தமக்கான அணுகுமுறையாகக் கடைப்பிடித்து வந்தார். இன்றளவும் அவர் ஏற்படுத்திய சுயமரியாதை இயக்கம், பின்னாளில் நீதிக்கட்சியையும் சேர்த்துக் கொண்டு, 1944இல் "திராவிடர் கழகமாக" இன்றுள்ள அமைப்பு அடையாளத்துக்கு வந்தது.

முதல் அரசமைப்புத் திருத்தச் சட்டம்




டில்லியில் தமிழர் தலைவர் அவர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, ரவிவர்மகுமார், கோ. கருணாநிதி மற்றும் வழக்குரைஞர்கள் சந்தித்தனர். கழகப் பொருளாளர் வீ. குமரேசன் உடனுள்ளார். (4.2.2019)


'நாடு அரசியல் விடுதலை பெற்று கல்வி, வேலை வாய்ப்புகளில் சமத்துவ நிலை வர வேண்டும்' என்ற இயக்கத்தில் நடைமுறையில் இருந்து வந்த "வகுப்புரிமை ஆணை" செல்லாது; அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத் தப்படும் 'பாகுபாடுபடுத்தல் கூடாது' எனும் நெறிக்குப் புறம்பானது என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. உடனே, அன்றைய சென்னை மாகாணத்தில் - கேரளா, கருநாடகா, ஒருங்கிணைந்த ஆந்திரா ஆகியவற்றில் சில பகுதிகளை  உள்ளடக்கிய தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி, மாபெரும் போராட்டம் நடத்தி, மத்தியில் ஆட்சி புரிந்தவர்களின் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தின் மூலம் 'வகுப்புவாரி பிரதிநிதித்துவம்" என்பது 'இடஒதுக்கீடு' எனும் நிலையில் தொடர்ந்திட முடிந்தது. விடுதலை பெற்ற இந்தியா முழுமைக்கும் 'இடஒதுக்கீடு' நடைமுறையில் வர வழிவகுக்கும் அரசமைப்புச் சட்ட முதல் திருத்த விதிகள் தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தின் மூலமாகத்தான் ஏற்பட்டது. தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின்னர் அவரது இயக்கம், ஒடுக்கப்பட்ட வகுப்பினரான பிற்படுத்தப்பட் டோருக்கு 'இடஒதுக்கீடு' நாடு தழுவிய அளவில் மத்திய அரசுப் பணியில் கிடைப்பதற்கு வழி அமைத்தது. மண்டல் குழு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் அதனைத் தூசு தட்டி வி.பி. சிங் பிரதமராக இருந்த பொழுது பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு முதல் முறையாக நாடு தழுவிய அளவில் மத்திய அரசுத் துறைகளில் கிடைத்திட 'திராவிடர் கழகம்' எடுத்த முயற்சிகள் பெரிதும் காரணமாக அமைந்தது. 'தந்தைபெரியாரின் சமூகநீதிக் கொள்கைகள்' நடைமுறைக்கு வருகின்றது என வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் பிரகடனம் செய்தார்.  சமத்துவம் என்பது கல்வி, வேலை வாய்ப்புகளில் மட்டுமல்ல, தனி மனித கொள்கைகளிலும், சமுதாய நிகழ்ச்சிகளிலும் ஏற்பட வேண்டும் என சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்தினை தந்தை பெரியார் கடுமையாகப் பிரச்சாரம் செய்தார்.

'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்'


கோயில்களில் உயர்ஜாதியினருள் பார்ப்பனர் மட்டும் அர்ச்சகர் என்பது பாகுபாட்டின் ஒரு அம்சம். மற்ற 'பக்தன் தொட்டால் தீட்டாகிவிடும்' என்ற நிலை சமத்துவத்துக்கு எதிரான நிலை எனக் கருதி, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்' என  அதற்காகப் போராட்டம் நடத்தினார் தந்தை பெரியார். ஆட்சி மாற்றங்கள், அரசு கொண்டு வந்த ஆணை மீது நீதிமன்றத்தில் முறையீடு என பல தடைகளைத் தாண்டி  அண்மையில் நடைமுறைக்கு வந்தது. உரிய ஆகம பயிற்சிபெற்ற பார்ப்பனர் அல்லாதார், சமூகத்தின் ஆயத்தத்தில் உள்ளோர் அர்ச்சகராக கேரளா, தமிழ்நாடு கோயில்களில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

இப்படி சமூக இழிவுகளை தீண்டாமை (Untouchability) பாராமை (Unseeability) பொருண்மை (Unapproachability) என அனைத்துத் தளத்திலும் பாகுபாட்டை ஒழித்திடும் மகத்தான பணியில் அமைந்த முதல் சட்ட வெற்றியினை தந்தை பெரியார் தனது வாழ்நாளிலேயே காண முடிந்தது.

தந்தை பெரியாருக்குக் கிடைத்த சிறப்புகள்


சுயமரியாதை பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி சமுதாயத்தில் ஓர் அமைதிப் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியாருக்கு இந்திய அரசு அவரது பிறந்தநாள் நூற்றாண்டில் (1879-1979) சிறப்பு அஞ்சல் தலையினை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. பெரியாரது 125ஆம் பிறந்த நாளில் இந்திய அரசு சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட்டு பெரியார்தம் பெருமைக்குச் சிறப்புச் சேர்த்தது. உலகளவிய பன்னாட்டு அமைப்பினை அய்க்கிய நாடுகள் சங்கத்தின் பிரிவான யுனெஸ்கோ அமைப்பு 1970-இல் தந்தை பெரியார் உயிரோடு இருந்த காலத்திலேயே "தென் ஆசியாவின் சாக்ரடீஸ்' புத்துலக தீர்க்கதரிசி' என விருது வழங்கி கவுரவித்தது.


தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவத்தால் மானுடம் முழுமையும் பயன் பெறும் என்பதை 'மண்டைச் சுரப்பை உலகு தொழும்' என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இலக்கியமாக்கினார். இன்று அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, குவைத், மலேசியா, சிங்கப்பூர், மியான்மா எனப் பல நாடுகளிலும் பெரியாரது சுயமரியாதைத் தத்துவம் பல்கிப் பெருகி போற்றப்பட்டு வருகிறது. 2017இல் ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. 2019 செப்டம்பரில் அமெரிக்கா - மேரிலெண்ட் மாண்ட்கேரியர் கல்லூரியில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பன்னாட்டு இரண்டாம் மாநாடு நடைபெற உள்ளது.

மனித நேய வரலாற்றில் 21ஆம் நூற்றாண்டும், வரும் நூற்றாண்டுகளும் பெரியாரது சுயமரியாதைத் தத்துவத்தின் பல்வேறு பரிமாணங்களில் பயன்பெற முடியும். பெரியார் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், அவரது சமுதாயப் பணி, இந்நாடு தழுவிய அளவில் நிகழ்ந்திருந்தாலும் அவரது 'சுயமரியாதைத் தத்துவம்" உலகளாவிய அளவில் மானிடரை நெறிப்படுத்த வல்லது. பெரியார் வாழ்க! சுயமரியாதைத் தத்துவம் பரவிடுக! பகுத்தறிவுப் பயன்பாடு செழுமையாக அமைக!

இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் நன்றி நவிலலை சந்தீப் யாதவ் வழங்கினார்.

வருகையாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு தமிழர் தலைவர் விளக்கமாக விடை அளித்தார். தமிழர் தலைவர்
-  விடுதலை நாளேடு, 5.2.19